பாராளுமன்றத்தில் ஜனநாயகம் இல்லை என்பதை சர்வதேசத்துக்கு காட்டுவதே எதிர்க்கட்சியின் நோக்கம் : ஊழல் மோசடிகளுக்கு பதிலளிக்காமல் தவிர்ந்து கொள்ளவே பொய் காரணம் - குற்றம் சுமத்திய ஆளுங்கட்சி - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 7, 2021

பாராளுமன்றத்தில் ஜனநாயகம் இல்லை என்பதை சர்வதேசத்துக்கு காட்டுவதே எதிர்க்கட்சியின் நோக்கம் : ஊழல் மோசடிகளுக்கு பதிலளிக்காமல் தவிர்ந்து கொள்ளவே பொய் காரணம் - குற்றம் சுமத்திய ஆளுங்கட்சி

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்றத்தில் ஜனநாயகம் இல்லை என்பதை சர்வதேசத்துக்கு காட்டுவதற்கே எதிர்க்கட்சி சபைக்கு வராமல் வெளியில் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

அத்துடன் கடந்த அரசாங்கத்தில் வீடமைப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு பதிலளிக்காமல் இருப்பதை தவிர்ந்து கொள்ளவே பொய் காரணம் தெரிவித்து வருகின்றனர் என ஆளும் தரப்பினர் குற்றம் சாட்டினர்.

பாராளுமன்றம் திங்கட்கிழமை (6) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

பிரதான நடவடிக்கைகளுக்கு முன்னர் சபாநாயகர் விசேட அறிவிப்பொன்றை முன்வைத்து குறிப்பிடுகையில், கடந்த வெளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை தினங்களில் வரவு செலவு திட்ட குழு நிலை விவாதங்களின்போது நிலையியற் கட்டளைக்கு முரணான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

அதனால் இது தாெடர்பாக ஆராய்ந்து விசாரணை மேற்கொள்ள இரண்டு தரப்பில் இருந்தும் சிரேஷ்ட உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து, இந்த வாரத்துக்குள் அறிக்கை பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இதன்போது எழுந்த அனுரகுமார திஸாநாயக்க தெரிவிக்கையில், பாராளுமன்றத்துக்கு வந்து, சபை நடவடிக்கையில் கலந்துகொள்வதற்கு பாதுகாப்பு இல்லை என்றும் அதற்கான உத்தரவாதத்தை வழங்கும்வரை சபை நடவடிக்கையில் கலந்துகொள்ளப் போவதில்லை என தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி சபைக்கு வராமல் இருக்கின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் மனுஷ நாணயக்காரவுக்கு தாக்க முற்பட்டதை அடிப்படையாகக் கொண்டே, அவர்கள் சபைக்கு வராமல் இருக்கின்றனர். உறுப்பினர் ஒருவருக்கு சபைக்கு வந்து உரையாற்றுவதற்கு அச்சப்படுவதாக இருந்தால், அது பாராளுமன்ற ஜனநாயகத்தை கேள்விக்குட்படுத்தும் விடயம்.

அதனால் குழு அமைத்து விசாரணை நடத்தி இதற்கு தீர்வு காண முற்பட்டால், அதற்கு பல நாட்கள் செல்லும். அதனால், பாராளுமன்றத்தில் குறித்த தினத்தில் நடந்த விடயங்களை ஒளிப்பதிவுகளை பார்த்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதனைத் தொடர்ந்து எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவிக்கையில், விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய உறுப்பினருக்கு சபாநாயகர் ஒரு கட்டளையிட்டால் அதனை பின்பற்ற வேண்டியது அந்த உறுப்பினரின் கடமை.

ஆனால் மனுஷ நாணயக்கார, சபாநாயகரின் கட்டளையை மீறி சபாநாயகரை அச்சுறுத்தும் வகையில் ஆசனத்தில் இருந்து எழுந்து சபாநாயகரை நோக்கிச் சென்றார். அது தொடர்பில் விசாரணை நடத்தி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என்றார்.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில், இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள குழு அமைப்பதை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் அது காலத்தை கடத்துவதற்காக அமையக்கூடாது.

அதேபோன்று ஒழுங்குப் பிரச்சினைகளை சிலர் துஷ்பிரயோகம் செய்கின்றனர். உரையாற்றும் உறுப்பினரின் உரையை குழப்புவதற்கு இதனை பயன்படுத்துகின்றனர். இதற்கு அனுமதி வழங்கக்கூடாது.

அதனால் ஒழுங்குப் பிரச்சினை எழுப்புபவர், அதற்கான காரணத்தை முன்வைக்காவிட்டால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் சபையில் உரையாற்றும்போது இரண்டு தரப்பில் இருந்தும் மோசமான வார்த்தை பிரயோகங்கள் இடம்பெறுகின்றன. அவ்வாறான விடயங்களை தடுப்பதற்கும் அந்த உறுப்பினரை சபையில் இருந்து வெளியேற்றவும் சபைக்கு தலைமை தாங்குபவருக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றார்.

ஆளும் கட்சி பிரதமகொறடா ஜோன்ஸ்ட்ன் பெர்ணான்டோ தெரிவிக்கையில், கடந்த வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர் மனுஷ நாயணக்காரவுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்த பின்னரும் அவர் தொடர்ந்து உரையாற்ற அனுமதி கேட்டார். 5 மணிக்கு பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவருக்கும் உரையாற்ற அனுமதி அளித்ததில்லை.

விவாதத்தில் உரையாற்றியவர்களுக்கு பதிலளிப்பதற்கே விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு 5 மணிக்கு பிறகு மேலதிக நேரம் கோரப்படுகின்றது. அதனால்தான் அன்று நாங்கள் மனுஷ நாணயக்காரவுக்கு தொடர்ந்து உரையாற்ற அனுதிக்க முடியாது என எமது எதிர்ப்பை தெரிவித்தோம் என்றார்.

இதன்போது அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, பந்துல குணவர்த்தன, ராஜாங்க அமைச்சர்களான செஹான் சேமசிங்க, காஞ்சன விஜேசேகர மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்பாேது பிரதானமாக சுட்டிக்காட்டியது,

எதிர்க்கட்சி தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பொய் காரணம் தெரிவித்து பாராளுமன்ற வெளிப்பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

பாராளுமன்றத்தில் ஜனநாயகம் இல்லை என்பதை சர்வதேசத்துக்கு காட்டுவதே அவர்களின் நோக்கம். அத்துடன் இன்றைய பாராளுமன்ற விவாதத்தில் சஜித் பிரேமதாச அமைச்சு பதவி வகித்த வீடமைப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதமே இருந்தது.

கடந்த அரசாங்க காலத்தில் வீடமைப்பு திட்டத்தில் இடம்பெற்ற மோசடிக்களுக்கு பதிலளிப்பதை தவிர்ந்து கொள்ளவே எதிர்கட்சி சபைக்கு வராமல் இருப்பதற்கான காரணமாகும் என்றனர்.

No comments:

Post a Comment