மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியின் வீட்டு கொள்ளை : விசாரிக்க 4 குழுக்கள், பொலிஸார் பிரிந்து சென்று விசாரணையில் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 19, 2021

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியின் வீட்டு கொள்ளை : விசாரிக்க 4 குழுக்கள், பொலிஸார் பிரிந்து சென்று விசாரணையில்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முதலியார் வீதியிலுள்ள மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியின் வீட்டில் நேற்று முன்தினம் (18) அதிகாலை கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

அதிகாலை 2.00 மணியளவில் குறித்த வீட்டுக்குள் நுழைந்துள்ள இருவர் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்ப கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் கொள்ளையர்களை அடையாளம் காணவும் அவர்களைக் கைது செய்யவும், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கமல் சில்வாவின் நேரடி கட்டுப்பாட்டில் 4 சிறப்பு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொலிஸார் பிரிந்து சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியின் மனைவிக்கு சொந்தமான அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முதலியார் வீதியிலுள்ள வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்களில் ஒருவன் நீதவானின் மனைவியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்துள்ளான். அதன் பெறுமதி சுமார் 10 இலட்சம் ரூபா வரை இருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையை தடுக்க முற்பட்ட நீதிபதியை சந்தேக நபர் தாக்கியதுடன், தாக்குதலில் நீதவானின் கை மற்றும் கால்களில் சிறு காயமேற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந்த சம்பவம் இடம்பெறும்போது, நீதிவானின் தனிப்பட்ட பாதுகாவலர் அங்கிருக்கவில்லை என கூறும் பொலிஸார், நீதிவானின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு பூரண பாதுகாப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கரைப்பற்றிலுள்ள கொள்ளையிடப்பட்ட தனிப்பட்ட வீட்டுக்கு பாதுகாப்பு அதிகாரிகளை நீதிபதி அழைக்காததால் அவர்கள் அங்கு செல்லவில்லை என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment