மத அவமதிப்பு செய்தார் என்பது முற்றிலும் போலியான குற்றச்சாட்டு : சம்பவ விசாரணைகள் உன்னிப்பாக கவனிக்கப்படும் - இலங்கை வெளிவிவகார அமைச்சு - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 7, 2021

மத அவமதிப்பு செய்தார் என்பது முற்றிலும் போலியான குற்றச்சாட்டு : சம்பவ விசாரணைகள் உன்னிப்பாக கவனிக்கப்படும் - இலங்கை வெளிவிவகார அமைச்சு

(எம்.மனோசித்ரா)

பாகிஸ்தான் - சியல்கொட் நகரில் இலங்கை பிரஜையான பிரியந்த குமார கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் குறித்து நாளாந்தம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார ஒரு மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக தெரிவிக்கப்படுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும் என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன அலுவலகத்தில் திங்கட்கிழமை (6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பாகிஸ்தானில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான சம்பவத்தை வன்மையாகக் கண்டிருக்கின்றோம். மனிதனால் இவ்வாறு செய்ய முடியுமா என்று சிந்திக்கக் கூடியளவிற்கு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஆகியோர் இது தொடர்பில் எம்முடன் தொலைபேசியில் தொடர் கொண்டு கவலையை வெளிப்படுத்தினர்.

அத்தோடு முழு பாக்கிஸ்தானும் எவ்வித பேதமும் இன்றி இந்த சம்பவத்தை முற்றாக நிராகரிப்பதாகவும் அந்நாட்டு தலைவர்கள் தெரிவித்தனர்.

11 ஆண்டுகளாக அங்கு வசித்த பிரியந்த குமார 9 ஆண்டுகள் குறித்த தொழிற்சாலையிலேயே பணியாற்றியுள்ளார். இதன் போது எவ்வித குற்றச்சாட்டுக்களும் அவர் மீது முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. எனவே அவர் ஒரு மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக தெரிவிக்கப்படுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக உச்சபட்ச குற்றவியல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அந்நாட்டு தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.

அத்தோடு இதனுடன் தொடர்புடைய 13 பிரதான சந்தேகநபர்கள் உள்ளிட்ட 120 பேர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சட்டத்தின் கீழ் வழங்கப்படக் கூடிய உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என்றும் எமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

பிரியந்த குமாரவின் குடும்பத்தாரின் பொருளாதாரம், பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பாகிஸ்தான் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும். அந்த குடும்பத்திற்கான ஆரம்பகட்ட நஷ்டஈடும் பெற்றுக் கொடுக்கப்படும்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் நாளாந்தம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும் என்றார்.

No comments:

Post a Comment