(நெவில் அன்தனி)
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்டு வரும் சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் ஏற்கனவே ஒரு ஆட்சேப மனு கிடப்பில் இருக்கின்ற நிலையில் இரண்டாவது ஆட்சேப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் திங்களன்று நடைபெற்ற சுப்பர் லீக் போட்டியின் போது சீ ஹோக்ஸ் அணி, போட்டி விதிகளை மீறியதாக அப்கன்ட்றி லயன்ஸ் சார்பில் எழுத்து மூலம் ஆட்சேபனை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
போட்டி முடிவடைந்த சொற்ப நெரத்தில் ஆட்சேப மனுவுக்கான கட்டணத்துடன் இந்த ஆட்சேப மனுவை, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் போட்டி ஏற்பாட்டுக்குழு தலைவரிடம் சமர்ப்பித்ததாக அப்கன்ட்றி லயன்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போட்டி விதிகளின் பிரகாரம் 'மார்க்கி வீரர் அதாவது 20 வயதுக்குட்பட்ட வீரர் ஒருவர் 90 நிமிடங்கள் விளையாடுவது கட்டாயமாகும். போட்டி ஆரம்பமான போது 20 வயதுக்குட்பட்ட வீரான மொஹமத் குர்ஷித்தை முதல் பதினொருவர் அணியில் சீ ஹோக்ஸ் இணைத்துக் கொண்டிருந்தது.
ஆனால், 28அவது நிமிடத்தில் குர்ஷித்தை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக 20 வயதுக்கு மேற்பட்ட வீரராக மதுரங்க பெரேராவை மாற்றுவீரராக களத்துக்குள் சீ ஹோக்ஸ் முகாமைத்துவம் அனுப்பியதாக தனது ஆட்சேப மனுவில் அப்கன்ட்றி லயன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் 44 நிமடங்களுக்கு 20 வயதுக்குட்பட்ட வீரர் ஒருவரை சீ ஹோக்ஸ் களம் இறக்காமல் விளையாடியதாகவும் 72ஆவது நிமிடத்திலேயே மார்க்கி வீரர் அவிஷ்க கவிந்து மாற்று வீரராக களம் நுழைந்தாகவும் அப்கன்ட்றி லயன்ஸின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆட்சேப மனு மீதான விசாரணை உடனடியாக நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என சம்மேளனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அப்கன்ட்றி லயன்ஸ் அணியுடனான போட்டியில் சீ ஹோக்ஸ் 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றதாக சம்மேளனத்தின் போட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்ற றினோன் அணிக்கும் களுத்துறை புளூ ஸ்டார் அணிக்கும் இடையிலான மற்றொரு போட்டி கோல் எதுவும் போடப்படாமல் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
இது இவ்வாறிருக்க, சுப்பர் லீக்கின் ஆரம்பப் போட்டியில் கலம்போ எவ்சி, தகுதியற்ற வீரர் ஒருவரை களம் இறக்கியதாகத் தெரிவித்து வென்னப்புவை நியூ யங்ஸ் கழகம் சமர்ப்பித்த எழுத்துமூல ஆட்சேபனை 6 மாதங்கள் கடந்தும் கிடப்பில் இருந்துவருகின்றது.
இது தொடர்பான விசாரணைகள் சில தினங்களுக்கு முன்னரே ஆரம்பமானதாக சம்மேளன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment