'சண்டே லீடர்' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை : மக்கள் தீர்ப்பாயத்தில் விசாரணைகள் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 3, 2021

'சண்டே லீடர்' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை : மக்கள் தீர்ப்பாயத்தில் விசாரணைகள் ஆரம்பம்

(நா.தனுஜா)

'சண்டே லீடர்' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை விவகாரம், நெதர்லாந்தின் ஹேக் நகரில் நிறுவப்பட்டுள்ள 'ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயத்தில்' செவ்வாய்க்கிழமை (2) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்படி ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை மற்றும் அப்படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துவதில் நிலவும் தொடர் தோல்வி ஆகியவற்றுக்காக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டு, மேற்படி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச ரீதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் படுகொலைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டும் நோக்கில், வரையறுக்கப்படாத சுதந்திர ஊடகம், எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு மற்றும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பு ஆகிய மூன்று சர்வதேச அமைப்புக்கள் இணைந்து கடந்த செப்டெம்பர் மாதம் 'ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம்' என்ற கட்டமைப்பை ஸ்தாபித்தன.

அத்தீர்ப்பாயத்தின் ஊடாக உலகளாவிய ரீதியில் தமது தொழிலில் ஈடுபட்டமைக்காகப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் லசந்த விக்ரமதுங்க, ஜமால் கஷோக்கி மற்றும் டெப்னி ஆன் கருவானா கலிஸியா ஆகியோரின் படுகொலைகள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவிற்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினமான நேற்று (நவம்பர் 2) முதற்கட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

மேற்படி ஊடகவியலாளர்களின் படுகொலைகள் தொடர்பில் நீதியை நிலைநாட்டத் தவறியமைக்காக முறையே இலங்கை, சவுதி அரேபியா மற்றும் மால்டா ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் மீது ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் குற்றம் சாட்டியுள்ளது.

நெதர்லாந்தின் ஹேக் நகரிலேயே சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் நிறுவப்பட்டுள்ள நிலையில் ஊடக சுதந்திரத்தை முன்னிறுத்தி நெதர்லாந்தைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் வரையறுக்கப்படாத சுதந்திர ஊடகம் என்ற அமைப்பானது எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு மற்றும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பு ஆகியவற்றுடன் கூட்டிணைந்து உருவாக்கியுள்ள 'உண்மையைப் பாதுகாப்பதற்கான ஓர் உலகம்' என்ற தலைப்பிலான செயற்திட்டத்தின் கீழேயே தற்போது இந்த ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் நிறுவப்பட்டுள்ளது.

அத்தீர்ப்பாயத்தின் ஊடாக இலங்கை நேரப்படி நவம்பர் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணி வரை மேற்குறிப்பிட்ட ஊடகவியலாளர்களின் படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

சட்டத்தரணி ஹொவார்ட் மொரிஸனின் அனுசரணையுடன் மனித உரிமைகள் தொடர்பான பிரபல சட்டத்தரணி அல்முடெனா பெர்னாபேயூவினால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் ஊடக சுதந்திரம் குறித்த சட்டவல்லுனர்கள் அடங்கிய உயர்மட்டக்குழுவின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான பாரோனெஸ் ஹெலெனா கென்னடியினால் விசேட உரையொன்றும் நிகழ்த்தப்பட்டது.

அதுமாத்திரமன்றி 'ரப்லர்' ஊடகத்தின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியும் இவ்வாண்டின் நோபல் பரிசு வெற்றியாளருமான மரியா ரெஸ்ஸா, மத்திய கிழக்கு கற்கைகள் தொடர்பான ஆய்வாளரும் துறைசார் நிபுணருமான ஹெற்றிஸ் சென்ஜிஸ், ஊடகவியலாளரும் டெப்னி ஆன் கருவானா கலிஸியா பவுண்டேஷனின் பணிப்பாளர் மெத்தியூ கருவானா கலிஸியா, பரிஸ்டர் கயொல்பியொன் கலகெர், ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜொயெல் சிமொன், எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் கிறிஸ்ரோப் டெலொய்ர் ஆகியோரிடம் சாட்சியங்களும் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment