ஐக்கியம் நிலவும் எமது நாட்டில் அரசாங்கம் வேண்டுமென்றே பிரிவினையைத் தோற்றுவிக்க முயற்சிப்பது 'ஒரே நாடு, ஒரே சட்டம்' செயலணிக்கான நியமனங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 2, 2021

ஐக்கியம் நிலவும் எமது நாட்டில் அரசாங்கம் வேண்டுமென்றே பிரிவினையைத் தோற்றுவிக்க முயற்சிப்பது 'ஒரே நாடு, ஒரே சட்டம்' செயலணிக்கான நியமனங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ

(நா.தனுஜா)

ஐக்கியம் நிலவும் எமது நாட்டில் வேண்டுமென்றே பிரிவினையைத் தோற்றுவிப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பது 'ஒரே நாடு, ஒரே சட்டம்' தொடர்பான புதிய ஜனாதிபதி செயலணிக்கான நியமனங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது. சிறுபான்மையினத்தவரைப் புறக்கணிக்கும் வகையிலான அந்நியமனங்கள் முற்றிலும் தவறு என்பதுடன் நாட்டில் பிளவேற்படுவதற்கும் அவை வழிவகுக்கும். எனவே புதிய செயலணிக்கான நியமனங்களைத் திருத்தியமைத்து, அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவின் வத்தளை தொகுதி அலுவலகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஜனநாயகத்தையும் நாட்டுமக்களின் நலன்களையும் முன்னிறுத்தி, அவற்றை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியாகும். அதன் பிரகாரம் நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளுக்கு அவசியமான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் செயற்திட்டமொன்று ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அரச வைத்தியசாலைகளுக்கு நன்கொடைகளை வழங்குவதற்குப் பதிலாக, அந்த நிதியைப் பயன்படுத்தி மக்களுக்கு வேறு உதவிகளை வழங்கலாம் அல்லவா? என்று பலரும் எம்மிடம் கேள்வி எழுப்புகின்றார்கள். ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் ஹோமாகம உள்ளடங்கலாக பெரும்பாலான அரச வைத்தியசாலைகளின் நிலை எத்தகையதாகக் காணப்பட்டது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.

அதேபோன்று கொவிட்-19 வைரஸின் திரிபான டெல்டா வைரஸிலிருந்து பிறிதொரு புதிய திரிபு உருவாகாது என்று இதுவரையில் எந்தவொரு நிபுணர்களும் உறுதியாகக்கூறவில்லை. கொவிட்-19 பெருந்தொற்று முழுமையாக முடிவிற்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாக இதுவரையில் உலகின் எந்தவொரு நாடும் அறிவிக்கவில்லை.

எமது நாட்டின் வரலாற்றில் இதுவரையில் எந்தவொரு எதிர்க்கட்சியும் மக்களினதும் நாட்டினதும் நன்மையை முன்னிறுத்திய நலனோம்பு மற்றும் உதவி வழங்கல் சேவைகளில் ஈடுபட்டதில்லை. மக்களின் சுகாதார நலனுக்கு முக்கியத்துவமளித்து, அவர்களின் உயிரைக்காக்கும் நோக்கிலேயே இந்த செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

அதேவேளை அரசியலைப்பொறுத்தமட்டில் 'வாரிசு' அடிப்படையிலான முன்னுரிமை, வயது உள்ளிட்ட ஏனைய காரணிகளுக்கு அப்பால் திறமைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். திறமையானவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் கொள்கையின் அடிப்படையிலேயே ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட்டுவருகின்றது.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன இந்நாட்டில் பாரியதொரு புரட்சியை ஏற்படுத்தினார். ஏனெனில், அவர் ஏனைய விடயங்களைக் கருத்திற் கொள்ளாது மக்களின் பக்கம் நின்றதுடன் இராஜதந்திர ரீதியில் மிகுந்த நேர்த்தியுடனும் செயற்பட்டார்.

இந்நிலையில் ரணசிங்க பிரேமதாஸவின் மக்களை முன்னிறுத்திய கொள்கைகளையும் ஜே.ஆர்.ஜெயவர்தனவின் இராஜதந்திர நேர்த்தியையும் இணைக்கும் வகையிலான கொள்கையைப் பின்பற்றுவதே எமது கட்சியின் எதிர்பார்ப்பாகும்.

அடுத்ததாக எமது கட்சி உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, அவரது நேர்மையினாலும் அச்சமின்றி கருத்துக்களை வெளிப்படுத்தும் தன்மையினாலும் இப்போது சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றார். அவரை விடுதலை செய்வதற்கு மனிதாபிமான ரீதியில் நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை நான் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியிருக்கின்றேன்.

அதுமாத்திரமன்றி அவரது விடுதலைக்காக உச்சபட்சமாக மேற்கொள்ளக் கூடிய ஜனநாயக ரீதியான போராட்டத்தை மேற்கொள்வதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம். அத்தோடு தனது இடத்தை ரஞ்சன் ராமநாயக்கவிற்கு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக ஹரீன் பெர்னாண்டோவினால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன்.

மேலும் நாடு தற்போது பயணிக்கும் பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் நவீனத்துவத்தை உட்புகுத்த வேண்டும் என்றும் பலர் விரும்புகின்றனர். அதனை அடைந்துகொள்வதற்கு நாட்டின் இளைஞர், யுவதிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தையும் முகாமைத்துவத்தையும் புத்தாக்க அணுகுமுறைகளையும் போதிக்கவேண்டும்.

குறிப்பாக இவற்றை இலவசக் கல்வி முறைமையின் ஊடாகப் போதிப்பதற்கு அவசியமான செயற்திட்டமொன்றை உருவாக்க வேண்டும். கல்வியைப் பொறுத்தவரை தற்போதைய சமுதாயத்தில் காணப்படும் சமத்துவமின்மையை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும்.

நாடளாவிய ரீதியில் 'டிஜிட்டல் புரட்சியொன்றை' ஏற்படுத்துவதற்கும் மாணவர்களின் தொழில்நுட்ப மற்றும் ஆங்கில மொழி அறிவை மேம்படுத்துவதற்கும் அவசியமான நடவடிக்கைகள் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும்.

நாட்டின் அனைத்துத் துறைகள் தொடர்பாகவும் விசேட நிபுணர்கள் அடங்கிய குழுக்களை எமது கட்சி நியமித்திருக்கின்றது. அத்தகைய நிபுணர் குழு வழங்கிய தகவல்களுக்கு அமைவாகவே கொவிட்-19 வைரஸ் முதலாவது அலையின்போது அவதானமாக செயற்படுமாறு நாட்டு மக்களை எச்சரித்தோம்.

ஆனால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத் தற்போதைய அரசாங்கம் மூட நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளையே முன்னெடுத்தது. அதுமாத்திரமன்றி தமது அரசாங்கமே முறையாக செயற்படுவதாகவும் பொது வெளியில் கூறியது. அவற்றின் விளைவாக இப்போது மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்காகவும் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதன உரத்தில் தீங்கேற்படுத்தும் நுண்ணுயிரிகள் உள்ளடங்கியிருப்பது பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்த உரம் ஏற்றப்பட்ட கப்பல் திருப்பியனுப்பப்பட்டது. ஆனால் தற்போது அந்தக் கப்பல் மீண்டும் எமது நாட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கின்றது.

வெளிநாடுகள் அவற்றின் அதிகாரங்களை எந்தளவு தூரத்திற்குப் பிரயோகிக்கின்றன என்பதை இதன் மூலம் நன்கு புரிந்துகொள்ள முடிகின்றது. இப்போது 'தேசப்பற்றாளர்கள்' என்று கூறிக் கொண்டிருக்கும் அரசாங்கம் என்ன செய்துகொண்டிருக்கின்றது? சீனத் தூதரகத்தின் வர்த்தக அலுவலகம் மக்கள் வங்கியைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்திருப்பது குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்று நாட்டின் நிதியமைச்சர் கூறுகின்றார்.

சீனத் தூதுவரை அழைத்து, மக்கள் வங்கியைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டாம் என்று வலியுறுத்துவதுடன் தரமற்ற உரத்திற்கான கொடுப்பனவைச் செலுத்த முடியாது என்று நேரடியாகக் கூறுமளவிற்கு ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கத்திற்கு இயலுமை இல்லையா? அதனைச் செய்வதைவிடுத்து, தேர்தல் நெருங்கும் நிலையில் அதனை இலக்குவைத்து இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தி சமூக அமைதியைச் சீர்குலைப்பதற்கு அரசாங்கம் முற்படுகின்றது.

ஐக்கியம் நிலவும் எமது நாட்டில் அரசாங்கம் வேண்டுமென்றே பிரிவினையைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றது என்பது 'ஒரே நாடு, ஒரே சட்டம்' தொடர்பான புதிய ஜனாதிபதி செயலணிக்கான நியமனங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது.

திட்டமிட்டு சிறுபான்மையினரைப் புறக்கணித்து நாட்டின் முதலாம் தரப்பிரஜை, இரண்டாம் தரப்பிரஜை, மூன்றாம் தரப்பிரஜை என்ற பாகுபாட்டை அரசாங்கம் உருவாக்குகின்றது. புதிய ஜனாதிபதி செயலணிக்கான நியமனங்கள் முற்றிலும் தவறு என்பதுடன் அவை நாட்டைப் பிளவுபடுத்தும் நியமனங்களுமாகும்.

தவறான தீர்மானமொன்றைத் தொடர்ந்து, அதிலிருந்து பின்வாங்கி அதனைத் திருத்திக் கொள்வது தவறல்ல. அந்த வகையில் புதிய ஜனாதிபதி செயலணிக்கான நியமனங்களிலும் உடனடியாகத் திருத்தத்தை மேற்கொண்டு, அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோருகின்றேன் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment