(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை முழுமையாக பகிஷ்கரிப்பு செய்ததால், பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (6) இடம்பெற்ற நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, சுற்றுலாத்துறை அமைச்சு, நகர அபிவிருத்தி கழிவுப் பொருட்களை அகற்றுதல் மற்றும் சமுதாய துப்புரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு,தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சு ,கரையோர பாதுகாப்பு மற்றும் தாழ் நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு,விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் ஆளுங்கட்சி மாத்திரம் கலந்துகொண்டிருந்தனர்.
அதனால் விவதாம் இல்லாமல் குறித்த அமைச்சுக்களுக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்து, தேவையான திருத்தங்களை மேற்கொண்டு நிதி ஒதுக்கீடுகளை அனுமதித்துக் கொண்டனர்.
சபையில் எதிரணியில் 3 உறுப்பினர்கள் மாத்திரமே இருந்தனர்
பாராளுமன்றம் திங்கட்கிழமை (6) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.பிரதான நடவடிக்கையாக சபாநாயகர் அறிவிப்பு இடம்பெற்றது.
இதன்போது சபையில் எதிர்க்கட்சி தரப்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் யாரும் சபையில் இருக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் இருக்கவில்லை.
எதிர்க்கட்சி முன்வரிசையில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திர குமார பொன்னம்பலம் மாத்திரம் இருந்தனர். அத்துடன் இரண்டாம் வரிசையில் விஜித்த ஹேரத் மாத்திரம் இருந்தார்.
பிரதான எதிர்க்கட்சி பாராளுமன்ற வளாகத்துக்குள் ஆர்ப்பாட்டம்
அத்துடன் காலை 9.30 மணிக்கு சபை கூடியபோது பிரதான எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் வெளிமண்டபத்துக்கு அருகில் அரசாங்கத்துக்கு எதிரான பதாதைகளை ஏந்திய வண்ணம் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளி கட்சிகளான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன் ஆகியோரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
சபையில் இருந்து அமைதியாக வெளியேறிய அனுரகுமார மற்றும் கஜேந்திர குமார்
சபாநாயகரின் அறிப்பைத் தொடர்ந்து அனுரகுமார திஸாநாயக்க எழுந்து, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபைக்கு வராமல் இருப்பதற்காக தெரிவிக்கும் காரணம் தொடர்பாக ஆராயந்து உடனடியாக தீர்மானம் ஒன்றை அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு அமர்ந்தார்.
அதேபோன்று கஜேந்திர குமார் பொன்னம்பலம் எழுந்து, சபையில் உறுப்பினர்கள் உரையாற்றும்போது மோசமான வார்த்தை பிரயோகங்களை பிரயோகிப்பதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு அமர்ந்தார்.
இதன்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலரும் எதிர்க்கட்சி சபை நடவடிக்கையை புறக்கணித்திருப்பது தொடர்பாக அவர்களின் கருத்துக்களை தெரிவித்த பின்னர், சாநாயகர் சபையை நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டுசெல்ல நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கையில், எதிர்க்சியில் இருந்த அனுரகுமார திஸாநாயக்க, விஜித்த ஹேரத் சபையில் இருந்து வெளியேறிச் சென்றனர். அதனைத் தொடர்ந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சபையை விட்டு அமைதியாக வெளியேறிச் சென்றார்.
இவர்கள் வெளியேறிச் செல்வதை அவதானித்துக் கொண்டிருந்த ஆளும் கட்சி பிரதமகொரடா அமைச்சர் ஜோன்ஸ்ட்ன பெர்ணான்டோ, தனக்கு பின் வரிசையில் இருந்த அமைச்சர் பிரசன்ன ரணங்துங்க்கவின் மேசையை தட்டி, அவர்கள் மூன்று பேரும் வெளியேறிச் செல்வதை சுட்டிக்காட்டினார்.
இதன்போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் அவர்கள் வெளியேறிச் செல்வதை சிறித்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
இதன்போது சபையில் வாய் மூல விடைக்கான கேள்வி நேரம் ஆரம்பிக்கும்போது அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எச்.எம். ஹரீஸ் எதிர்க்கட்சி தரப்பில் தனது ஆசனத்தில் வந்து அமர்ந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து அதே கட்சி உறுப்பினரான பைசல் காசிமும் சபைக்குள் வந்தார்.
வாய் மூல விடைக்கான கேள்வி நேரம் முடிவடைந்த பின்னர், இன்றைய தினம் வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்துக்கு எடுத்துக் கொண்டிருந்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு. சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தை ஆரம்பிக்க, குறித்த அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்படும் மொத்த நிதியில், சம்பிரதாய முறைப்படி 10 ரூபாவை நீக்கும் யோசனையை முன்வைத்து உரையாற்ற எதிர்க்கட்யில் யாரும் இருக்கவில்லை. அதனால் விவாதம் இல்லாமல் திருத்தங்களுடன் குறித்த அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை அனுமதிக்க சபாநாயகர் தீர்மானித்தார்.
இடைநடுவில் சபைக்குள் வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு
சம்பிரதாய முறைப்படி வரவு செலவு திட்ட விவாதம் ஆரம்பிக்கப்படாததால், விவாதம் இல்லாமல் வியத்துக்கு பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் மாத்திரம் திருத்தங்களை சமர்ப்பித்து, அடுத்த வருடத்தில் மேற்கொள்ள உள்ள வேலைத்திட்டங்களை தெரிவித்து உரையாற்றிக் கொண்டிருக்கையில், சபைக்குள் வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மாலநாதன், எழுந்து விவாதத்தில் உரையாற்ற அனுமதி கேட்டார்.
இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய ஆளும் கட்சி உறுப்பினர் சாந்த பண்டார, விவாதம் இடம்பெறாததால் நிதி ஒதுக்கீடுகள் சபையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால் ஏதாவது ஆலாேசனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என குறிப்பிட்டார். அதன் பின்னர் சாள்ஸ் நிர்மலநாதன் வீடமைப்பு திட்டம் தொடர்பாக தனது கருத்துக்களை சபைக்கு தெரிவித்தார்.
இதன்போது அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வரும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எச்.எம். எம். ஹரீஸ் எழுந்து உரையாற்ற முற்பட்டபோதும், உரையாற்ற முடியாது. ஆலோசனைகளை மாத்திரம் தெரிவிக்குமாறு சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர் கேட்டுக் கொண்டார்.
மதிய உணவு வேளையுடன் கலைந்த பாராளுமன்றம்
வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தை சம்பிரதாய முறைப்படி ஆரம்பிக்க எதிர்க்கட்சி சபைக்கு வரவில்லை. அதனால் பாராளுமன்றத்தில் இன்று (நேற்று) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு. சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் 4 இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் விவாதிக்கப்படாமல் 12.30 மணியாகும்போது திருத்தங்களுடன் சபையில் அனுமதிக்கப்பட்டது.
அதன் பின்னர் சபையை நாளை காலை (இன்று) 9.30 மணி வரை ஒத்திவைக்குமாறு ஆளும் கட்சி பிரதமகொரடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர் சாந்த பண்டார சபையை நாளை (இன்று) காலை 9.30 மணி வரை ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment