(நா.தனுஜா)
பெருந்தோட்டங்களில் தற்போது சுமார் 165,000 வீடுகளுக்கான தேவை காணப்படும் நிலையில், அதற்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதியுதவியில் மாத்திரம் தங்கியிருக்க முடியாது. மாறாக ஏதேனுமொரு நிறுவனத்தின் ஊடாக லயன் வீடுகளை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் அதற்காக வரவு செலவுத் திட்டத்தில் வெறுமனே 500 மில்லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டிருப்பது கவலையளிக்கின்றது. மலையக அபிவிருத்திக்கு அவசியமான நிதியை பசில் ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுத்தருவதாக உரிய விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சர் கூறுகின்றார். ஆனால் இந்தியாவிற்குச் சென்று வெறுங்கையுடன் திரும்பியிருக்கக் கூடிய பசில் ராஜபக்ஷ நிதி வழங்குவார் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார்.
'அடக்குமுறைகளுக்கு எதிரான எதிக்கட்சிப் பாராளுமன்றம்' என்ற தலைப்பில் பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தியினால் அதன் தலைமைக் காரியாலயத்தில் திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, பாராளுமன்றத்தில் வைத்து எமது கட்சி உறுப்பினர் மனுஷ நாணயக்காரவைத் தாக்குவதற்கு முற்பட்ட ஆளுந்தரப்பு உறுப்பினருக்கு எதிராகத் தற்போது வரை சபாநாயகர் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. சபாநாயகர் பதவியை வகிப்பவர் எந்தக்கட்சியினதும் கொள்கையை சாராதவராகவும் அமைச்சர்களுக்கு அடிபணியாதவராகவும் இருப்பதுடன் அவர் நடுநிலைமையுடன் செயற்பட வேண்டும். ஆனால் இன்றளவிலே பாராளுமன்றத்திற்குள்ளேயே கருத்துச் சுதந்திரம் இல்லையெனின், பாராளுமன்றத்திற்கு வெளியே கருத்துக்களை வெளியிட்டால் என்ன நடக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தந்தையாரான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவினால் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக பெருமளவான மக்களுக்கு வீடுகள் நிர்மாணித்து வழங்கப்பட்டிருக்கின்றன. அதன்போது அவர் மலையகத்தையும் மறக்கவில்லை. அவரால் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மலையகத்தில் சுமார் 40 - 50 தோட்டங்களில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.
பெருந்தோட்டங்களில் உள்ள வீடுகள் பெரும்பாலும் ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும், அதன் பின்னர் அவை அபிவிருத்தி செய்யப்படாத நிலையே காணப்பட்டது. 1981 ஆம் ஆண்டின் பின்னர் வீடமைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டு அந்தப் பொறுப்பு அமைச்சர் சந்திரசேகரனிடம் வழங்கப்பட்டது. அதன் பின்னரேயே தோட்டங்களில் தனி வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து பெருந்தோட்டங்களில் அதிகளவான வீடுகள் கட்டப்பட்டிருந்தாலும் 2015 - 2019 வரையான காலப்பகுதியில் பழனி திகாம்பரத்தின் தலைமைத்துவத்தின் கீழேயே பெரும் எண்ணிக்கையான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன என்பது நிதர்சனமான உண்மையாகும்.
எனவே நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இடம்பெறுகின்றதா? என்ற சந்தேகம் எமக்கிருக்கின்றது.
பெருந்தோட்டங்களில் 140,556 இரட்டை லயன் வீடுகளும் 180,825 ஒற்றை லயன் வீடுகளும் 22,310 தற்காலிக குடிசைகளும் 35,100 தற்காலிக வீடுகளும் காணப்படுகின்றன. இருப்பினும் இன்றளவிலே ஒரு வீட்டில் மூன்று குடும்பங்கள் வாழ்கின்ற சூழ்நிலையே காணப்படுகின்றது. பெருந்தோட்ட மக்களுக்கு மாடி வீடுகளைக் கட்டித் தருவதாகத் தற்போதைய ஆட்சியாளர்கள் வாக்குறுதியளித்த போதிலும், அவை நிறைவேற்றப்படவில்லை.
பல்வேறு வெளிநாட்டு நிதியங்கள் பெருந்தோட்ட வீடமைப்பிற்கு உதவிகளை வழங்கியிருந்தாலும் முதலில் 4000 வீடுகள், தற்போது 10,000 வீடுகள் என்ற அடிப்படையில் வீடமைப்பில் இந்தியா கணிசமானளவு உதவிகளை வழங்கியிருக்கின்றது.
ஆனால் வீடுகளை நிர்மாணிப்பதற்குத் தேவையான காணிகளை வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் மறுப்புத் தெரிவித்து வருகின்றது. எனவே அவசியமான காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேவேளை தற்போது சுமார் 165,000 வீடுகளுக்கான தேவையுள்ள நிலையில், அதற்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதியுதவியில் மாத்திரம் தங்கியிருக்க முடியாது. ஆகவே ஏதாவது ஒரு நிறுவனத்தின் ஊடாக லயன் வீடுகளை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஆனால் இதற்காக வெறுமனே 500 மில்லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டிருக்கின்றது. வீடொன்றை நிர்மாணிப்பதற்கு 16 இலட்சம் ரூபா தேவை. அவ்வாறெனின் ஒரு வருடத்தில் சுமார் 100 வீடுகளை மாத்திரமே நிர்மாணிக்க முடியும்.
மலையகத்தில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளை மேம்படுத்துவதற்கான நிதியைப் பெறுவது குறித்து அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் பேசியிருப்பதாகவும் அதற்குத் தேவையான நிதியைப் பெற்றுத் தருவதாக அவர் உறுதியளித்திருப்பதாகவும் சம்பந்தப்பட்ட விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.
ஆனால் இந்தியாவிற்குச் சென்ற பசில் ராஜபக்ஷ வெறுங்கையுடன் திரும்பி வந்திருக்கின்றார். அவ்வாறிருக்கையில் அவரிடமிருந்து மலையக அபிவிருத்திக்கு அவசியமான நிதியை எவ்வாறு பெற்றுக் கொள்ள முடியும்? என்று கேள்வியெழுப்பினார்.
No comments:
Post a Comment