(எம்.மனோசித்ரா)
அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து செயற்பட வேண்டும். அதற்காக ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் தம்முடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுத்துள்ள ஐக்கிய தேசிய கட்சி பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன, அனைவரும் ஒன்றிணைந்து சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தால் டொலர் நெருக்கடிக்கு துரிதமாக தீர்வு காண முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியில் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் ஒரே குழுவில் இணைந்து செயற்பட வேண்டும்.
எதிர்த்தரப்பினர் பிளவடைந்திருக்கின்றமையானது அரசாங்கத்திற்கு சாதகமானதாக அமையும். மக்களைப் பற்றி சிந்திப்பதாக இருந்தால் எதிர்க்கட்சி பிளவடைந்திருப்பதை விட, இணைந்து செயற்படுவதே அத்தியாவசியமானதாகும்.
உரத்தினை இலவசமாக வழங்குவதாகக்கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் சேதன உரத்தை பலவந்தமாக விவசாயிகள் மீது திணித்து நாட்டின் விவசாயத்தை சீரழித்துள்ளது. சேதன உரத்தை உற்பத்தி செய்வதற்கு நிதி உதவியளிப்பதாகக்கூறி விவசாயிகளை ஏமாற்றியுள்ளனர்.
எவ்வித பரிசோதனைகளும் இன்றியே சீன சேதன பசளையை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் காரணமாக சீன கழிவுகளே நாட்டை வந்தடைந்தன. இதனை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்த தரப்பினர் இலஞ்சம் பெற்றமையால் உரக் கப்பல் நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் டொலர் நஷ்டஈடு செலுத்த வேண்டியேற்பட்டுள்ளது.
உரத்தில் விஷத்தன்மையுடைய இரசாயனம் இல்லை என்று தற்போது அரசாங்கம் கூறுகின்றது. இந்த அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது ? சேதன உரத்தை புறந்தள்ளி தற்போது இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் இரசாயன உரத்தை இறக்குமதி செய்யப் போவதில்லை என்று கூறியுள்ளது. இது ஒரு அருமையான நகைச்சுவையாகும்.
இறக்குமதி செய்யப்படும் உரத்தினை விநியோகிக்கும் விலையை இறக்குமதி நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. தற்போது யூரியா மூட்டை ஒன்றின் விலை 6,500 ரூபாவாகும். அன்று 500 ரூபாவிற்கு கொள்வனவு செய்த உரத்தினை இன்று 6,500 ரூபாவிற்கு கொள்வனவு செய்து விவசாயிகள் எவ்வாறு விவசாயம் செய்வார்கள்?
இவ்வாறு இரசாயன உரத்தைக கொள்வனவு செய்து நெல் ஒரு கிலோவினை 200 ரூபாவிற்கு வழங்க வேண்டியேற்படும் என்று கூறுகின்றனர். அவ்வாறெனில் அரிசியின் விலை 400 ரூபா வரை அதிகரிக்கும்.
விவசாயிகளும் இதனால் பாதிக்கப்படுவர். நுகர்வோரும் இதனால் பாதிக்கப்படுவர். கையாலாகாத அரசாங்கம் தற்போது மக்களை கொல்லாமல் கொல்லும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது. விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபடாவிட்டால் அடுத்த ஆண்டு பஞ்சம் ஏற்படும்.
சேதன உரம் தொடர்பில் பிரசாரம் செய்து கொண்டிருக்கும் அரசாங்கம் இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கும் அனுமதியளித்துள்ளது. களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை கூட இறக்குமதி செய்ய தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதானால் அரசாங்கம் எதற்கு?
இன்று மக்களுக்கு வாழக்கூடிய நிலைமை இல்லை. வாழ்க்கை செலவு 200 வீதமாக அதிகரிதுள்ளது. ஆனால் மக்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. செயல்பட முடியாத அரசு என்பதை நாடு முழுவதும் தற்போது நிரூபித்துள்ளது.
டொலர் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் இல்லை. 2.2 பில்லியன் டொலர் மாத்திரமே அந்நிய செலாவணி இருப்பில் உள்ளது. இவற்றில் தங்கத்தின் பெறுமதியைக் குறைத்தால் 1.5 பில்லியன் மாத்திரமே எஞ்சும். எமது உண்மையான அந்நிய செலாவணி இருப்பு இதுவேயாகும். அடுத்த ஆண்டாகும் போது 5 பில்லியன் வெளிநாட்டு கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது. அதனை செலுத்துவதற்கு தேவையான டொலர் எம்மிடம் இல்லை. நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.
ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தற்போதைய நிதி நிலைமை பற்றிய அறிக்கையைக் கோரியுள்ளார். இன்னும் அரசாங்கம் அதனை வழங்கவில்லை. எனவே உடனடியாக சர்வதேச நாணய நிதியத்தினை நாடி டொலர் நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
சர்வதேச நாணய நிதியம் எமக்கு கடன் வழங்கினால் ஏனைய நாடுகளும் எம்முடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட முன்வரும். எனினும் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்ல தயராக இல்லை. காரணம் அங்கிருந்து கிடைக்கும் நிதியில் மோசடி செய்ய முடியாது. அத்தோடு அரசாங்கத்தின் சில தரப்பினர் ஐ.தே.க. தலைவருடைய யோசனையை நடைமுறைப்படுத்தி அவர் பெருமையடைவதை விரும்பவில்லை.
நாடு என்ற ரீதியில் இலங்கை பாரதூரமான பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இந்த நெருக்கடிக்கு ஆளுந்தரப்பிலுள்ள எவரிடமும் தீர்வு இல்லை. தற்போது நாட்டின் தேவை டொலர் இருப்பாகும். அதனைப் பெற்றுக் கொள்வதற்கு சர்வதேசம் ஏற்றுக் கொண்ட ஒருவர் ஜனாதிபதியாக இருக்க வேண்டும். தற்போது பாராளுமன்றத்திலுள்ள சர்வதேசம் ஏற்றுக் கொண்ட ஒரேயொரு தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமேயாவார்.
அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் டொலர் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறும். அவ்வாறில்லை எனில் உணவு தண்ணீர் இன்றி பஞ்சத்தினால் உயிரிழக்க வேண்டிய நிலைமையே ஏற்படும்.
டொலர் தட்டுப்பாடு ஏற்படுமாயின் எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்படும். எரிபொருள் இறக்குமதி இடம்பெறாவிட்டால் அனைத்து சேவையும் ஸ்தம்பிதமடையும். மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு நிதி இன்மையால் சப்புகஸ்கந்த சுத்தீகரிப்பு நிலையமும் மூடப்பட்டுள்ளது.
இங்குதான் அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. மழை காரணமாக நீர் மின் உற்பத்தி நிலையங்கள் ஊடாக மின்சாரத்தினை அரசாங்கம் வழங்குகிறது. எதிர்காலத்தில் அதனை செய்ய முடியாத நிலைக்கு நாடு தள்ளப்படும். அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் அடுத்த ஆண்டு மின் துண்டிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இவை இவ்வாறிருக்க மறுபுறம் நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயு கசிவினால் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எரிவாயு சிலிண்டர் தொடர்பில் பரிசோதிப்பதற்கு நிறுவனமொன்று இல்லை என்று அமைச்சர் கூறுகின்றார்.
அரசாங்கம் முழு நாடும் அச்சமடையக் கூடிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த அரசாங்கத்தை வெளியேற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைவது அவசியம். எனவே எம்மிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் எம்முடன் கைகோர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். இல்லையேல் இந்தப் பிரிவை அரசாங்கம் எப்போதும் அதற்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்றார்.
No comments:
Post a Comment