(இராஜதுரை ஹஷான்)
நாட்டை பாதுகாப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினால் வீட்டின் சமையலறையை கூட பாதுகாக்க முடியவில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவத்திற்கு நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாக 24 மணித்தியாலத்திற்குள் தீர்வு வழங்காமல் இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்க குழு நியமித்துள்ளார். கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட குழுக்கள் மற்றும் செயலணியை போன்று இக்குழுவும் பிரச்சினையை மூடி மறைக்கக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் புதன்கிழமை (01) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் பல்வேறு பகுதிகளில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் வரலாற்றை தற்போது குறிப்பிட்டுக் கொண்டு தற்போதைய வெடிப்பு சம்பவம் புதிதானது அல்ல என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு கருத்துரைக்கிறார்.
நாட்டை பாதுகாப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினால் வீட்டின் சமையலறையை கூட பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கும், நிறுவனங்களின் நிலைப்பாட்டிற்கும் இடையில் பாரிய வேறுப்பபாடுகள் காணப்படுகின்றன.
எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பில் 24 மணித்தியாலத்திற்குள் தீர்வு முன்வைக்காமல் ஜனாதிபதி இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க குழு நியமித்துள்ளார்.
கடந்த காலங்களில் தோற்றம் பெற்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண குழுக்களும், ஜனாதிபதி செயலணிகளும் நியமிக்கப்பட்டன. அதனால் எவ்வித பயனும் ஏற்படவில்லை. காலப்போக்கில் பிரச்சினைகள் மூடி மறைக்கப்பட்டன.
எரிவாயு சிலிண்டர் விவகாரத்தில் தொடர் பிரச்சினை காணப்படுகிறது. ஆரம்பத்தில் எரிவாயு தட்டுப்பாடு, விலையேற்றம் பின்னர் எரிவாயு தட்டுப்பாடு தற்போது எரிவாயு சிலிண்டர் வெடிப்பு இவ்வியத்தில் ஏதேனும் மர்மம் உள்ளதா என்ற சந்தேகம் காணப்படுகிறது என்றார்.
No comments:
Post a Comment