(நா.தனுஜா)
பாராளுமன்றம் என்பது உறுப்பினர்களின் அறிவு மட்டத்தையும் புத்திசாலித் தனத்தையும் வெளிப்படுத்துவதற்கான இடமேயன்றி, உடற்பலத்தை வெளிக்காட்டுவதற்கான இடமல்ல. இருப்பினும் பாராளுமன்றத்தில் உள்ள குண்டர்களுக்கு அவர்களது வரையறைகள் என்னவென்பது பற்றித் தெரியவில்லை. அதன் விளைவாக அண்மையில் பாகிஸ்தானில் பிரியந்த குமாரவிற்கு ஏற்பட்ட நிலை எமது கட்சி உறுப்பினர் மனுஷ நாணயக்காரவிற்கு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்பட்டன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் தற்போதைய அரசாங்கத்தை எந்தளவு தூரம் இயங்க அனுமதிப்பது? இந்த அரசாங்கத்தை எப்படி மாற்றியமைப்பது? அதன் பின்னர் புதிய அரசாங்கத்தை எவ்வாறு உருவாக்குவது? என்பது குறித்து ஆளுந்தரப்பில் அங்கம்வகிக்கின்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துரையாட ஆரம்பித்திருக்கின்றார்கள். தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஆளுந்தரப்பிற்குள்ளேயே பாரிய எதிர்ப்பு காணப்படுகின்றது. இருப்பினும் அந்த எதிர்ப்பலை மிக முக்கிய சந்தர்ப்பங்களில் மாத்திரமே வெளிப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
'அடக்குமுறைகளுக்கு எதிரான எதிரக்கட்சிப் பாராளுமன்றம்' என்ற தலைப்பில் பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தியினால் அதன் தலைமைக் காரியாலயத்தில் திங்கட்கிழமை (6) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் கடந்த வாரம் மிகவும் துரதிஷ்டவசமான சம்பவங்கள் பதிவாகியிருந்தன. பாராளுமன்றத்தில் வாத, விவாதங்களும் தீவிர தர்க்கங்களும் இடம்பெறுவது வழமையானதாகும்.
அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் பொருத்தமற்ற அல்லது தவறான கருத்துக்கள் வெளியிடப்படும் பட்சத்தில், சபாநாயகர் அதில் தலையிட்டு குறித்த உறுப்பினரை மன்னிப்புக் கோருமாறு வலியுறுத்துவார். அதற்கமைவாக சம்பந்தப்பட்ட உறுப்பினரும் சபையில் மன்னிப்புக் கோருவதே காலங்காலமாகப் பின்பற்றப்பட்டுவரும் பாராளுமன்ற சம்பிரதாயமாகும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏதேனும் கருத்துக்களை வெளியிட்டு விடுவார்கள் என்று அஞ்சி அவர்களைத் தாக்க வேண்டிய அவசியமில்லை.
பாராளுமன்றம் என்பது உறுப்பினர்களின் அறிவு மட்டத்தையும் புத்திசாலித் தனத்தையும் வெளிப்படுத்துவதற்கான இடமேயன்றி, உடற்பலத்தை வெளிக்காட்டுவதற்கான இடமல்ல.
எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மனுஷ நாணயக்கார மிகத்திறமையானவர் என்பதுடன் தனது வாதங்களை தர்க்க ரீதியான நியாயங்களுடன் மிகத் தெளிவாக முன்வைக்கக் கூடிய ஒருவராவார். அதன் விளைவாக அவரது உரையை செவிமடுப்பது சில தரப்பினருக்குப் பிரச்சினைக்குரிய விடயமாக இருக்கக்கூடும்.
எனவே அவர் மீதான தாக்குதலையும் பாராளுமன்ற சம்பிரதாயங்களை முழுமையாக மீறும் வகையிலான நடவடிக்கைகளையும் கண்டிக்கும் வகையில் பாராளுமன்றத்திற்குச் செல்லாமல் ஒரு வலுவான செய்தியை உலகிற்கு வெளிப்படுத்தியிருக்கின்றோம்.
இன்றளவிலே தற்போதைய அரசாங்கம் பாராளுமன்றத்திலும் பிரதேச சபைகளிலும் மாத்திரமே அதிகாரபலத்தைக் கொண்டிருக்கின்றது.
ஏனெனில் பொது நிதியைப் பயன்படுத்தி ஊழல் மோசடிகளில் ஈடுபட விரும்புபவர்களும் முறைகேடாக செயற்படுபவர்களும் அவற்றுக்குத் தலைமைதாங்குவதால் அவ்விரு கட்டமைப்புக்களிலும் அரசாங்கம் பலத்தைக் கொண்டிருக்கினறது.
இந்த அரசாங்கத்தை எந்தளவு தூரம் இயங்க அனுமதிப்பது? இந்த அரசாங்கத்தை எப்படி மாற்றியமைப்பது? அதன் பின்னர் புதிய அரசாங்கத்தை எவ்வாறு உருவாக்குவது? என்பது குறித்து ஆளுந்தரப்பில் அங்கம்வகிக்கின்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துரையாட ஆரம்பித்திருக்கின்றார்கள்.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஆளுந்தரப்பிற்குள்ளேயே பாரிய எதிர்ப்பு காணப்படுகின்றது. இருப்பினும் அந்த எதிர்ப்பலை மிக முக்கிய சந்தர்ப்பங்களில் மாத்திரமே வெளிப்படுகின்றது.
நாட்டின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்போவதில்லை என்றும் அவற்றைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும்கூறி ஆட்சிபீடமேறிய அரசாங்கம், இப்போது எமது நாட்டிற்கே உரித்தான முக்கிய வளங்கள் அனைத்தையும் விற்பனை செய்துகொண்டிருக்கின்றது.
அதேபோன்று அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்கலாக அனைத்துப் பொருட்களினதும் விலைகள் பெருமளவால் அதிகரித்திருப்பதுடன் மக்களில் வாழ்க்கைச் செலவு வெகுவாக உயர்ந்திருக்கின்றது.
இப்போது அரசாங்கம் இந்தியா உட்பட ஒவ்வொரு நாடுகளுக்கும் சென்று கடன் பெறுகின்றது. ஆனால் மீளச் செலுத்த வேண்டிய கடன்களுக்காக அரசாங்கம் அடுத்த வருடத்திற்குள் 6 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்டிக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றது.
உண்மை நிலைவரம் இவ்வாறிருக்கையில், பாராளுமன்றத்தில் உள்ள குண்டர்களுக்கு அவர்களது வரையறைகள் மற்றும் மட்டுப்பாடுகள் என்னவென்பது பற்றித் தெரியவில்லை.
பாகிஸ்தானில் பிரியந்த குமாரவிற்கு ஏற்பட்ட நிலை மனுஷ நாணயக்காரவிற்கு ஏற்பட்டிருக்கக்கூடும். இது இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் கறுப்பு நாளாகும் என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment