கிண்ணியா - குறிஞ்சாக்கேணி படகு விபத்து மரணம் 08 ஆக உயர்வு - News View

About Us

About Us

Breaking

Saturday, December 4, 2021

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி படகு விபத்து மரணம் 08 ஆக உயர்வு

திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்துடன் தொடர்புடைய மற்றுமொரு பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த பெண் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான சக்கரிய்யா காலிஸா (42) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த நவம்பர் மாதம் 23ஆம் திகதி குறிஞ்சாக்கேணி படகுப்பாதை கவிழ்ந்ததில் நீரில் மூழ்கிய நிலையில் படுகாயமடைந்த குறித்த பெண் கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலைக்கும் பின்னர் திருகோணமலையிலிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கும் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

கிளிநொச்சி வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர், 12 நாட்களுக்குப் பின்னர் நேற்று இரவு 9:00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

அந்த வகையில், கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண்ணின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் கிளிநொச்சி வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறிஞ்சாக்கேணியில் பழைய பாலத்திற்குப் பதிலாக களப்பு பகுதியில் புதிய பாலமொன்று நிர்மாணிக்கப்படுகின்றது.

குறித்த பால நிர்மாண வேலைகள் நடப்பதன் காரணமாக தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு பயன்படுத்தப்பட்டது.

பாடசாலை மாணவர்கள் உட்பட பிரதேச மக்கள் தமது அன்றாட பயண நடவடிக்கைகளுக்கு குறித்த மிதப்பு பாலத்தைப் பயன்படுத்தினர்.

இந்நிலையில் 23.11.2021 அன்று குறித்த படகு கவிழ்ந்ததில் 27 பேர் நீரில் மூழ்கிய நிலையில் 6 பேர் உயிரிழந்தோடு, சிறுமி ஒருவர் கைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment