குண்டர்களை வைத்துக் கொண்டு ஜனாதிபதி எதிர்பார்க்கின்ற நீதியான சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியாது : அதிகாரம் எப்போதும் ஓரிடத்தில் இருக்காது என்பதை ஆளுந்தரப்புக்கு நினைவுபடுத்துகின்றோம் - முஜிபுர் ரகுமான் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 7, 2021

குண்டர்களை வைத்துக் கொண்டு ஜனாதிபதி எதிர்பார்க்கின்ற நீதியான சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியாது : அதிகாரம் எப்போதும் ஓரிடத்தில் இருக்காது என்பதை ஆளுந்தரப்புக்கு நினைவுபடுத்துகின்றோம் - முஜிபுர் ரகுமான்

(நா.தனுஜா)

அரசாங்கம் அதன் ஊழல் மோசடிகள் வெளிப்படுத்தப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் பாராளுமன்றத்தில் எமக்கெதிராக அடக்குமுறையைப் பிரயோகிக்கின்றது. சட்டத்திற்கு மதிப்பளிக்கக் கூடிய நீதியான சமுதாயத்தைக் கட்டியெழுப்பப் போவதாக ஜனாதிபதி கூறினார். ஆனால் அவர்களுடைய தரப்பில் அங்கம் வகிக்கின்ற குண்டர்களை வைத்துக் கொண்டு அவ்வாறானதொரு சமுதாயத்தை உருவாக்க முடியாது என்பதை ஜனாதிபதிக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

'அடக்குமுறைகளுக்கு எதிரான எதிரக்கட்சிப் பாராளுமன்றம்' என்ற தலைப்பில் பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தியினால் அதன் தலைமைக் காரியாலயத்தில் திங்கட்கிழமை (7) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கம் அதன் ஊழல் மோசடிகள் வெளிப்படுத்தப்பட்டு விடும் என்ற அச்சத்தில் பாராளுமன்றத்தில் எமக்கெதிராக அடக்குமுறையைப் பிரயோகிக்கின்றது.

சீனி மோசடி, வெள்ளைப்பூண்டு மோசடி, நனோ நைட்ரஜன் திரவ உர இறக்குமதி மோசடி, கொவிட்-19 தடுப்பூசி கொள்வனவில் இடம்பெற்ற மோசடி, சீனாவிலிருந்து தரமற்ற உரம் இறக்குமதி செய்யப்பட்டமை, தரமற்ற சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் உள்ளடங்கலாக தற்போதைய அரசாங்கத்தின் முறைகேடான நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை கடந்த காலத்தில் நாங்கள் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருக்கின்றோம்.

அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆளுந்தரப்பு உறுப்பினர்கள், நாங்கள் பாராளுமன்றத்திற்கு வருகை தருவதைத் தடுப்பதற்கான எம்மை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். இந்தத் திட்டத்திற்கு சபாநாயகரும் துணைபோகின்றாரா? என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.

எமது பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு சபாநாயகர் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், அதற்கெதிரான போராட்டத்தை மேலும் வலுவாக முன்னெடுத்துச் செல்வதுடன் மக்களிடம் நியாயம் கோர வேண்டிய நிலையேற்படும் என்பதையும் நினைவுறுத்த விரும்புகின்றோம். அதேவேளை அதிகாரம் எப்போதும் ஓரிடத்திலேயே இருக்காது என்பதையும் ஆளுந்தரப்பு உறுப்பினர்களுக்கு நினைவுபடுத்துகின்றோம்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இருப்பினும் கடந்த 2020 ஆம் ஆண்டில் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு, செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்த செயற்திட்டங்கள் கூட இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான வீடமைப்பு அமைச்சின் ஊடாக கொழும்பு உள்ளடங்கலாக நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் பெரும் எண்ணிக்கையான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டதுடன் மக்களின் தேவைகள் பூர்த்திசெய்யப்பட்டன.

ஆனால் தற்போதைய அரசாங்கம் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளுக்கு முற்றிலும் மாறாக கொழும்பிலுள்ள தேசிய சொத்துக்களை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவந்து, அதனூடாக அச்சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எமது ஆட்சிக் காலத்தில் கொழும்புத் துறைமுகநகரத்திற்கு புதிய முதலீடுகளை உள்ளீர்ப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த அரசாங்கம் பதவியேற்று இரு வருடங்களாகியும் துறைமுக நகரத்தின் செயற்பாடுகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மேலும் சட்டத்திற்கு மதிப்பளிக்கக் கூடிய நீதியான சமுதாயத்தைக் கட்டியெழுப்பப் போவதாக ஜனாதிபதி கூறினார். ஆனால் அவர்களுடைய தரப்பில் அங்கம் வகிக்கின்ற குண்டர்களை வைத்துக் கொண்டு அவ்வாறானதொரு சமுதாயத்தை உருவாக்க முடியாது என்பதை ஜனாதிபதிக்குச் சுட்டிக்காட்டுகின்றோம் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment