வடக்கு மக்களுக்கு சஜித் செய்த அநியாயம் இன்றும் பிரதிபலிப்பு : வீடுகளை கட்டிமுடிக்க கடன் பெற்று கட்ட முடியாத நிலை - அரசு உதவ வேண்டும் என சார்ள்ஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, December 6, 2021

வடக்கு மக்களுக்கு சஜித் செய்த அநியாயம் இன்றும் பிரதிபலிப்பு : வீடுகளை கட்டிமுடிக்க கடன் பெற்று கட்ட முடியாத நிலை - அரசு உதவ வேண்டும் என சார்ள்ஸ்

வீடமைப்பு அமைச்சராக இருந்த தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எந்தவித திட்டமிடலும் இன்றி வடக்கில் வீடமைப்பு திட்டங்களை முன்னெடுத்ததால் இன்று பல ஆயிரம் மக்கள் வீதியில் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். 

வீடு கட்ட 7.5 இலட்சம் வழங்குவதாக தெரிவித்தாலும் 50ஆயிரம் ரூபா முதல் ஒரு இலட்சம் ரூபா வரையே வழங்கப்பட்டதாக தெரிவித்த அவர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும்கூட அந்த மக்களின் மிகுதிப் பணத்தை பெற்றுக் கொடுக்க பாராளுமன்றத்தில் எந்த கோரிக்கையும் முன்வைக்க வராதது குறித்து கவலையடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, சுற்றுலாத்துறை அமைச்சு, நகர அபிவிருத்தி கழிவுப்பொருட்களை அகற்றுதல் மற்றும் சமுதாய துப்புரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சு, கரையோர பாதுகாப்பு மற்றும் தாழ் நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு, விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் திருத்தங்களை முன்வைத்து உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டாவது,

மலையக மக்களின் வாழ்வாதாரம் என்பது தோட்டத்தில் பணியாற்றுவதாக இருந்தாலும் வீட்டு வசதி மற்றும் காணி வசதி அளிப்பதாக கூறப்பட்டது. அவர்களின் தேவைகள் முழுமையாக பூர்த்தியாகவில்லை. அவர்களுக்கு நிரந்தர காணி மற்றும் வீடுகளை வழங்க வேண்டும். 

2018 இல் வட மாகாணாத்தில் வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீடுகள் தொடர்பில் பிரச்சினையுள்ளது. அன்று வீடமைப்பு அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாஸ எந்தவித திட்டமிடலும் இன்றி இந்த வீடுகளை வழங்கினார். 

வீடமைப்பு அதிகார சபை மாவட்ட முகாமையாளரின் ஊடாக வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 7 இலட்சத்து 50 ஆயிரம் வழங்குவதாக இருந்தாலும் குறிப்பிட்ட தொகையே வழங்கப்பட்டன. சிலருக்கு 50 ஆயிரம் சிலருக்கு ஒரு இலட்சம் ரூபாய்தான் வழங்கப்பட்டது. 

சரியான திட்டமிடலின்றி அவை வழங்கியதால் வடக்கு மட்டுமன்றி பல மக்கள் புதிய வீட்டுத் திட்டத்திற்குள் உள்வாங்க முடியாமல் உள்ளனர். பலர் முறையிட்டுள்ளனர். தங்களுக்கு தந்த 50 ஆயிரம் ரூபாவை மீளத் தருவதாக பலர் எம்மிடம் தெரிவித்துள்ளனர்.

2018-2019 காலப்பகுதியில் இவ்வாறு பணம் பெற்ற மக்கள் கடனாளிகளாகியுள்ளனர். நகைகளை இழந்துள்ளனர். இருந்தும் அந்த வீடுகள் முற்றுப் பெறவில்லை. 

அவருடைய காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களினால் பல்ஆயிரக்கணக்காண மக்கள் வீதியில் உள்ளனர். இருந்தும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் கூட அந்த மக்களின் மிகுதிப் பணத்தை பெற்றுக் கொடுக்க எந்த கோரிக்கையும் முன்வைக்கவில்லை.அது குறித்து கவலையை தெரிவிக்கிறேன்.

மாவட்ட ரீதியாக ஆய்வு செய்து பணம்பெற்று இன்று வரை வீடு முழுமையடையாதவர்களை அடையாளங் கண்டு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment