(இராஜதுரை ஹஷான்)
சமையல் எரிவாயு சிலிண்டரை அடிப்படையாகக் கொண்ட வெடிப்பு சம்பவங்களுக்கு எரிவாயு சிலிண்டர் விநியோக நிறுவனங்கள் பொறுப்புக்கூற வேண்டும். சமையல் எரிவாயு விநியோக நிறுவனங்கள் இலாபம் பெறும் நோக்கிற்காக முறைகேடான வகையில் செயற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டால் அந்நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
எரிவாயு கசிவு உணர் திறனை தூண்டும் 'எதில் மேர்கப்டன்' இரசாயன பதார்த்தம் எரிவாயு சிலிண்டர்களில் 14 சதவீதம் சேர்க்கப்பட வேண்டும். இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் எரிவாயு சிலிண்டர்களில் 5 சதவீதமளவில் அப்பதார்த்தம் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே எரிவாயு சிலிண்டர் விநியோகம் மற்றும் விற்பனை மறு அறிவித்தல் விடுக்கும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், சமையல் எரிவாயு சிலிண்டரை அடிப்படையாக கொண்ட வெடிப்பு சம்பவங்கள் கடந்த மாதத்திற்குள் மாத்திரம் 100 இற்கும் அதிகமான அளவு பதிவாகியுள்ளன. இது பெரும் பிரச்சினையாக உள்ளது என்பதை கருதியதன் காரணமாகவே முறையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. இப்பிரச்சினைக்கு இரசாயன விஞ்ஞானபூர்வமாக மாத்திரம் தீர்வு காண முடியும்.
நாட்டு மக்கள் அனைவரும் இப்பிரச்சினையை தற்போது எதிர்கொண்டுள்ளார்கள். ஆகவே இதற்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் அரசியல் காரணிகளை புறக்கணித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
விஞ்ஞானபூர்வமான வகையில் தீர்வு காண வேண்டும் என்பதற்கான துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மொறட்டுவ பல்கலைக்கழகம் சமர்ப்பித்த அறிக்கைக்கு அமைய நேற்றுமுன்தினம் மூன்று பிரதான தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எரிவாயு கசிவினை உணர்வதற்கான எரிவாயு சிலிண்டர்களின் 'எதில் மெர்கப்டன்' எனும் இரசாயன பதார்த்தம் சேர்க்கப்படும். அப்பதார்த்தத்தின் அளவு 14 சதவீதமாக காணப்பட வேணடும். ஆனால் சமையல் எரிவாயு விநியோக நிறுவனங்களின் உற்பத்திகளிலும், விநியோகிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களிலும் அப்பதார்த்தத்தின் அளவு 5 சதவீதமாக காணப்படுகிறது.
அதன் காரணமாகவே நுகர்வோர் அதிகார சபை சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் மற்றும் விற்பனையை மறு அறிவித்தல் விடுக்கும் வரையில் இடைநிறுத்த தீர்மானித்து, அத்தீர்மானத்தை எரிவாயு விநியோக நிறுவனங்களுக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் முறையான சதவீதத்திற்கு அமைய எதில் மெர்கப்டன் பதார்த்தத்தை எரிவாயு சிலிண்டரில் சேர்ப்பதாக நிறுவனத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் தரம் குறித்து அரச நிறுவனங்கள் நேரடியாக கவனம் செய்வது அவசியமாக்கப்பட்டுள்ளது.
3,750 மெற்றிக் தொன் எரிவாயு கொள்கலன்கள் துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளன. அந்த எரிவாயுவின் மாதிரிகள் 4 கட்டங்களாக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டின் தரப்படுத்தலுக்கு அமையும் தன்மையில் அந்த எரிவாயுக்களின் கூறுகள் காணப்பட்டால் மாத்திரமே அவற்றை விநியோகிக்க அனுமதி வழங்கப்படும்.
சமையல் எரிவாயு சிலிண்டரின் தரம், எரிவாயு அடுப்பு, இணைப்புக்கள் ஆகியவற்றின் தரம் தொடர்பில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனம் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். அந்நிறுவனம் முழுமையான அறிக்கையை தர நிர்ணய கட்டுப்பாட்டு சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற மூன்று பிரதான காரணிகளை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வீடுகளில் உள்ள சமையல் எரிவாயு தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடடிவக்கையினை தொழினுட்ப குழுவிடம் கோரியுள்ளோம். சமையல் எரிவாயு சிலிண்டரை அடிப்படையாகக் கொண்ட வெடிப்புச் சம்பவங்களுக்கு குறித்த நிறுவனங்கள் பொறுப்புக்கூற வேண்டும். எரிவாயு நிறுவனங்கள் இலாபம் பெறும் நோக்கில் முறைக்கேடான வகையில் செயற்பட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment