நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமையகமான காத்தான்குடி - 6 இல் அமைந்துள்ள அலுவலகம், அக்கட்சியின் முக்கியஸ்தரான அப்துல் மொஹம்மட் பர்ஷாத்தின் வீட்டின் மீது, 2018 உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலப்பகுதியில் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலானது, பயங்கரவாதி சஹ்ரான் மற்றும் அவரது கும்பலின் நடவடிக்கை என தெரியவந்துள்ளது.
சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளின் பலனாக இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றுக்கு விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர்கள் அனைவரையும் கண்டறிய மேலதிக விசாரணைகள் சி.ரி.ஐ.டி. சிறப்புக் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
'முஜாஹித்தீன் போர் அல்லாஹ்' எனும் பெயரிலான வட்ஸ்அப் குழுமம் ஒன்றூடாக ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதிகளின் செயற்பாடுகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவன் சஹ்ரான் ஹாசிமின் போதனைகளுடன் தொடர்புபட்டதாக கூறப்படும் 702 இலங்கை தொலைபேசி இலக்கங்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்திய தேசிய உளவுத்துறை அந்நாட்டில் கைது செய்த ஐ.எஸ். ஐ.எஸ். சந்தேக நபரின் தொலைபேசியிலிருந்து பெற்றுக் கொண்ட தகவல்களுக்கு அமைய, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் ஊடாக அளித்த தகவல் பரிமாற்றத்தினை மையப்படுத்தி, பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவால் இது தொடர்பில் விசாரிக்கும் பொறுப்பு சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினருக்கு பாரப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே இது தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெறுவதாக குறித்த விசாரணைப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் தங்கல்ல ஊடாக, கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகேவுக்கு அறிக்கை ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பீ.58780/21 எனும் இலக்கத்தின் கீழான வழக்குக் கோவை ஊடாக நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைகளில் 702 எனும் இலக்கத்துடன் ஆரம்பிக்கும் தொலைபேசி இலக்கம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் அடையாளம் கணப்பட்டுள்ளார்.
ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் இஸ்ஸதீன் மொஹம்மட் பவ்சான் என்பவரை கடந்த 2020 டிசம்பர் 16 ஆம் திகதி விசாரணையாளர்கள் கைது செய்து தற்போதும் தடுப்புக் கவலில் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்ப்ட்டு வ்ருகின்றன.
ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை பேணியமை, அடிப்படைவாதத்தை பரப்பியமை, சமூக வலைத்தளங்கள் ஊடே பயங்கரவாத அடிப்படைவாத சிந்தனைகளை பரப்பியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த விசாரணைகள் இடம்பெறுகின்ர்ன.
அதன்படி 'முஜாஹிதீன் போர் அல்லாஹ்' எனும் வட்ஸ்அப் குழு ஒன்றில், ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சிந்தனைகள் அடங்கிய காணொளிகள், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரி தேசிய தெளஹீத் ஜமாஅத் தலைவன் சஹ்ரான் ஹாசிமின் போதனை காணொளிகளை பகிர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்திய தேசிய உளவுத்துறையினர் அந்நாட்டில், எஸ். சம்சுதீன் எனும் நபர் ஒருவரை பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ள கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய இந்த வட்ஸ்அப் குழு தொடர்பில் தெரியவந்துள்ளது.
இந்நிலையிலேயே அந்த வட்ஸ்அப் குழு மற்றும் சந்தேக நபருடன் தொடர்புடைய 702 இலங்கை தொலைபேசி இலக்கங்கள், அதன் உரிமையாளர்கள் தொடர்பில் விசாரணை செய்யுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடாக இலங்கைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்தே இவ்விசாரணைகள் பொலிஸ்மா அதிபரால் தமக்கு கையளிக்கப்பட்டதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அது தொடர்பிலான விசாரணைக்ளில் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த நபர், உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களை நடத்தியோர், அது சார்ந்த சந்தேக நபர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தாரா என்பது தொடர்பிலும் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த விசாரணைகளின் போதே, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமையகம், அதன் முக்கியஸ்தர் பர்ஷாத்தின் வீட்டின் மீது கடந்த 2018 .02.06 ஆம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதல்கள் சஹ்ரானின் கும்பலால் முன்னெடுக்கப்ப்ட்டது என சந்தேக நபர் வாக்கு மூலம் அளித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியில் அலுவலகம் மீதான குண்டுத் தாக்குதலை அடுத்து சேகரிக்கப்பட்ட குண்டுத் துகல் மாதிரிகள், இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அரச இரசாயன பகுப்பாய்வாளரின் 2018.12.4 ஆம் திகதி அறிக்கை பிரகாரம் அது, இரு நேர குண்டுகளின் பாகங்கள் அல்லது துகல்கள் என தெரியவந்தது.
அத்துடன் இந்த குண்டின் மாதிரிகள், 2018.08.26 ஆம் திகதி சஹ்ரானின் சகோதரன் ரில்வான் குண்டு தயாரிக்கும் போது அது வெடித்ததை தொடர்ந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த திரவியங்கள், 2019 ஏப்ரல் 21 தாக்குதல்கள் நடாத்தப்ப்ட்ட இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் அனைத்தும் ஒப்பீடு செய்யப்பட்டு அரச இரசாயன பகுப்பாய்வாளரினால் பிரத்தியேக பகுப்பாய்வுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது இந்த அனைத்து சம்பவங்களின் போதும் பயனப்படுத்தப்பட்டுள்ள குண்டுகள் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போவதாக அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.
இந்நிலையிலேயே நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அலுவலகம் மீதான தாக்குதல் தொடர்பில் காத்தாண்குடி பொலிசார் முன்னெடுத்த விசாரணைகள், தற்சமயம் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கர்வாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரின் பொறுப்பில் கையாளப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment