(எம்.ஆர்.எம்.வசீம்)
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாக எந்த பிரேரணையும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. தேர்தல்களை உரிய காலத்துக்கு நடத்துவதே அரசாங்கத்தின் திட்டம் என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருடத்துக்கு ஒத்திவைப்பதற்கு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் அமைச்சரவைக்கு பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருப்பது தொடர்பாக தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாக அமைச்சரவைக்கு எந்த யோசனையும் சமர்க்கப்படவில்லை. அது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவும் இல்லை.
அரசாங்கம் என்ற வகையில் எந்த தேர்தலையும் உரிய காலத்துக்கு நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குரிய காலம் வந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாக மக்கள் மத்தியில் கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன. என்றாலும் அமைச்சரவைக்கு இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவுப்பும் வரவில்லை. அது தொடர்பில் கலந்துரையாடவும் இல்லை என்றார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அரசாங்கம் ஒத்திவைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சிகள் பகிரங்கமாக தெரிவித்து வந்திருந்தன.
அத்துடன் அரசாங்கம் முடியுமானால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தி அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை இருப்பதை உறுதிப்படுத்தட்டும் என பாராளுமன்றத்திலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு சவால் விடுத்திருந்தபோது, அரசாங்கத்தில் இருந்து அதற்கு உத்துயோகபூர்வமாக யாரும் பதில் அளிக்கவில்லை.
அத்துடன் கெப்பே அமைப்பும் கடந்த தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவது தொடர்பில் தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment