பாகிஸ்தான் சியால்கோட் பகுதியில் அடித்து துன்புறுத்தப்பட்டு, எரியூட்டிக் கொலை செய்யப்பட்ட இலங்கை பிரஜையான பிரியந்த குமார தியவடனவின் உடல் எச்சங்கள் இன்று (6) நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று மாலை 5 மணிக்கு பிரியந்தவின் உடல் எச்சங்கள் கொண்டு வரப்பட்டது.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 186 விமானத்தின் மூலம் பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்திலிருந்து கொண்டு வரப்பட்டது.
இந்த விமானம் பாகிஸ்தான் நேரப்படி இன்று மதியம் 12.30 மணியளவில் இலங்கை நோக்கி பயணிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் இன்று காலை தெரிவித்திருந்தது.
நாட்டிற்கு கொண்டு வரப்படும் பிரியந்த குமார தியவடனவின் உடல், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாறு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், பிரியந்தவின் சொந்த ஊரான கனேமுல்ல பகுதிக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. பிரியந்தவின் இறுதிக்கிரியைகளை 8ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
பிரியந்தவின் உடல் அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
இதேவேளை, பிரியந்த குமார தியவடனவின் உடலை குறுகிய காலத்திற்குள் தம்மிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்த பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் பஞ்சாப் மாநில அரசாங்கம் ஆகியவற்றுக்கு பாகிஸ்தானுக்கான இலங்கை உயர் ஆணையம் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment