இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமான ஊடக சந்திப்பு : ஞானசார தேரருக்கு எதிரான சாட்சி விசாரணைகளை ஆரம்பிக்க தீர்மானம் - News View

Breaking

Thursday, November 25, 2021

இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமான ஊடக சந்திப்பு : ஞானசார தேரருக்கு எதிரான சாட்சி விசாரணைகளை ஆரம்பிக்க தீர்மானம்

(எம்.எப்.எம்.பஸீர்)

இனங்களுக்கு இடையே, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி தலைவரும், பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலருமான கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான சாட்சி விசாரணைகளை எதிர்வரும் 2022 மார்ச் 14 அம் திகதி ஆரம்பிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.

இது குறித்த வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டுள்ள, கலகொட அத்தே ஞானசார தேரர் இதன்போது மன்றில் ஆஜரானார்.

2006 ஆட் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில் கொழும்பில் ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமான வெறுப்பூட்டும் கருத்துக்களை வெளியிட்டதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இடம்பெற்ற விசாரணைகளை மையப்படுத்தி, மேல் நீதிமன்றில் ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்ப்ட்டு அது கையளிக்கப்பட்டுள்ள நிலையிலேயே நேற்று அவ்வழக்கு விசாரணைக்கு வந்திருந்தது.

இதன்போது கலகொட அத்தே ஞானசார தேரர் சார்பில் சட்டத்தரணி சஞ்சய ஆரியதாச ஆஜரானதுடன், வழக்கின் கணினி சாட்சிகள் தொடர்பில் ஆராய பிரதிவாதித் தரப்புக்கு அவகாசம் அவசியம் என அவர் மன்றில் குறிப்பிட்டார்.

அதற்கமைய அதற்கான அவகாசத்தை வழங்குமாறு இரகசிய பொலிசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் சாட்சி விசாரணைகளை 2022 மார்ச் 14 ஆம் திகதி ஆரம்பிப்பதாக அறிவித்தார்.

அன்றையதினம், சாட்சியம் வழங்க பொலிஸாருக்கு முறைப்பாடளித்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உள்ளிட்டவர்களுக்கு அறிவித்தல் அனுப்பவும் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments:

Post a Comment