(நா.தனுஜா)
ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் சுகாதாரத் தரப்பினர் தொடர்ந்தும் தவறான ஆலோசனைகளையே வழங்கி வருகின்றார்கள். ஒமிக்ரோன் திரிபு நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இப்போது நாட்டின் சுகாதார நிபுணர்கள் உண்மை நிலைவரம் என்னவென்பதை வெளிப்படையாகப் பேசுவதுடன் இந்நிலையை ஒன்றுக்கு மேற்பட்ட கோணங்களில் அணுகுவது அவசியமாகும். மாறாக வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 'அரைகுறையான' உத்திகளைக் கையாளும்போது, அவை தோல்வியடைவதுடன் அதனால் பொதுமக்கள் மேலும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றார்கள் என்று சுகாதாரக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ரவீந்திர ரன்னன் எலிய சுட்டிக்காட்டியுள்ளார்.
விமான நிலையங்களில் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்கள் மிகவும் இறுக்கமாகப் பின்பற்றப்படுவதாகவும் பயணிகளின் கடந்த கால சுகாதார மருத்துவ அறிக்கைகள் விமான நிலையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் கொவிட்-19 வைரஸின் திரிபான 'ஒமிக்ரோன்' நாட்டிற்குள் உள்நுழைவதைத் தடுப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அவரது அந்தக் கருத்தை மேற்கோள்காட்டி வைத்தியநிபுணர் ரவீந்திர ரன்னன் எலிய அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, 'சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் மிக மோசமான ஆலோசனைகளை வழங்குகின்றார்கள். ஒமிக்ரோன் திரிபு நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ளவில்லை.
தற்போதைய தரவுகளின்படி வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன் குறைந்தபட்சம் 3 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.
அரசியல்வாதிகளில் அநேகமானவர்கள் வைத்தியர்களோ அல்லது சுகாதாரத் துறைசார் நிபுணர்களோ அல்ல. ஆகையினால் இப்போது நாட்டின் சுகாதார நிபுணர்கள் உண்மை நிலைவரம் என்னவென்பதை வெளிப்படையாகப் பேசுவதுடன் இந்நிலையை ஒன்றுக்கு மேற்பட்ட கோணங்களில் அணுகுவது அவசியமாகும். அதனைச் செய்வதற்கான கோரிக்கை அரசியல்வாதிகளிடமிருந்து எழுவதுடன் இதுபற்றி ஊடகங்கள் மேலும் பல கேள்விகளை எழுப்ப வேண்டும்.
கொவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவலுக்கு எதிராகப் போராடுவதற்கான கட்டுப்பாடுகளைத் தாங்கிக் கொள்வதற்குப் பொதுமக்கள் தயாராக இருக்கின்றார்கள். ஆனால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாம் 'அரைகுறையான' உத்திகளைக் கையாளும்போது, அவை தோல்வியடைவதுடன் அதனால் பொதுமக்கள் மேலும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றார்கள்' என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை திரிபடைந்த ஒமிக்ரோன் வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தாமதப்படுத்த மாத்திரமே முடியும் என்றும் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை இறுக்கமாகக் கடைப்பிடிப்பது அதில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கும் என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியநிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ள நிலையில், அதனை மேற்கோள்காட்டி செய்திருக்கும் டுவிட்டர் பதிவில் ரவி ரன்னன் எலிய மேலும் கூறியிருப்பதாவது,
'இவ்விடயத்தில் போதிய ஆலோசனைகள் வழங்கப்படவில்லை என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணமாகும். இப்போது பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது மிகவும் அவசியமாகும். ஒமிக்ரோன் திரிபு நாட்டிற்குள் நுழைவதைத் தாமதிப்பது மாத்திரம் போதுமானதல்ல.
தற்போது எமக்குள்ள கால அவகாசத்தைப் பயன்படுத்தி எமது நாட்டின் எல்லைக்குள் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான வலுவான செயற்திட்டத்தை உருவாக்கா விட்டால், நாம் நேரத்தை வீணடிக்கின்றோம் என்பதே அதன் அர்த்தமாகும்.
நாளொன்றுக்கு 8000 பரிசோதனைகளை மேற்கொள்வதென்பது எவ்வகையிலும் பயனளிக்கப் போவதில்லை. பிரென்டிக்ஸ் கொத்தணியைக் கண்டறிவதிலோ அல்லது அல்பா மற்றும் டெல்டா திரிபுகளைக் கட்டுப்படுத்துவதிலோ அது உதவவில்லை. அதேபோன்று தற்போது ஒமிக்ரோன் திரிபைக் கட்டுப்படுத்துவதற்கும் அது உதவாது.
ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் சுகாதாரத் தரப்பினர் தொடர்ந்தும் தவறான ஆலோசனைகளையே வழங்கி வருகின்றார்கள். நாட்டை முடக்குவதை விரும்பாத அரசியல்வாதிகள், அதற்குப் பதிலாக செயற்திறனான மாற்றுவழிகள் எதனையும் முன்வைக்கவில்லை.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத் தடுப்பூசி வழங்குவது மாத்திரம் போதுமானதல்ல. மாறாக பெருமளவிற்கு பரிசோதனைகளின் எண்ணிக்கையையும் தனிமைப்படுத்தலையும் அதிகரிப்பதன் ஊடாகவே அதனைச் சாத்தியப்படுத்த முடியும் என்பதே அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு அந்நாட்டு சுகாதாரத் தரப்பினர் வழங்கிய ஆலோசனையாகும்.
அத்தகைய செயன்முறையைக் கையாள்வதன் ஊடாக ஒப்பீட்டளவில் வைரஸ் பரவலின் தீவிரத்தைக் குறைத்துக் கொள்ள முடிவதுடன் பொருளாதாரத்தையும் பாதுகாக்க முடியும்' என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment