புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் நல்லாட்சியின் பொறிமுறையே சரியானது : மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் விலகிச் செல்லும் நிலைமை - இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த - News View

Breaking

Monday, November 22, 2021

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் நல்லாட்சியின் பொறிமுறையே சரியானது : மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் விலகிச் செல்லும் நிலைமை - இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த

(ஆர்.யசி)

மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வேலைத்திட்டத்தில் இருந்து அரசாங்கம் விலகிச் செல்லும் நிலைமையே காணப்படுவதாகவும், அரசாங்கத்தை சரியான திசைக்கு கொண்டுவரவே தாம் முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார்.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் விடயத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் பொறிமுறை சரியானது, அதனையே மீண்டும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அரசாங்கத்தில் ஒரு சில வேலைத்திட்டங்களில் சிரேஷ்ட உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், அரசாங்கத்தில் இருக்கும் சரியான சிந்தனையாளர்கள், அனுபவம் மிக்கவர்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். அனுபவசாலிகளை முன்னணியில் நிறுத்தி பயணிக்க வேண்டும்.

பேராசிரியர் திஸ்ஸ விதாரண போன்றவர்களுக்கு இந்த அரசாங்கம் இடம் கொடுக்கவில்லை, கொவிட் நிலைமைகளை சரியாக கையாளும் சிறந்த ஆறு வைத்தியர்கள் அரசாங்கத்தில் உள்ளனர். சிறந்த சட்டத்தரணிகள் உள்ளனர்.

இவ்வாறான மனித வளங்களை பயன்படுத்திக் கொண்டால் அரசாங்கம் நெருக்கடிகளை தவிர்க்கலாம். ஆனால் இந்த குறைபாடுகளை சரிசெய்து கொள்ள அரசாங்கம் இன்னமும் முயற்சிக்கவில்லை.

மக்களின் அபிலாசைகளை சரியாக பூர்த்தி செய்து கொள்ள, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முறையான வேலைத்திட்டம் உருவாக்கப்படவில்லை. பல வேலைத்திட்டங்களில் அரசாங்கம் தவறான தீர்மானம் எடுக்கின்றது. அதனை நிவர்த்தி செய்யவே நாம் வலியுறுத்திக் கொண்டுள்ளோம்.

கடந்த கால தவறுகளை சரி செய்து சரியாக பயணிக்க வேண்டும், சட்டவாக்க சபை, நீதிமன்றம், நிறைவேற்று அதிகாரம் என்பன சரியாக செயற்பட வேண்டும். அதிகார பரவலாக்கல் நியாயப்பாடுகளை சரியாக கையாள வேண்டும்.

அரசியல் அமைப்பில் அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். இப்போது அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்ற போதிலும் அது முறையான செயற்பாடாக அமையவில்லை.

1978 ஆம் ஆண்டு உருவாக்கத்தின் போது விடப்பட்ட தவறுகளை சரி செய்ய வேண்டுமே தவிர மேலும் நெருக்கடிகளை உருவாக்க நினைக்கக் கூடாது. அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் சகல தரப்பையும் இணைத்துக் கொண்டு, பயணிக்க வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்தில் அதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அந்த வேலைத்திட்டம் துரதிஷ்டவசமாக கைவிடப்பட்டது. இப்போதாவது அதனை முன்னெடுக்க வேண்டும்.

அதேபோல் இலங்கைக்கு வெளியில் உள்ள சட்ட வல்லுனர்களை இணைத்துக் கொண்டு செய்ய வேண்டிய அவசியமான திருத்தங்களில் கூடிய கவனம் செலுத்தியாக வேண்டும்.

சிறுபான்மை மக்களின் கோரிக்கைகள், பரிந்துரைகளில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இவற்றை அரசாங்கத்தில் இருந்துகொண்டு நாம் வலியுறுத்தி வருகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment