அந்நிய செலாவணி இருப்பு வீழ்ச்சியடையும் பிரச்சினைக்கு தீர்வாகவே எரிபொருள் விலை அதிகரிப்பு - டலஸ் அழகப்பெரும - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 21, 2021

அந்நிய செலாவணி இருப்பு வீழ்ச்சியடையும் பிரச்சினைக்கு தீர்வாகவே எரிபொருள் விலை அதிகரிப்பு - டலஸ் அழகப்பெரும

(எம்.மனோசித்ரா)

டொலர் நெருக்கடி குறித்து இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடு குறித்து இன்று மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெளிவுபடுத்துவார். வெளிநாட்டு கடன் சுமை அதிகரித்துச் செல்வதால், அந்நிய செலாவணி இருப்பு வீழ்ச்சியடைந்து செல்கின்றமை நாட்டின் பொருளாதாரத்தில் சிறந்த அறிகுறியல்ல என்பதை ஏற்றுக் கொள்வதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

நாட்டில் தற்போது அந்நிய செலாவணி இருப்பு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் இவ்வாண்டு இறுதியாகும் போது அந்நிய செலாவணி இருப்பினை 3 பில்லியன் டொலர் வரை அதிகரிக்க முடியும் என்று மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால் அது எவ்வாறு என்ற வழிமுறை அவரால் தெளிவுபடுத்தப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் அந்நிய செலாவணி இருப்பினை அதிகரிப்பதற்கு அரசாங்கம் கடன் பெற்றுக் கொள்ளப்போகும் வழிமுறை யாது? கடனைப் பெற்றுக் கொள்வதற்காக திருகோணமலை துறைமுகம் அல்லது எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்கும் திட்டம் காணப்படுகிறதா என்று நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பான கேள்விகளுக்கு இன்று இடம்பெறவுள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் பதிலளிப்பார்.

அந்நிய செலாவணி இருப்பு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளமையை ஏற்றுக் கொள்கின்றோம். தற்போதைய அரசாங்கத்தினால் வெளிநாட்டு கடன் சுமை அதிகரிக்கப்பட்டமையால் இந்த நிலைமை ஏற்படவில்லை.

இலங்கையில் அந்நிய செலாவணி இருப்பு வீழச்சியடைந்துள்ளமை இரகசியமும் இல்லை. இவ்வாறு அந்நிய செலாவணி இருப்பு வீழ்ச்சியடையும் பிரச்சினைக்கான ஒரு தீர்வாகவே மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு உள்ளிட்டவை கலந்தாலோசித்து எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானித்தன.

காரணம் மாதாந்தம் எரிபொருள் இறக்குமதிக்காக மாத்திரம் 350 - 400 மில்லியன் டொலர் செலவிடப்படுகிறது. அந்நிய செலாவணி இருப்பு மாதாந்தம் வேகமாக வீழ்ச்சியடைவதற்கு இது பிரதான காரணியாகவுள்ளது.

எனவே எரிபொருள் பாவனையை முறையாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் நிலைப்பாட்டில் நிதி அமைச்சும், பெற்றோலிய கூட்டுத்தாபனமும், மத்திய வங்கியும் ஸ்திரமாகவுள்ளன. எனினும் இது நாட்டின் பொருளாதாரத்தில் சிறந்த அறிகுறி அல்ல என்பதை அனைவரும் அறிவர்.

அதே போன்று இது ஒரு அரசாங்கத்தினால் மாத்திரம் ஏற்பட்ட பிரச்சினையும் அல்ல. மாறாக நீண்ட காலமாக எமது கொள்கைகள், திட்டமிடல்களில் காணப்பட்ட குறைபாடுகளினால் ஏற்பட்ட நெருக்கடியாகும்.

எனவே அரசாங்கம் என்ற ரீதியில் இந்த பிரச்சினைக்கான பொறுப்பு கூறலிலிருந்து ஒருபோதும் விலக முடியாது. இதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். இதில் எவ்வித ஒழிவு மறைவும் கிடையாது.

வெளிநாட்டு கடன் சுமை அதிகரித்துச் செல்வதால், அந்நிய செலாவணி இருப்பு வீழ்ச்சியடைந்து செல்கின்றமை ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் சிறந்த அறிகுறியல்ல என்றார்.

No comments:

Post a Comment