(எம்.எப்.எம்.பஸீர்)
பாகிஸ்தான், பஞ்சாப் மாநிலம் சியல்கோட்டில் சித்திரவதைக்குட்படுத்தி எரித்து கொலை செய்யப்பட்ட இலங்கை முகாமையாளர் பிரியந்த குமாரவின் சடலம் இன்று (06) நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் இந்த சடலத்தை கொண்டுவர பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர் ஸ்ட்ர்ஹனைகராலயம் ஊடாக போதுமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சடலத்தை நாட்டிற்கு கொண்டுவருவது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான செலவை ஏற்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாகிஸ்தானுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம தெரிவித்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில், பாகிஸ்தான் அரசாங்கத்தினால் முழுமையான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நட்டஈடு தொடர்பிலான பேச்சுக்கள், பிரியந்த குமாரவின் தொழில் வழங்குநர் மற்றும் பாகிஸ்தான் அரசின் தலையீட்டுடன் இடம்பெற்று வருவதாக அறிய முடிகிறது.
விசாரணை நிலைமை
இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பஞ்சாப் பொலிஸார் விஷேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பஞ்சாப் மாகாண பொலிஸ்மா அதிபர் சர்தார் அலி கானின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அந்த விசாரணைகளில் நேற்று (5) மாலை வரை சுமார் 235 பேர் வரை கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் இந்த கொடூர கொலையுடன் தொடர்புடைய, 'ராஜ் கோ இன்டஸ்ட்ரீஸ்' எனும் ஆடை தொழிற்சலையின் மேற்பார்வையாளர் ஒருவர் உட்பட 13 முக்கிய சந்தேக நபர்களும் அடங்குவதாக பாகிஸ்தான் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவடன பணியாற்றிய இந்த ஆடை தொழிற்சலையில் உள்ள, 160 சி.சி.ரி.வி. கமராக்களின் 24 மணி நேர பதிவு விசாரணையாளர்களால் பெறப்பட்டு, அதனை அடிப்படையாகக் கொண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் , மேலும் பலர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை கைது செய்ய 10 சிறப்பு பொலிஸ் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், தொலைபேசி கோபுர தகவல்கள், மற்றும் அறிவியல் தடயங்களை வைத்து அவர்களை தேடி வருவதாகவும் சியால்கோட், மாவட்ட பொலிஸ் அத்தியட்சர் (டி.பி.ஓ) உமர் சஹீட் மலிக் கூறினார்.
எவ்வாறாயினும் இதுவரை 900 பேருக்கு எதிராக இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் தரப்பால் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூர கொலை பதிவான தொழிற்சாலை மற்றும் வரிசாபாத் வீதிப் பகுதி அமைந்துள்ள, அகோகி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி (எச்.எச்.ஓ.) அர்மான் மக்த் இந்த முதற் தகவல் அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.
பாகிஸ்தான் தண்டனை சட்டக் கோவையின் 302, 397, 120, 427, 431, 157, 149 ஆம் அத்தியாயங்களின் கீழும், பாகிஸ்தானின் பயங்கரவாத தடைச் சட்டத்தின் 7 மற்றும் 11 அவது அத்தியாயங்களின் கீழும் தண்டனைக்குரிய குற்றங்களை சந்தேக நபர்கள் புரிந்துள்ளதாக கூறியே, இந்த முதல் தகவல் அறிக்கை இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர்கள் 13 பேரும் குற்றவியல் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு, 24 மணி நேர பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.
பர்ஹான் இத்ரீஸ், சபூர் பட், தல்ஹா, அப்துர் ரஹ்மான், இம்ரான், தைமுர், சுஹைப், ரஹீல், உஸ்மான், சஹ்சைப், நாசிர், இஹ்திசாம் மற்றும் ஜுனைட் ஆகிய பிரதான சந்தேக நபர்களே இவ்வாறு பொலிஸ் கவலில் எடுக்கப்பட்டுள்ளனர். அவர்களை அவ்வாறு பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க குற்றவியல் நீதிமன்றின் நீதிவான் சரீப் அஹமட் அனுமதியளித்துள்ளார்.
இந்நிலையில் அவர்கள் இன்று ( 6) குஜ்ரன்வாலா பயங்கரவாத தடுப்பு நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவர் என பஞ்சாப் பொலிஸர் தெரிவித்தனர்.
சம்பவமும் பின்னணியும்
பேராதனை பல்கலைக்கழகத்தில் உற்பத்தி பொறியியலாளராக பொறியியல் துறையில் பட்டம் பெற்ற பிரியந்த குமார தியவதன, முதலில் இலங்கையில் பிரன்டிக்ஸ் ஆடை உற்பத்தி நிலையத்தில் சேவையாற்றியதுடன் அதன் பின்னர் 11 வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானுக்கு சென்றிருந்தார்.
48 வயதான அவர் கனேமுல்ல கெந்தலியத்தபாலுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர். இரு பிள்ளைகளின் தந்தையான அவர், சியால்கோட் நகரிலுள்ள ராஜ்கோ இன்ட்ரஸ்ட்ரீஸ் தனியார் ஏற்றுமதி தொழிற்சாலையொன்றில் முகாமையாளராக கடமையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் இஸ்லாத்துக்கு எதிராக மத நிந்தனையில் ஈடுபட்டதாக வெள்ளிக்கிழமை (3) காலை தகவல் பரவியுள்ளது.
"தொழிற்சாலையில் இந்தத் தகவல் பரவியதும் ஏராளமான ஊழியர்கள் தொழிற்சாலை முன்பு, திரண்டு போராட்டம் நடத்தினர். பின்னர் பிரியந்த குமார தியவடனவை உடல் ரீதியான துன்புறுதலுக்கு உள்ளாக்கி எரித்துக் கொன்றனர்," என்று சம்பவத்தை நேரில் பார்த்த முகமது பஷீர் என்பவர் பி.பீ.சி.யிடம் கூறியுள்ளார்.
நூற்றுக் கணக்கானோர் ஒன்று திரண்டிருந்த நேரத்தில், இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை மு.ப. 11.35 மணியளவில் மீட்புதவி துறையினருக்கு இந்த நிகழ்வு தொடர்பாக தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அவர்கள் அங்கு செல்லும் முன்னரே பிரியந்த குமார தியவடன எரித்துக் கொல்லப்பட்டுள்ளார் என பஞ்சாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த முகாமையாளருக்கு எதிராக வெள்ளிக்கிழமை காலை முதலே செய்திகள் பகிரப்பட்டு வந்தாலும், முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று சியால்கோட்டில் உள்ள உள்ளூர் ஊடகவியலாளர் யாசிர் ராசா பிபிசி உருது மொழி சேவையிடம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பஞ்சாப் பொலிஸாரின் விசாரணைகளுக்கு அமைய, பிரியந்த குமார முகாமையாளராக கடமையாற்றிய தொழிற்சாலையில், புதிதாக வெள்ளையடிக்கப்பட்டு வருவதாகவும், அதனை மையப்படுத்தி ஒட்டப்பட்டிருந்த சில அறிவித்தல்களை அகற்ற அவர் ஆலோசனை வழங்கியிருந்ததாகவும் அறிய முடிகிறது.
இதனை, தொழிற்சாலைக்குள், முகாமையாளருக்கு எதிராக மத நிந்தனையாக சிலர் பரப்பியதால் நிலைமை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சி.சி.ரி.வி. காணொளிகளை மையப்படுத்தி அது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தனர்.
வன்முறையாளர்கள் பிரியந்த குமாரவை தாக்கும் போது, அவரை காப்பாற்ற தொழிற்சாலையில் சிலர் முயன்றுள்ளதாக சி.சி.ரி.வி. காணொளி ஊடாக தெரியவந்துள்ளது. அவர்கள் வன்முறையாளர்களிடமிருந்து பிரியந்த குமாரவை காப்பாற்ற போராடுவதும், ஒரு கட்டத்தில் அவரை மேல் மாடிக்கு அனுப்பி வைப்பதும் அதில் பதிவாகியுள்ளது.
மேல் மாடி நோக்கி செல்லும் பிரியந்த குமாரவை வன்முறையாளர்கள் துரத்தியுள்ள நிலையில், அவர் சூரிய மின் சக்தி தொடர்பிலான அறையில் ஒளிந்துகொண்டுள்ளார்.
பின்னர் அங்கு செல்லும் வன்முறையாளர்கள், அங்கு வைத்து அவரை மிக மோசமாக தாக்கியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர்களில் சிலர் அதில் உள்ளடங்குகின்றனர்.
அந்த தாக்குதலிலிருந்து பிரியந்தவை மீட்க, தொழிற்சாலையின் உற்பத்தி முகாமையாளர் முயன்றுள்ள போதும், அது சாத்தியப்படாத நிலையில், பிரியந்த குமாரவை மாடியிலிருந்து தூக்கி வரிசாபாத் வீதிக்கு வீசியுள்ளனர். அதன் பின்னரேயே வீதியில் அவரை எரித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை பிரகாரம், பிரியந்த குமாரவின் உடலில் 99 வீதமான பாகங்கள் எரிந்துள்ளன. அத்துடன் அனைத்து டிசுக்களும் சேதமடைந்துள்ளதுடன் எலும்புகள் அனைத்தும் நொருங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பிரியந்தவின் மனைவி நிரோஷி தசநாயக்கவின் கோரிக்கை
''தனது கணவர் ஓர் அப்பாவி. வெளிநாட்டில் சேவை செய்த போது, மிலேச்சத்தனமாக கொலை செய்யப்பட்டதை நான் செய்திகளிலேயே பார்த்தேன். அதன் பின்னர் இணையத்தளத்திலும் அதனை பார்த்தேன். மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தி, கணவருக்கும், இரண்டு பிள்ளைகளுக்கும் நியாயத்தை பெற்றுத் தருமாறு இலங்கை ஜனாதிபதி, பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் மிகத் தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றேன்," என அவரது மனைவி நிரோஷி தசநாயக்க கோரியுள்ளார்.
இதேவேளை, கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் சகோதரனான கமலசிறி சாந்த குமாரவும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
இனவாத குழுவொன்று தொழிற்சாலைக்குள் போராட்டங்களை நடத்திய சந்தர்ப்பத்திலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவே அறிய முடிகின்றது என அவரது சகோதரன் தெரிவிக்கின்றார்.
''சியல்கொட் தொழிற்சாலைக்கு 2012ம் ஆண்டே அவர் சென்றார். அன்று முதல் இறுதி வரை அதே தொழிற்சாலையில்தான் கடமையாற்றினார். அந்த தொழிற்சாலைக்கு முழுமையாக அவரே பொறுப்பாக இருந்தார். உரிமையாளருக்கு அடுத்ததாக அவரே இருந்தார்.
இனவாத குழுவொன்று உள்ளே பதாகைகளை ஒட்டியுள்ளனர். பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தையும் நடத்தியுள்ளனர். அந்த சந்தர்ப்பத்திலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக தற்போது அறிய கிடைக்கின்றது," என கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் சகோதரன் கமலசிறி சாந்த குமார தெரித்தார்.
பஞ்சாப் மாகாண முதலமைச்சர் கூறுவதென்ன?
இதுவொரு கொடூரமான சம்பவம் என பஞ்சாப் மாகாண முதலமைச்சர் உஸ்மான் பஸ்தார் தெரிவித்துள்ளார்.
"இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். சட்டத்தை கையில் எடுக்க எவருக்கும் அனுமதி இல்லை. மனிதாபிமானமற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் தப்பிக்கமாட்டார்கள் என்பது உறுதி," என அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment