சாய்ந்தமருது மக்களின் தாகத்தை தீர்த்து வைக்க கடிதங்களை கையளிக்கிறேன் : திருமலை எம்பிக்கள் தொடர்பில் நான் கவலையடைகிறேன் : மாகாண சபை முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் - ஏ.எல்.எம். அதாஉல்லா - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 24, 2021

சாய்ந்தமருது மக்களின் தாகத்தை தீர்த்து வைக்க கடிதங்களை கையளிக்கிறேன் : திருமலை எம்பிக்கள் தொடர்பில் நான் கவலையடைகிறேன் : மாகாண சபை முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் - ஏ.எல்.எம். அதாஉல்லா

நூருல் ஹுதா உமர்

மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சினால் சாய்ந்தமருது மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சாய்ந்தமருது பிரதேச சபையை வழங்க வேண்டும் என எத்தனங்கள் பலமுறை நடந்தது. அந்த அமைச்சின் அமைச்சர் ஜனகபண்டார தென்னகோன் இருக்கத்தக்கதாக பிரதமரின் தலைமையில் கிழக்கின் முக்கியஸ்தர்கள் அடங்களாக எல்லோருடைய பங்குபற்றலுடனும் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தின் தீர்மானமாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வெளியான வர்த்தமானியும் சில இனவாதிகளின் பிரச்சாரங்களினால் தற்காலியமாக இடைநிறுத்தப்பட்டாலும் அது வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலான நியாயங்களை ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், முக்கியஸ்தர்கள் பலருக்கும் 15.07.2021 இல் நாங்கள் கடிதமாக எழுதியிருந்தோம். அதில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பையும் இணைத்துள்ளோம்.

அந்த மக்களின் கோரிக்கைக்கு அமைய அந்த மக்களின் தாகத்தை விரைவில் தீர்த்து வைப்பார்கள் என்று கூறி அந்த கடிதங்களை பாராளுமன்ற உரை தொகுப்பில் இடம்பெற கையளிக்கிறேன் என மாகாண சபைகள் உள்ளுராட்சி மன்ற முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தொடர்ந்தும் உரையாற்றும் போது நேற்றையதினம் கிண்ணியாவில் நடைபெற்ற எதிர்பாராத விபத்தை எண்ணி நாங்கள் எல்லோரும் வேதனையடைகிறோம்.

திருகோணமலையில் உள்ள சகல பாலங்களும் அன்றைய ஜனாதிபதியும், இன்றைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ச அவர்களும், நானும் முதலாவது கல்லை நாட்டியதிலிருந்து ஆரம்பமானது. திருகோணமலையில் உள்ள சகல பாலங்களையும் அந்த அரசில் தன்னால் முடியுமான வரை நிர்மாணித்து போக்குவரத்தை இலகுபடுத்தினார்.

குறிஞ்சாக்கேணி பாலத்தை முறையாகவும், அழகாகவும் நிர்மாணிக்க வேண்டிய தேவையிருந்தது. அது முறையாக இடம்பெறவில்லை அதனை சுட்டி நாங்கள் யாரையும் குற்றம் கூற இங்கு முன்வரவில்லை.

கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள கிண்ணியா நகர சபை இந்த இழுவைப் படகு சேவையை முறையாக நடத்த முடியாமல் போனதையிட்டு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் நான் கவலையடைகிறேன். இப்படியான இழப்புக்கள் நமக்கு தேவையில்லை.

இது ஒருபுறமிருக்க ஒரே நாடு ஒரே சட்டம் பற்றி பேசும் நாங்கள் 09 மாகாணங்களிலும் 09 மாகாண அரசுகளும் மத்தியில் ஒரு அரசாங்கமுமாக மொத்தம் 10 அரசுகள் உள்ளது. மாகாண சபை முறைமை இல்லாதொழிக்கப்பட்டு அவற்றை ஒரு அரசாங்கமாக மாற்ற வேண்டும்.

இந்த நாட்டின் அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டு வந்து தமிழர்களின் பிரச்சினைகள், முஸ்லிங்களின் பிரச்சினைகள், நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வுத்திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment