(எம்.எப்.எம்.பஸீர்)
பிரதிவாதி தரப்பு சாட்சியங்களை ஆராயாமலே, குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியை விடுதலை செய்வதா என்பது குறித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (2) தனது தீர்மானத்தை அறிவிக்கவுள்ளது.
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மனுதாரர் தரப்பு சாட்சி விசாரணைகள் கடந்த 19 ஆம் திகதி நிறைவு பெற்றுள்ளன.
அன்றையதினம் 4 ஆம் நாளாக முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சியங்கள் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரண ராஜா முன்னிலையில் நெறிப்படுத்தப்பட்டு நிறைவு செய்யப்பட்டன.
இதனையடுத்து பிரதிவாதி தரப்பு சாட்சி விசாரணை இன்றி, பிரதிவாதி அசாத் சாலியை விடுதலை செய்யுமாறு அசாத் சாலி சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கோரிக்கை விடுத்திருந்தார்.
பிரதிவாதி தரப்பு சாட்சி விசாரணை இன்றி, பிரதிவாதியை விடுதலை செய்வதா, இல்லையா என்பது தொடர்பில் இன்று டிசம்பர் 02 ஆம் திகதி தீர்ப்பளிப்பதாக இதன்போது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா அறிவித்திருந்தார்.
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் வழக்குத் தொடுநர் தரப்பு சாட்சிகளை விசாரணை செய்யும் நடவடிக்கை, மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில், கடந்த 2, 9,11, 19ஆம் திகதிகளில் இடம்பெற்றிருந்தன.
வழக்குத் தொடுநர் சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய சிரேஷ்ட அரச சட்டவாதி வசந்த பெரேராவின் நெறிப்படுத்தலில் சாட்சியம் பதிவு செய்யப்பட்டதுடன், அசாத் சாலிக்காக மன்றில் அசான் நாணயக்கார, சரித்த குணரத்ன ஆகிய சட்டத்தரணிகளுடன் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவால் அச்சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டன.
இதனையடுத்தே பிரதிவாதிகள் தரப்பு சாட்சிகளை கேளாது, அசாத் சாலியை விடுவிக்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரனி மைத்திரி குணரத்ன தனது வாதத்தை அசாத் சாலிக்காக முன் வைத்தார். இந் நிலையிலேயே அது தொடர்பிலான தீர்மானத்தை அறிவிக்க வழக்கு இன்று 2 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மேல் நீதிமன்ற வழக்கு
முன்னதாக அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபர் எச்.சி./2778/2021 எனும் இலக்கத்தில் கீழ் வழக்குத் தொடுத்துள்ளார். அதில் அசாத் சாலிக்கு எதிராக இரு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
குற்றச்சாட்டுக்கள்
கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில், கொழும்பு மேல் நீதிமன்ற அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி மத, இன பேதங்களை தோற்றுவிக்கும், வன்மத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறி 1988 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சட்டம் மற்றும் 1982 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க சட்டங்களால் திருத்தப்பட்ட 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) ஏ பிரிவுடன் இணைத்து பர்க்க வேண்டிய 2 (2) ( ஈ ) அத்தியாயத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை அசாத் சாலி புரிந்துள்ளதாக முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
ஐ.சி.சி.பி.ஆர். இன் கீழும் குற்றச்சாட்டு
அத்துடன் இதே சம்பவம் காரணமாக 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் (ஐ.சி.சி.பி.ஆர்.) 3 (1) ஆம் உறுப்புரையுடன் இணைத்து பர்க்க வேண்டிய 3 (3) ஆம் உறுப்புரையின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை அசாத் சாலி புரிந்துள்ளதாக அவர் மீது முன் வைக்கப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
56 சாட்சியாளர்கள்
இக்குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்காக சட்ட மா அதிபரால் 56 சாட்சியாளர்களின் பெயர் பட்டியல் மேல் நீதிமன்றுக்கு பட்டியலிட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சான்றுப் பொருட்களாக இறுவெட்டுக்கள், மெமரி சிப் , ஊடக சந்திப்பு பிரதி, கடிதம் ஒன்று ஆகியனவும் சட்ட மா அதிபரால் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment