"ஒரே நாடு, ஒரே சட்டம்" ஜனாதிபதி செயலணியின் ஊடாக புதிய அரசியல் அமைப்பு உருவாகப்பட்டால் நாட்டில் மீண்டுமொரு இன முரண்பாடு ஏற்படும் - லக்ஸ்மன் கிரியெல்ல - News View

About Us

About Us

Breaking

Thursday, November 4, 2021

"ஒரே நாடு, ஒரே சட்டம்" ஜனாதிபதி செயலணியின் ஊடாக புதிய அரசியல் அமைப்பு உருவாகப்பட்டால் நாட்டில் மீண்டுமொரு இன முரண்பாடு ஏற்படும் - லக்ஸ்மன் கிரியெல்ல

(ஆர்.யசி)

"ஒரே நாடு, ஒரே சட்டம்" ஜனாதிபதி செயலணியின் ஊடாக புதிய அரசியல் அமைப்பு உருவாகப்பட்டால் இந்த நாட்டில் மீண்டுமொரு இன முரண்பாடு ஏற்படும். அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. ஆகவே ஜனாதிபதி செயலணியின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் சட்ட நகர்வுகளை ஆராய்வதாகவும், விரைவில் நீதிமன்றத்தை நாடுவதற்கு தயாராகி வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி குறித்தும், புதிய அரசியல் அமைப்பு உருவாக்க செயற்பாடுகள் குறித்தும் பிரதான எதிர்க்கட்சியின் அவதானிப்புகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ஒரே சட்டம் ஒரே நாடு என்ற கோட்பாட்டை சட்டவாக்க சபையின் ஊடாக முன்னெடுக்காது பொருத்தமில்லாத நபர்களை கொண்டு முன்னெடுப்பது பாரிய எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதி அமைச்சர் அலி சப்ரி, அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த ஆகியோர் முரண்பட்டுள்ளனர். அரசாங்கத்தில் பலர் இந்த செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதில் முன்னெடுக்கும் தீர்மானங்கள் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டால் அரசாங்கத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்கப்படாது எனவும் அரசாங்கத்தில் உள்ளவர்கள் எமக்கு தெரிவிக்கின்றனர்.

இந்த ஆண்டு இறுதிக்குள் அரசியல் அமைப்பை உருவாக்க ஜனாதிபதி எடுக்கும் முயற்சி நாட்டில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தப் போகின்றது. அரசியல் அனுபவம் இல்லாத இராணுவ கொள்கையில் உள்ள ஒரு நபரை தலைவராக்கினால் அவரால் நாட்டை இராணுவ கொள்கையின் பக்கமே கொண்டு நடத்த முடியும். இந்த செயற்பாடுகள் அடுத்த மூன்று தசாப்த யுத்தத்தை நாட்டில் உருவாக்கும். இதில் சிறுபான்மை மக்கள் மட்டுமல்ல பெரும்பான்மை மக்களும் சிக்கி சீரழிய நேரிடும்.

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கொள்கை உண்மையில் இனவாதத்தை உருவாக்கும் செயற்பாடாகும். இவ்வாறான தீர்மானங்களின் காரணமாகவே கடந்த மூன்று தசாப்த யுத்தத்திற்கு நாம் முகங்கொடுத்துள்ளோம், யுத்தம் தொடர்பில் மிக மோசமான அனுபவம் எமக்கு உள்ளது.

ஒரு செயலணியை உருவாக்கும் வேளையில் அதில் பெரும்பான்மை தரப்பை பிரதிநிதித்துவப்படுத்துவதை போன்றே தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட வேண்டும். இல்லையேல் இந்த நாட்டில் மீண்டும் ஒரு இன ரீதியிலான முரண்பாடு ஏற்படும். புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் முறைமை மோசமானது. இந்த முறையில் அரசியல் அமைப்பை உருவாக்கினால் நாட்டில் அழிவு நேரிடும்.

ஆகவே ஐக்கிய மக்கள் சக்தியாக நாம் இது குறித்து ஆராய்ந்து கொண்டுள்ளோம். இந்த செயற்பாடுகளை தடுக்கும் சட்ட நகர்வுகளை முன்னெடுக்க என்ன வழிமுறை என்பதை ஆராய்ந்து வருகின்றோம். இந்த செயற்பாடுகளை தடுக்க நீதிமன்றத்தை நாடுவதே எமக்குள்ள நகர்வாகும். அதனை விரைவில் முன்னெடுப்போம்.

நாட்டில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றால் அதனை அரசியல் அமைப்பு சபையின் ஊடாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல தரப்பின் பிரதிநிதிகளை உள்வாங்கி ஜனநாயக ரீதியில் முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் இந்த நாட்டை ஒருபோதும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்றார்.

No comments:

Post a Comment