(எம்.மனோசித்ரா)
பாக்கிஸ்தானில் பிரியந்த குமார தியவடனே என்ற இலங்கை பிரஜை மிலேச்சத்தனமாக கொலை செய்யப்பட்டமைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். மதத்தின் பெயரை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்ற இவ்வாறான அடிப்படைவாத குற்றங்களால் ஏற்படுகின்ற பாதிப்புக்களை இல்லாதொழிப்பதற்கு அனைத்து நாட்டு தலைமைத்துவங்களும் கடுமையாக சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாக்கிஸ்தானில் அடிப்படைவாதிகளால் பிரியந்த குமார தியவடனே என்ற இலங்கை பிரஜை மிலேச்சத்தனமாக கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த கொடூரமானதும் பயங்கரமானதுமான கொலையை நாம் வன்மையாகக் கண்டிருக்கின்றோம். அத்தோடு இதனால் பெரும் மனக்கவலைக்கு உள்ளாகியுள்ள குடும்பத்தாருக்கும் உறவினருக்கும் எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மதத்தின் பெயரை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்ற இவ்வாறான அடிப்படைவாத குற்றங்களால் ஏற்படுகின்ற பாதிப்புக்களை இல்லாதொழிப்பதற்கு அனைத்து நாட்டு தலைமைத்துவங்களும் கடுமையாக சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மதத்தின் பெயரால் அடிப்படைவாதிகள் அவர்களது தனிப்பட்ட அல்லது அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மனிதர்களை கொலை செய்யுமளவிலான ஆபத்தான நிலைமை உலகில் வேறு எதிலும் இல்லை. இது மதங்களுக்கு ஏற்படுத்தப்படும் அவமதிப்பாகும்.
இவ்வாறான கொலையாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவி வழங்குபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு , அவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.
அத்தோடு இதுபோன்ற பாரதூரமான சம்பவங்கள் இனியொருபோதும் இடம்பெறாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே இந்த அநீதியான கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக பாக்கிஸ்தான் தலைமைத்துவம் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment