ஆபத்தில் காப்பாற்றுவான் என நம்பிய சீனா சேதனப் பசளை விவகாரத்தில் உங்களுக்கு நல்லதொரு பாடத்தைக் கற்றுத் தந்துள்ளது - கோவிந்தம் கருணாகரன் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 4, 2021

ஆபத்தில் காப்பாற்றுவான் என நம்பிய சீனா சேதனப் பசளை விவகாரத்தில் உங்களுக்கு நல்லதொரு பாடத்தைக் கற்றுத் தந்துள்ளது - கோவிந்தம் கருணாகரன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

சீனாவை நண்பனாக்கி இந்தியாவைச் சீண்டிக் காரியமாற்ற விளைகின்றீர்கள். ஆபத்தில் காப்பாற்றுவான் என நம்பிய சீனா சேதனப் பசளை விவகாரத்தில் உங்களுக்கு நல்லதொரு பாடத்தைக் கற்றுத் தந்துள்ளது என்பது சபையில் சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன், சீனாவை நண்பனாக்குவதற்காக இந்தியாவை எதிரியாக்கும் கொள்கையினை மறந்து இந்தியாவும், சீனாவும் எமது நண்பர்கள் என்ற நிலைமைக்கு உங்களது கொள்கையினை மாற்றுங்கள் என்றார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு,சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், கொவிட்-19 பெருந்தொற்றினை உங்களது தவறான கொள்கைகளால் கட்டுப்படுத்த முடியாது தமது உயிரினைக்கூட துச்சமென மதித்து கடமையாற்றிக் கொண்டிருக்கும் அலுவலர்களைக் கொண்ட சுகாதாரத் துறைக்கு ஒதுக்கீடு 6.13 வீதம்.

உற்பத்தித் துறைக்கு முக்கிய பங்களிக்கும் விவசாயத்துறைக்கு 0.97 வீதம். ஒட்டு மொத்த பாதீட்டு ஒதுக்கீட்டை நோக்கும் போது இது மக்கள் நலன் சார்ந்த, நாட்டு நலன் சார்ந்த பாதீடாக நோக்க முடியவில்லை.

சில ஒதுக்கீடுகளின் அதிகரிப்பினை நோக்கும் பொழுது அது பேசன்ரேஜ் பெறுவதற்கான ஒதுக்கீடாகவே நோக்க முடிகிறது. ஒரு வகையில் இது மக்கள் நலன் சார்ந்த பாதீடு என்பதை விட, நாட்டின் பொருளாதார நலன் சார்ந்த பாதீடு என்பதை விட, ஆட்சியாளர்களுக்கான பேர்சன்ரேஜ் பாதீடு என்பதே பொருத்தம் என்பது எனது கருத்தாகும்.

பாதுகாப்புத் தொடர்பாக நான் கூற விரும்புவது இந்து சமுத்திரத்தில் நமது நாட்டின் கேந்திர மையம், பிராந்திய ஒத்துழைப்பு, பிராந்திய அபிவிருத்தி மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு என்பன தொடர்பாக நம் நாட்டுக்குத் தேவையான தெளிவான கொள்கை ஒன்று இன்னும் இல்லை. அதை உருவாக்கவும் நீங்கள் முனையவில்லை.

தவறான வெளிநாட்டுக் கொள்கைகளை மேற்கொண்டு நமது நாட்டிற்கே பெருமையுடன் இருந்த அணிசேராக் கொள்கையினை அழித்துவிட்டு தென்னாசியப் பிராந்திய வல்லரசான இந்தியாவுக்கு சவால் விடும் அளவுக்கு கொள்கைகளை வகுப்பதிலேயே நீங்கள் கவனம் செலுத்துகின்றீர்கள். உங்களது அமைச்சரவையின் சில அமைச்சர்களது அறிவீனமான உரைகள் புத்திஜீவித்துவமற்ற உரைகள் இவற்றையே தெளிவாகக் காட்டுகின்றது.

அண்டை நாடான இந்தியாவுடனான வரலாற்று, கலாசார, பாரம்பரிய, மதத் துறைகளில் இரு நாடுகளுக்குமிடையே பிரிக்க முடியாத பிணக்குகள் ஏற்பட முடியாத இணைப்பு வரலாற்றுக் காலம் முதல் உள்ளது என்பதை நீங்கள் இலகுவாக மறந்து விடுகிறீர்கள்.

சீனாவை நண்பனாக்கி இந்தியாவைச் சீண்டிக் காரியமாற்ற விளைகின்றீர்கள். ஆபத்தில் காப்பாற்றுவான் என நம்பிய சீனா சேதனப் பசளை விவகாரத்தில் உங்களுக்கு நல்லதொரு பாடத்தைக் கற்றுத் தந்துள்ளது. அதிலிருந்தாவது உங்கள் வெளிநாட்டுக் கொள்கை, தேசிய பாதுகாப்புக் கொள்கைகளின் மீதான தவறுகளைத் திருத்த விளையுங்கள்.

சீனாவை நண்பனாக்குவதற்காக இந்தியாவை எதிரியாக்கும் கொள்கையினை மறந்து இந்தியாவும் சீனாவும் எமது நண்பர்கள் என்ற நிலைமைக்கு உங்களது கொள்கையினை மாற்றுங்கள்.

No comments:

Post a Comment