அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு பங்காளிகளுக்குண்டு - வாசுதேவ நாணயக்கார - News View

Breaking

Wednesday, November 24, 2021

அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு பங்காளிகளுக்குண்டு - வாசுதேவ நாணயக்கார

(இராஜதுரை ஹஷான்)

யுகதனவி மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானம் முழுமைப்படுத்தப்பட்டால் நாட்டின் சுயாதீனத்தன்மை பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகும். அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு பங்காளி கட்சி உறுப்பினர்களுக்கு உண்டு. குறைகளை சுட்டிக்காட்டுவதை அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடு என கருத முடியாது என நீர் வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், யுகதனவி மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானத்திற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான 11 பங்காளி கட்சி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம்.

ஒப்பந்தத்தின் ஒரு பகுதி மாத்திரம் தற்போது கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஒப்பந்தம் முழுமையாக செயற்படுத்தப்பட்டால் நாட்டின் சுயாதீனம் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகும்.

40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க எடுத்துள்ள தீர்மானத்தை வலுவிழக்க கோரி பல்வேறு தரப்பினர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள் நீதிமன்றம் சிறந்த தீர்வை வழங்கும் என்பதில் முழுமையான நம்பிக்கை உள்ளது.

குறைகளை சுட்டிக்காட்டி அரசாங்கத்தை நல்வழிப்படுத்தும் பொறுப்பு ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியினருக்கு உண்டு. குறைகளை சுட்டிக்காட்டுவது அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடு என கருத முடியாது. அரசாங்கத்தை வீழ்த்த வேண்டிய தேவை எவருக்கும் கிடையாது.

அத்தியாவசிய பொருட்களின் விலை தினசரி அதிகரித்த நிலையில் உள்ளது பொருட்கள் மீது நிர்ணய விலை விதிப்பது அவசியமாகும். அத்துடன் கட்டுப்பாட்டு விலை சந்தையில் முறையாக செயற்படுத்தப்படுகிறதா என்பதை ஆராய்வதற்கு விசேட பொறிமுறை வகுப்பது அவசியம் என உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment