தடை செய்யப்பட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகளுடனும் பேசுவது அவசியம் : பிரபாகரனை அழிக்காது விட்டிருந்தால் நாடு இரண்டாக பிளவுபட்டிருக்கும் - மஹிந்த சமரசிங்க - News View

Breaking

Wednesday, November 24, 2021

தடை செய்யப்பட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகளுடனும் பேசுவது அவசியம் : பிரபாகரனை அழிக்காது விட்டிருந்தால் நாடு இரண்டாக பிளவுபட்டிருக்கும் - மஹிந்த சமரசிங்க

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

புலம்பெயர் தமிழ் அமைப்புகளை மட்டுமல்ல சிங்கள, முஸ்லிம் புலம்பெயர் அமைப்புகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் தடை செய்யப்பட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவன் மூலமே அவர்களின் நிலைப்பாடு என்னவென்பது தெரிந்துகொள்ள முடியும் எனவும் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, ஜனாதிபதி, பிரதமரின் அமைச்சுக்களின் செலவீனத்தலைப்புக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டு ஆண்டு கால ஆட்சியில் தேசிய ரீதியில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலான சவால்களையும் சமாளித்து நாட்டை நிருவகிக்க நேர்ந்துள்ள நிலையில், பாரிய அளவிலான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுடனும் இதற்கு முன்னராக காலகட்டத்தில் இருந்து நெருக்கமாக நான் செயற்பட்டுள்ளேன்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இந்த இருவரும் எவ்வாறு செயற்பட்டனர் என்பதை நான் நேரடியாக பார்த்த நபர். இவர்கள் இருவரும் இல்லையென்றால் இன்று யுத்தம் முடிவுக்கு வந்திருக்காது.

இன்று கொவிட் குறித்து பேசுகின்றோம். அன்று விடுதலைப் புலிகளை அழிக்காது, பிரபாகரனை அழிக்காது விட்டுவைத்திருந்தால் இன்று நாடு இரண்டாக பிளவுபட்டிருக்கும். அதற்கு இடமளிக்காது தடுத்து நிறுத்திய தலைமைத்துவம் அவர்களை சார்ந்தது.

அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் வேளையில் வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் அமைப்புகளுக்கு தான் அழைப்பு விடுப்பதாக கூறினார். தன்னுடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறு கூறினார்.

இதன்போது தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளை சந்திக்க மாட்டேன். அங்கீகரிக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புகளை மட்டுமே நான் சந்திப்பேன் என எதுவும் கூறவில்லை. ஒட்டு மொத்த புலம்பெயர் அமைப்புகளுடன் பேசுவதற்கு தயார் என்பதையே அவர் கூறினார்.

தமிழ் புலம்பெயர் அமைப்புகள் மட்டுமல்ல, சிங்கள, முஸ்லிம் புலம்பெயர் அமைப்புகளும் உள்ளன. அவர்களும் பாரிய செல்வந்த நிலையில் உள்ளனர். அவர்கள் இன்றும் நாட்டை நேசிக்கின்றனர். அவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல் தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், அப்போதுதான் அவர்களின் நிலைப்படும் என்னவென்பது தெரியும். குறிப்பிட்ட மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டும். இது நல்லதொரு செய்தியாகும் என்றார்.

No comments:

Post a Comment