அருட்தந்தை சிறில் காமினி ஏன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் : காரணம் கூறுகிறார் பொலிஸ் பேச்சாளர் - News View

Breaking

Monday, November 22, 2021

அருட்தந்தை சிறில் காமினி ஏன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் : காரணம் கூறுகிறார் பொலிஸ் பேச்சாளர்

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரிதமாக நீதியை நிலைநாட்டுவதற்காகவே அருட்தந்தை சிறில் காமினியிடம் உள்ள தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக அவர் குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். எனினும் பொலிஸார் மற்றும் குற்ற விசாரணைப் பிரிவினரால் அவரை கைது செய்வதற்கு முயற்சிக்கப்படுவதாக வெவ்வேறு தரப்பினரால் அடிப்படையற்ற வகையில் கருத்துக்கள் வெளியிடப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில், அருட்தந்தை சிறில் காமினிக்கு தெரிந்த தகவல்கள் தொடர்பில் வாக்கு மூலம் பெறுவதற்காக அவர் இதற்கு முன்னர் இரு சந்தர்ப்பங்களில் குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டார்.

அதே போன்று இன்றையதினமும் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு தொடர்பில் வெவ்வேறு தரப்பினரும் பல்வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி தேசிய மற்றும் சர்வதேச மக்கள் மத்தியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான திட்டமிடல் மற்றும் அதனுடன் தொடர்புடைய தகவல்கள் பல தன்வசம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவிற்கு முறைப்பாடொன்று கிடைக்கப் பெற்றிருந்தது. அந்த முறைப்பாட்டுக்கமையவே அவர் குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டார்.

எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் பலர் திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்களை வெளியிடுவதோடு, பொலிஸார் மற்றும் குற்ற விசாரணைப் பிரிவினரால் அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்படவுள்ளதாகவும், அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதாகவும் கூறுகின்றனர்.

எவ்வாறிருப்பினும் அருட்தந்தை சிறில் காமினியிடமுள்ள முக்கியத்துவமுடைய தகவல்களைப் பெற்று, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பதே பொலிஸாரினதும், குற்ற விசாரணைப் பிரிவினரதும் இலக்காகும்.

அதற்காகவே நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் வழக்கு விசாரணைகள் மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய இடம்பெற்றுவரும் விசாரணைகள் என்பவற்றுக்காக அருட் தந்தையிடமுள்ள தகவல்களை கோர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கமைய கடந்த 17 ஆம் திகதி அவரை குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அன்றையதினம் தன்னால் முன்னிலையாக முடியாது என்றும் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அதற்கமைய குற்ற விசாரணைப் பிரிவில் தகவல்களை வழங்கி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரிதமாக நியாயத்தை வழங்குவதற்கு அருட் தந்தை ஒத்துழைப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கின்றோம்.

அது மாத்திரமின்றி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் அவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்வுகூறல்களை கூறிக் கொண்டிருக்காமல் , தகவல்களை குற்ற விசாரணைப் பிரிவினரிடம் தெரிவிக்குமாறு கோருகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment