(எம்.எம்.சில்வெஸ்டர்)
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரை உடனடியாக வேலையிலிருந்து விலக்க வேண்டும். அதைவிடுத்து, வேலையிலிருந்து இடை நீக்கம் செய்துவிட்டு மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான நடராஜா ரவிக்குமார் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் தாக்குதல் சம்பவத்துக்கு பின்னணியில் எதிர்க்கட்சியினர் சூழ்ச்சி செய்துள்ளனரா என்ற சந்தேகம் எழுகிறது. அத்துடன், இது எதிரணியில் இருக்கும் தமிழ் கட்சிகளின் சூழ்ச்சி இருந்திருக்குமோ என்ற சந்தேகம் நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில், "மாவீரர் தினத்தன்று முள்ளிவாய்க்காலில் ஊடகவியலாளரொருவர் மீது இராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர். வேலிக்கம்பியை பனை மட்டையில் சுற்றி தாக்குதல் நடத்தியிருந்தனர்.
அதுபோல், தற்போது பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வைத்து ஊடகவியலாளரொவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியுத்தியுள்ளனர்.
இந்த சம்பவங்களுக்கு தொடர்புடையவர்களை விசாரித்து சேவையிலிருந்து இடை நீக்கம் செய்வதை தவிர்த்துவிட்டு, அவ்வாறு அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களை, அரசாங்கம் உடனடியாக வேலையிலிருந்து நிறுத்த வேண்டும்.
அவ்வாறு சேவையிலிருந்து நிறுத்தினால் மாத்திரமே, இனிவரும் காலங்களில் அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் என சகலரும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கு அஞ்சுவார்கள்.
அதை விடுத்து அவர்களை விசாரணை செய்து, அவர்களை இடைநீக்கம் செய்துவிட்டு, பின்னர் மீண்டும் அவர்களை சேவையில் இணைத்துக் கொள்வதில் எந்த பிரயோசனமும் இல்லை.
உண்மையில், முள்ளிவாய்க்கால் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியமைக்கு அதிகாரம் அளித்தது யார்? இதன் பின்னணியில் இருப்பது யார்? இதனை மேற்கொண்ட இராணுவ வீரர்களை அரசாங்கம் சட்டத்துக்கு முன் நிறுத்தியுள்ளது.
இதற்காக நான் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், அரசாங்கத்துக்கும் நன்றி தெரிவிக்கிறேன். அரச அதிகாரிகள், பொலிஸார் என பலரும் இலஞ்சம் பெற்றுக்கொண்டு, அவர்களை விடுதலை செய்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
நாட்டில் ஊடக சுதந்திரத்தையும், ஊடகவியலாளர்களையும் பாதுகாப்பதற்கு எமது அரசாங்கம் முன்னின்று செயற்பட்டு வருகின்றது" என்றார்.
No comments:
Post a Comment