சீனா, ஜப்பான், ரஷ்யாவிடம் டொலர்களை கடனாக பெற இலங்கை தீவிரம் : சீனி, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமெனவும் எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, December 20, 2021

சீனா, ஜப்பான், ரஷ்யாவிடம் டொலர்களை கடனாக பெற இலங்கை தீவிரம் : சீனி, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமெனவும் எச்சரிக்கை

(ஆர்.யசி)

நெருக்கடிகளை சமாளிக்க சீனா, ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடம் இருந்து டொலர்களை கடனாக பெற்றுக் கொள்ள நிதி அமைச்சர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதுடன் அதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் சீனி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நிதி நெருக்கடி நிலைமைகள் குறித்து தொடர்ச்சியாக அமைச்சரவையில் ஆராயப்பட்டு வருகின்ற நிலையில், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்படும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இறுதியாக கூடிய அமைச்சரவை கூட்டத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் ரஷ்யா நாடுகளிடம் டொலர் கடன்களை பெற்றுக் கொள்ளவும், குறித்த நாடுகளுடன் தற்போதும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கடந்த அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

அதேபோல் இந்திய விஜயத்தின் போதும் இலங்கைக்கான கடன் உதவிகளை பெற்றுக் கொள்ள முன்னெடுக்கப்பட்ட நகர்வுகளை தெளிவுபடுத்தியுள்ள நிதி அமைச்சர், இதன்போது 140 கோடி அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடன் அடிப்படையில் பெற்றுத் தருவதாக இந்தியா வாக்குறுதியளித்துள்ளதெனவும் அவர் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

மேலும், அடுத்த மாதத்தில் இலங்கைக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான நிதி பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் இல்லை என்ற காரணத்தை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சரவையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் 42 கோடி டொலர் (8610 கோடி ரூபாய்கள்) நிதி அமைச்சர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுசக்தி அமைச்சர் மீண்டும் முன்வைத்துள்ளார்.

கடந்த அமைச்சரவை கூட்டத்திலும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இந்த கோரிக்கையை முன்வைத்துள்ள நிலையில் நிதி அமைச்சரினால் இன்று வரையில் அதற்கான பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான நெருக்கடி நிலைமையில் அடுத்த ஆண்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் கம்மன்பில, உடனடியாக இதற்கான தீர்மானங்களை எடுத்தாக வேண்டும் எனவும் கூறினார்.

இந்த நிலையில், நாட்டின் நிதி நெருக்கடி நிலைமைகள் காரணமாக இறக்குமதிகளை முன்னெடுக்க டொலர்கள் இல்லாத காரணத்தினால் இப்போது வரையில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய 1500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 800 சீனிக் கொள்கலன்கள் இருப்பதாகவும் சீனி இறக்குமதியாளர்களின் சங்கத்தின் தலைவர் பெரகும் அபேசேகர தெரிவித்தார்.

இந்த நிலைமையில் கொள்கலன்களை விடுவிக்காவிட்டால் அடுத்த ஆண்டில் சீனி தட்டுப்பாடும் அதேபோல் சீனியின் விலை அதிகரிப்பும் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment