(எம்.மனோசித்ரா)
ஒமிக்ரோன் பிறழ்வு கொரோனா தாக்கத்தை நிறைவுக் கொண்டுவரும் பிறழ்வு அல்ல. இதன் பின்னர் இதை விட அபாயமான பிறழ்வுகளும் ஏற்படக் கூடும். உலகலாவிய ரீதியிலான தொற்று பரவலில் புதிய பிறழ்வுகள் தோற்றம் பெறுகின்றமை வழமையானதொரு விடயமாகும் என்று வைரஸ் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஜூட் ஜனமான தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் திங்கட்கிழமை (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், உலகலாவிய ரீதியில் வைரஸ் தொற்று ஏற்படும் போது தொடர்ச்சியாக புதிய பிறழ்வுகள் உண்டாகின்றமை வழமையாக இடம்பெறும். அதற்கமையவே கொவிட் தொற்று தோற்றம் பெற்றதன் பின்னர், அல்பா, டெல்டா மற்றும் தற்போது ஒமிக்ரோன் ஆகிய பிறழ்வுகள் இனங்காணப்பட்டுள்ளன.
ஒமிக்ரோன் பிறழ்வு டெல்டாவை விட வேகமாக பரவக் கூடியதா என்பது இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை. அதே போன்று எந்தளவிற்கு வேகமாகப் பரவும் என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை. எவ்வாறிருப்பினும் இதுவரையில் எந்தவொரு நாட்டிலும் ஒமிக்ரோன் பிறழ்வால் மரணங்களும் பதிவாகவில்லை.
இதற்கு முன்னர் தோன்றிய டெல்டா பிறழ்வு பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளமையால் , தற்போது இனங்காணப்பட்டுள்ள பிறழ்வு தடுப்பூசியினால் பெற்றுக் கொண்ட பாதுகாப்பையும் மீறி பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
எவ்வகையான புதிய பிறழ்வாகக் காணப்பட்டாலும் அது பரவும் முறைமை மாறுபடாது. எனவே புதிய பிறழ்வுகள் இனங்காணப்பட்டாலும் அவை அதிகளவில் பரவாமல் இருக்கும் வகையில் செயற்பட்டால் பாதிப்புக்களையும் குறைத்துக் கொள்ளலாம். அத்தோடு இது கொரோனா தாக்கத்தை நிறைவுக் கொண்டுவரும் பிறழ்வு அல்ல. இதன் பின்னர் இதை விட அபாயமான பிறழ்வுகளும் ஏற்படக் கூடும் என்றார்.
No comments:
Post a Comment