(இராஜதுரை ஹஷான்)
சேதனப்பசளைத் திட்டம் தொடர்பில் பெரும்பாலான ஊடகங்கள் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்தன. அரசியல்வாதிகள் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக சேதனப்பசளைத் திட்டத்தற்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்தார்கள். எக்காரணிகளுக்காகவும் சேதனப்பசளைத் திட்டத்தை கைவிடப்போவதில்லை என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிலைபேறான விவசாயக் கொள்கைத்திட்டம் காலத்திற்கு பொருத்தமானதாக உள்ளது. சேதனப்பசளைத் திட்டத்தை சிறந்த முறையில் செயற்படுத்தவதற்கு அனைத்து தரப்பினரது ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
சேதனப்பசளைத் திட்டம் தொடர்பில் அரசாங்கம் முன்வைத்த கொள்கைத் திட்டத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது. சேதனப்பசளைத் திட்டத்தின் ஊடாக விவசாயிகள் பல்வேறு வழிமுறைகள் ஊடாக பயனடைவார்கள்.
இரசாயன உர மாபியாக்கள் மக்கள் மத்தியில் குறிப்பாக விவசாயிகள் மத்தியில் சேதனப்பசளைத் திட்டம் தொடர்பில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளன.
இரசாயன உரம் தடை செய்யப்பட்டதன் பிறகு ஒரு சில தனியார் வங்கிகள் தங்களிடம் டொலர் பற்றாக்குறை காணப்படுவதாக குறிப்பிட்டுக்கொண்டு பல சேவைகளை மட்டுப்படுத்தின.
இரசாயன உரம் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டன் பின்னர் அந்த வங்கிகள் ஊடாக டொலர் விநியோகிக்கப்படுகின்றன. அத்துடன் மரக்கறிகளின் விலைகளும் சடுதியாக குறைவடைந்துள்ளன.
ஒருசில மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் இரசாயன உரம் இல்லாவிடின் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. விவசாயத்திற்கு நீர் இறைக்க வேண்டாம் என குறிப்பிட்டுக் கொண்டு போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.
பல தடைகளுக்கு மத்தியில் தற்போது 7 இலட்சத்து 30 ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இம்மாதத்திற்குள் பெரும்போகத்தில் 8 இலட்சம் ஹெக்டயர் நிலப்பரப்பில் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
சேதனப்பசளைத் திட்டத்தின் ஊடாக நிலைபேறான விவசாய இலக்கை அடைவோம். விசமற்ற உணவுகளை மக்களுக்கு வழங்குவது அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். இருப்பினும் அந்த சிறந்த திட்டம் மக்கள் மத்தியில் முறையாக கொண்டு செல்லப்படவில்லை.
பெரும்பாலான ஊடகங்கள் சேதனப்பசளைத் திட்டம் தொடர்பில் தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டுச் சென்றன. குறிப்பாக அரசியல்வாதிகள் தங்களின் குறுகிய அரசியல் பிரசாரத்திற்காக சேதனப்பசளைத் திட்டத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். எக்காரணிகளுக்காகவும் சேதனப்பசளைத் திட்டத்தை கைவிட மாட்டோம் என்றார்.
No comments:
Post a Comment