பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் சுதந்திரமாக கருத்துக்களை முன்வைத்த பின்னர், அவரை தாக்க முயற்சிப்பதென்றால், ஒளிந்து இரகசியமாக பாராளுமன்றத்தை விட்டு வெளியேற நேர்கின்றது என்றால், சபையை விட்டு வெளியேற சபாநாயகர் செல்லும் கதவை பயன்படுத்த வேண்டியுள்ளது என்றால், தமது வாகனங்களை விட்டு வேறு வாகனங்களில் வெளியேற நேர்ந்துள்ளது என்றால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை என்பதும், அவர்கள் நிலைமை அச்சுறுத்தலில் உள்ளது என்பதையுமே இது வெளிப்படுத்துகின்றது.
இந்த சூழல் உருவாக சபாநாயகரின் பொறுப்பற்ற வழிநடத்தலே காரணம் என்பதை சபாநாயகரிடத்திலேயே சுட்டிக்காட்டிய ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, எதிர்க்கட்சியினருக்கு எதிரான அச்சுறுத்தல் குறித்து உடனடியாக தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (6) இடம்பெறவிருந்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, சுற்றுலாத்துறை அமைச்சு, நகர அபிவிருத்தி கழிவுப் பொருட்களை அகற்றுதல் மற்றும் சமுதாய துப்புரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சு, கரையோர பாதுகாப்பு மற்றும் தாழ் நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு,விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தை நடத்த இணங்கியிருந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சியினர் சபை அமர்வுகளை புறக்கணித்த காரணத்தினால் விவாதம் கைவிடப்பட்டது,
இந்நிலையில் எதிர்க்கட்சியினரின் நியாயமான கோரிக்கை குறித்து சபையில் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி கருத்துக்களை முன்வைத்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் (ஜே.வி.பி) அனுரகுமார திசாநாயக கூறுகையில்,
பாராளுமன்றத்தில் நடந்துகொள்ளும் விதம், உரையாற்றும் முறைமை, முரண்பாடுகள் ஏற்படும் விடயங்கள் குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்நிலைமையில் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றையதினம் சபை அமர்வுகளில் பங்கேற்கவில்லை. அது குறித்து முறையான அறிவிப்பொன்றையும் அதற்கான காரணத்தையும் சபாநாயகரிடம் முன்வைத்துள்ளனர்.
எதிர்க்கட்சி உறுப்பினரான மனுஷ நாணயக்கார, தனக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்தும் அவரை தாக்க எடுத்த முயற்சி குறித்தும் முறையிட்டுள்ளார். அவர் பாராளுமன்றத்தை விட்டு வெளியில் செல்ல ஒளிந்து, வெவ்வேறு முறைமைகளை கையாண்டு,தாக்கப்படுவோம் என்ற அச்சத்திலேயே வெளியேற நேர்ந்துள்ளது.
பாராளுமன்றத்தில் யாரேனும் ஒரு உறுப்பினருக்கு நேர்ந்துள்ள நிலை இதுவென்றால், ஏதேனும் ஒரு விடயத்தை உரையாற்றிய பின்னர் அவர்களை தாக்க முயற்சிப்பதென்றால், அவர்கள் ஒளிந்து இரகசியமாக பாராளுமன்றத்தை விட்டு வெளியேற நேர்கின்றது என்றால், சபையை விட்டு வெளியேற சபாநாயகர் செல்லும் கதவை பயன்படுத்த வேண்டியுள்ளது என்றால், தமது வாகனங்களை விட்டு வேறு வாகனங்களில் வெளியேற நேர்ந்துள்ளது என்றால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை என்பதும், அவர்கள் நிலைமை அச்சுறுத்தலில் உள்ளது என்பதையுமே இது வெளிப்படுத்துகின்றது.
இவ்வாறான நிலையில் ஆணைக்குழு, கலந்துரையாடல்கள் என்பவற்றை நாம் இதற்கு முன்னர் பார்த்துள்ளோம். குற்றப் புலனாய்வு பிரிவை வைத்தும் இதற்கு முன்னர் விசாரணைகளை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் அறிக்கையில் கூட எந்த உண்மைகளும் வெளிப்படுத்தவில்லை. குறைந்தபட்சம் குற்றமிழைத்த உறுப்பினர் இந்த சபைக்கு ஒரு வாரத்திற்கோ அல்லது இரண்டு வாரங்களுக்கோ வரமுடியாதென்ற கட்டளையை கூட பிறப்பிக்கவில்லை.
இப்போதும், குறித்த பாராளுமன்ற குழுவினர் இந்த சபைக்குள் வருவதற்கும், பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கும் தமக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என்பதையே கூறுகின்றனர். தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவோம் எனவும் கூறுகின்றனர்.
இதே சம்பவம் நாளை வேறு ஒருவருக்கும் நடக்கலாம். அவ்வாறான சூழ்நிலையில் எவ்வாறு பாராளுமன்றத்தை கொண்டு நடத்துவது. இதற்கு ஆணைக்குழு அமைத்து காலத்தை கடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை, உண்மையில் என்ன நடந்தது என்பது சபாநாயகருக்கு தெரியும், ஆதாரங்கள் வேண்டும் என்றால் காணொளிகள் உள்ளன அவற்றை பார்க்க முடியும், சபாநாயகர் இதனை ஏன் முன்னெடுக்கவில்லை.
பாராளுமன்றத்தில் ஒரு குழுவிற்கோ அல்லது தனி நபருக்கோ சந்தேகத்துடன், அச்சத்துடன் பாராளுமன்றத்திற்கு வர நேர்ந்துள்ளது என்றால் பாராளுமன்ற ஜனநாயகம், கருத்து சுதந்தரம் எங்கு சென்று முடியும் என்பதை சிந்திக்க வேண்டும். இதற்கு முன்னரும் இவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெற்றும் இதுவரை அதற்கு தீர்வு இல்லை. இனியாவது இதனை தடுக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யாரால் குற்றம் இழைக்கப்பட்டுள்ளது, உண்மை என்ன என்பதை கண்டறிந்து உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணைகுழுவின் மீது பொறுப்பை சுமத்தி பிரச்சினைகளில் இருந்து தப்பித்து செல்லாது உரிய நபர்களுக்கு எதிராக நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதமர் சிரேஷ்ட உறுப்பினர் என்ற ரீதியில், இவ்வாறான சம்பவங்கள் குறித்து அவருக்கு நன்றாக தெரியும். பல்வேறு கருத்து முரண்பாடுகளுக்கு, மோதல்களுக்கு தலைமைத்துவம் வழங்கியுள்ளீர்கள், தலையிட்டுள்ளீர்கள், வேடிக்கை பார்த்துள்ளீர்கள், ஆர்வமாக அவதானித்துள்ளீர்கள், தடுத்தும் உள்ளீர்கள்.
இப்போதும் அவ்வாறே, ஒரு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பாதுகாப்பு அச்சுறுத்தலில் உள்ளதால் இனியும் பாராளுமன்றத்தில் இவ்வாறு நடத்த முடியாது. எனவே உடனடியாக இதற்கு தீர்வு வழங்க வேண்டும் என சபையில் வலியுறுத்தினார்.
பின்னர் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கும் அனுரகுமார எம்.பிக்கும் இடையில் சபையில் வாக்குவாதம் ஏற்பட்ட வேளையில் ஆவேசமடைந்த அனுரகுமார எம்.பி, சபாநாயகர் சபையில் தவறாக வழிநடத்துவதே இன்று சபைக்கு பாரிய சிக்கலாக உள்ளதாகவும், எதிர்கட்சிகள் சபையை புறக்கணிக்கவும் இதுவே காரணாம் எனவும் சாடினார்.
No comments:
Post a Comment