உரப் பயன்பாடு தொடர்பில் அதிகாரிகள் ஜனாதிபதிக்குத் தவறான ஆலோசனை, எவ்வித அடிப்படைகளுமின்றி மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் - எஸ்.எம். மரிக்கார் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 4, 2021

உரப் பயன்பாடு தொடர்பில் அதிகாரிகள் ஜனாதிபதிக்குத் தவறான ஆலோசனை, எவ்வித அடிப்படைகளுமின்றி மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் - எஸ்.எம். மரிக்கார்

(நா.தனுஜா)

நாட்டில் பயிர்ச் செய்கைக்கு முற்றுமுழுதாக இரசாயன உரத்தைப் பயன்படுத்துவதனால் பெருமளவானோர் சிறுநீரக நோய்களுக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறியே அரசாங்கம் இரசாயன உர இறக்குமதியைத் தடை செய்தது. ஆனால் உலக வங்கியால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், உரப் பயன்பாடு தொடர்பில் அதிகாரிகள் ஜனாதிபதிக்குத் தவறான ஆலோசனைகளை வழங்கியிருக்கின்றார்கள் என்பது வெளிப்பட்டுள்ளது. ஆகவே உரம் தொடர்பில் எவ்வித அடிப்படைகளுமின்றி மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, நாட்டில் பயிர்ச் செய்கைக்கு முற்றுமுழுதாக இரசாயன உரத்தைப் பயன்படுத்துவதனால் பெருமளவானோர் சிறுநீரக நோய்களுக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறியே அரசாங்கம் இரசாயன உர இறக்குமதியைத் தடை செய்தது. ஆனால் இது குறித்து ஆராய்ந்து பார்த்தபோது அரசாங்கத்தினால் கூறப்பட்ட விடயங்கள் முற்றிலும் பொய்யானவை என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் மூலம் உலக நாடுகள் ஒவ்வொன்றும் வருடாந்தம் பயன்படுத்துகின்ற இரசாயன உரத்தின் அளவு மற்றும் அந்நாடுகளில் வருடாந்தம் உயிரிழக்கும் சிறுநீரக நோயாளர்களின் சதவீதம் ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும். அதனை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது உரப் பயன்பாடு தொடர்பில் அதிகாரிகள் ஜனாதிபதிக்குத் தவறான ஆலோசனைகளை வழங்கியிருக்கின்றார்கள் என்றே தோன்றுகின்றது.

அதேவேளை மறுபுறம் இந்தியாவிலிருந்து நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்து, அதன் மூலம் உரப் பிரச்சினைக்கு முழுமையாகத் தீர்வு வழங்கப்பட்டு விட்டதாகக் காண்பிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆனால் 'நனோ நைட்ரஜன்' என்பது பயிர்ச் செய்கைக்குப் பிரதானமாகப் பயன்படுத்துகின்ற உரம் அல்ல. மாறாக அது விளைச்சலை ஊக்குவிக்கும் நோக்கில் மேலதிகமாகப் பயன்படுத்தப்படுகின்ற உரமாகும்.

இந்தியாவில் இந்த உரத்தை உற்பத்தி செய்கின்ற நிறுவனமே இதுவோர் 'மேலதிக உரம்' என்ற விடயத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. அத்தோடு ஏனைய இரசாயன உர வகைகளைப் போன்று இதனை மண்ணுக்குக் கீழ் பயன்படுத்துவதில்லை. மாறாக இதன் பயன்பாட்டில் காற்றின் வேகம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்தும்.

ஆகவே இந்த நனோ நைட்ரஜன் திரவ உரத்தைப் பயன்படுத்துகின்ற பரீட்சார்த்த முயற்சியின் எமது நாட்டின் பயிர்ச் செய்கை உற்பத்தி முழுமையாகப் பலி கொடுக்கப்பட்டுள்ளது.

விவசாயத்துறை அமைச்சின் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையின் பிரகாரம், ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிரிடப்படும் நெற்பயிருக்கு ஒரு தடவைக்கு 2.5 லீற்றர் என்ற அளவில் மேற்படி திரவ உரத்தைப் பயன்படுத்த வேண்டும். அதுமாத்திரமன்றி விளைச்சல் காலத்தில் மூன்று தடவைகள் இந்தத் திரவ உரம் தெளிக்கப்பட வேண்டும்.

அதன்படி ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்பிற்குத் தேவையான திரவ உரத்தின் அளவு 7.5 லீற்றர் ஆகும். எனவே இந்த நனோ நைட்ரஜன் உரம் மூலம் ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்பில் வெறுமனே 300 கிராம் என்ற மிகக்குறைந்தளவிலான நைட்ரஜன் மாத்திரமே உட்செலுத்தப்படுகின்றது.

பொதுவாக ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்பில் 4 - 5 டொன் அளவிலான நெல் விளைச்சலைப் பெறக்கூடிய நிலையில், அதற்கென சுமார் 105 கிலோ கிராம் நைட்ரஜன் உரத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். இந்தக் கணிப்பீட்டின் பிரகாரம், நெற் பயிர்ச் செய்கைக்கு அவசியமான நைட்ரஜனை திரவ நனோ நைட்ரஜன் உரத்தின் மூலம் மாத்திரம் வழங்குவதாக இருந்தால், ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்பிற்கு 1,250 லீற்றர் நனோ நைட்ரஜன் உரத்தைப் பயன்படுத்த வேண்டும்.

எனவே அதற்கு மாறாகக் குறைந்தளவிலான உரத்தைப் பயன்படுத்துவதனால் விளைச்சலிலும் பாரிய வீழ்ச்சியேற்படும். ஆகவே உரம் தொடர்பில் எவ்வித அடிப்படைகளுமின்றி மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment