இலங்கையில் மிகவும் மோசமடைந்து வரும் மனித உரிமைகள் நிலைவரத்தை சீர் செய்வதற்கான வாய்ப்பு ஐரோப்பிய ஒன்றியத்திடம் உள்ளது - மனித உரிமைகள் கண்காணிப்பகம் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 18, 2021

இலங்கையில் மிகவும் மோசமடைந்து வரும் மனித உரிமைகள் நிலைவரத்தை சீர் செய்வதற்கான வாய்ப்பு ஐரோப்பிய ஒன்றியத்திடம் உள்ளது - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

(நா.தனுஜா)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் கீழ் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் மோசமடைந்து வரும் நிலையில், மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை உரியவாறு நிறைவேற்றுமாறு அரசாங்கத்தின் மீது அழுத்தம் பிரயோகித்து தற்போதைய நிலைவரத்தை மாற்றியமைப்பதற்கான மிக முக்கிய வாய்ப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் வசமுள்ளது. இலங்கையில் மேலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் ஏனைய சர்வதேச தரப்புக்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

அதேவேளை வரியின்றி ஐரோப்பிய சந்தைகளைச் சென்றடைவதற்கான இலங்கையின் இயலுமை ஜி.எஸ்.பி வரிச் சலுகையிலேயே தங்கியிருக்கின்றது. ஆகவே உரியவாறான நோக்கத்தைப் பூர்த்தி செய்யாத மேலோட்டமான பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தத்தினால் தாம் ஏமாற்றப்படுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இடமளிக்கக்கூடாது என்றும் அவ்வமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்குமாறும் அதுவரை அதன் பயன்பாட்டை இடைநிறுத்துமாறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் நிலையில், இது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி மேலும் கூறியிருப்பதாவது,

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டு ராஜதந்திரிகளிடம் கூறியபோது, அதில் ஓரளவு நம்பகத்தன்மை காணப்பட்டது. இருப்பினும் இவ்வருட ஆரம்பத்தில் விசாரணைகளின்றி நீண்ட காலத்திற்குத் தடுத்து வைக்கக் கூடியவாறான சட்டத்தை உருவாக்குவதற்கு அவர் முற்பட்டார்.

உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்பட்ட வலுவான அழுத்தங்களையடுத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதற்கென போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ் சாட்டப்பட்டிருக்கும் படையணிக்குத் தலைமை தாங்கியவரும் ஓய்வு பெற்ற ஜெனரலுமான பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தலைமையிலான குழுவொன்று அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டது.

அக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகள் இன்னமும் பகிரங்கப்படுத்தப்படாத போதிலும், நீதியமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் அப்பரிந்துரைகள் சிவில் சமூக அமைப்புக்களின் அர்த்தமுள்ள கரிசனைகளையும் ஆலோசனைகளையும் உள்வாங்கத் தவறியிருப்பதாகத் தோன்றுகிறது.

அதுமாத்திரமன்றி தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திருத்த செயன்முறை தொடர்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பெரும்பாலும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதுடன், இச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் ஏற்கனவே அச்சட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் மாறாக மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கக் கூடியவாறான குறைபாடுகள் (பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் காணப்படும் குறைபாடுகள்) குறித்து இப்பரிந்துரைகளில் அவதானம் செலுத்தப்படவில்லை என்றும் அவர்கள் அண்மையில் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேபோன்று இலங்கை கொண்டிருக்கக் கூடிய சர்வதேச கடப்பாடுகளுக்கு அமைவாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்தியமைக்கும் போது மிக முக்கியமாக அவதானம் செலுத்தப்பட வேண்டிய 5 விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர்கள் எழுவர் அண்மையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் இலங்கையைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களைப் போன்று அவர்களும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பயன்பாட்டை உடனடியாக இடைநிறுத்துமாறு கோரியுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் மனித உரிமைகள் சார் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பான மதிப்பீடுப் பணிகள் ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வரிகளைச் செலுத்தாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் சந்தைகளைச் சென்றடைவதற்கான இலங்கையின் இயலுமை ஜி.எஸ்.பி வரிச் சலுகையிலேயே தங்கியிருக்கின்றது.

கடந்த 2017 ஆம் ஆண்டில் இலங்கை ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீளப் பெற்றுக் கொண்டபோது, ஏற்கனவே நிறைவேற்றப்படாமல் இருக்கும் பல்வேறு மனித உரிமைகள்சார் கடப்பாடுகளில் ஒன்றான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதாகவோ அல்லது அதில் உரியவாறான திருத்தங்களை மேற்கொள்வதாகவோ வாக்குறுதியளித்தது.

மேலும் இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளடங்கலாக மனித உரிமைகள் தொடர்பில் அர்த்தமுள்ள மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜுன் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும் அத்தீர்மானம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டிருக்கக்கூடிய உறுதிப்பாட்டின் அடிப்படையிலேயே அதன் விளைவுகள் அமையும். ஆகவே தற்போது அடைந்துகொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் நோக்கத்தைப் பூர்த்தி செய்யாத மேலோட்டமான பயங்கரவாதத் தடைச் சட்டத்திருத்தத்தினால் தாம் ஏமாற்றப்படுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இடமளிக்கக்கூடாது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் கீழ் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் கரிசனைக்குரிய வகையில் மிக மோசமாகச் சரிவடைந்து வரும் சூழ்நிலையில், அதனை மாற்றியமைப்பதுடன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நிறைவேற்றுவது குறித்து அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான மிக முக்கிய வாய்ப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் வசமிருக்கின்றது.

இலங்கையில் மிக மோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்ட மேலும் இரு படைவீரர்களுக்கு எதிராகக் கடந்த வாரம் அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில், இலங்கையில் மேலும் மீறல்கள் இடம்பெறுவதைத் தடுக்கக்கூடிய வகையில் ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேசமட்ட பங்காளிகளுடன் இணைந்து செயலாற்றுவது அவசியமாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment