எத்தேர்தல் இடம்பெற்றாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன படுதோல்வி அடையும் : சுவர்களில் சித்திரம் வரைந்த இளைஞர், யுவதிகள் நாட்டை விட்டு வெளியேற வரிசையில் - பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்பாளர் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 25, 2021

எத்தேர்தல் இடம்பெற்றாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன படுதோல்வி அடையும் : சுவர்களில் சித்திரம் வரைந்த இளைஞர், யுவதிகள் நாட்டை விட்டு வெளியேற வரிசையில் - பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்பாளர்

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் ஊடாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நாம் நிர்வாகியாக்கியுள்ளமை கவலைக்குரியது. வியத்மக உறுப்பினர்களை மக்கள் மத்தியில் காண்பது மிகவும் அரிதாக உள்ளது. இனிவரும் காலங்களில் எத்தேர்தல் இடம்பெற்றாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன படுதோல்வி அடையும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் கிடையாது என பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்பாளர் ஷிராஸ் யூனுஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாடு பெரும் பாதிப்புக்களை நோக்கி நகர்கிறது 51 வருட கால பழமை வாய்ந்த சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை 50 நாட்களுக்கு தொடர்ச்சியாக மூடியுள்ளமை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் தோற்றம் பெற்றுள்ளன.

வெளிநாட்டு கையிருப்பு பிரச்சினை தற்போதைய காலத்தில் மாத்திரம் தோற்றம் பெற்றதல்ல 51 வருட காலமாக பல்வேறு பிரச்சினைகள் சமூகத்தின் மத்தியில் காணப்பட்டது. ஆனால் எந்த அரசாங்கமும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தொடர்ச்சியாக 50 நாட்களுக்கு மூடவில்லை.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் விற்கப்பட்டுள்ளதா என்று மக்கள் எண்ணும் அளவிற்கு அரசாங்கத்தின் செயற்பாடுகள் முரண்பட்டதாக காணப்படுகிறது.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நாளுக்குநாள் தீவிரமடைந்துள்ளன. பல்வேறு வழிமுறைகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படத்தை ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுவதை காணும் போது பெரும் வேதனையடைகிறேன்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிர்வாகியாக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமிக்க அரசாங்கத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மக்களிடம் கோரவில்லை. ஏனெனில் அதன் விளைவு எந்தளவிற்கு பாரதூரமானதாக அமையும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.

2020ஆம் ஆண்டு காலப்பகுதியில் நகரை அழகுப்படுத்தும் விதமான சுவர்களில் சித்திரம் வரைந்த இளைஞர் யுவதிகள் தற்போது நாட்டை விட்டு வெளியேறுவதற்காக குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தின் முன்பாக வரிசையில் உள்ளார்கள் அந்தளவிற்கு நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 2 வருட காலத்திற்குள் மக்களின் எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது. வியத்மக அமைப்பினரை மக்கள் மத்தியில் காண்பது மிகவும் அரிதாகவே உள்ளது.

இராஜாங்க அமைச்சுக்களை பெற்றுக்கொண்டு மகிழ்வுடன் உள்ளார்கள். மக்கள் கற்றவர்களை அல்ல புத்திசாலிகளை பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்ய வேண்டும்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் வருடம் இடம் பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. எத்தேர்தல் இடம் பெற்றாலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன படுதோல்வியடையும்.

எந்த அரசாங்கத்திற்கும் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை இனி வழங்கமாட்டார்கள் தேசிய அரசாங்கமே இனிவரும் காலங்களில் தோற்றம்பெறும் என்றார்.

No comments:

Post a Comment