எதிர்க்கட்சி முன்வரிசை ஆசனத்தில் ஒற்றர்கள் - ரத்ன தேரர், அலி சப்ரி ரஹீமை இடமாற்றுமாறு சபையில் வலியுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 23, 2021

எதிர்க்கட்சி முன்வரிசை ஆசனத்தில் ஒற்றர்கள் - ரத்ன தேரர், அலி சப்ரி ரஹீமை இடமாற்றுமாறு சபையில் வலியுறுத்தல்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

எதிர்க்கட்சியின் முன்வரிசை ஆசனத்தில் ஆளுங்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இருவருக்கு இடம் கொடுத்து எதிர்க்கட்சிக்குள் ஒற்றர்களை நுழைத்துள்ளனர். அதுரலியே ரத்ன தேரர் மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகிய இருவரையும் எதிர்க்கட்சியின் முன்வரிசை ஆசனத்தில் இருந்து இடம்மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சியினர் சபையில் வலியுறுத்தினர். எனினும் இதனை நிராகரித்த சபாநாயகரும், ஆளுங்கட்சியும், சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக்கி அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட வைத்தபோது இவையெல்லாம் உங்களுக்கு விளங்கவில்லை என கேள்வி எழுப்பினர்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23), சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் சபை அமர்வுகள் கூடிய வேளையில், ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார,

சபாநாயகரினால் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆசன மாற்றங்களை மேற்கொள்ள முடியும். எதிர்க்கட்சி தரப்பின் முன்வரிசை ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் வேளையில் அதுரலியே ரத்ன தேரர் மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகிய இருவரும் எதிர்கட்சியின் முன்வரிசையில் உள்ளனர். ஆனால் அவர்கள் எப்போதும் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

எதிர்கட்சியின் முன்னணி ஆசனங்களில் ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் இருவர் இருப்பது எதிர்க்கட்சிக்குள் ஒற்றர்கள் இருப்பது போன்றது. இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் இதே விடயத்தை முன்வைத்துள்ளோம். ஆனால் இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே இதற்கு தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதில் தெரிவித்த சபாநாயகர், இந்த விடயம் அவர்களின் கட்சி சார்ந்த விவகாரமாகும். குறித்த கட்சிகள் எடுத்த தீர்மானங்கள் தொடர்பில் என்னால் தலையிட முடியாது என்றார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர, எதிர்கட்சியினர் பாராளுமன்ற சம்ரதாயம் என்னவென்பதை தெரிந்துகொள்ள வேண்டும். எந்தவொரு கட்சியினதும் பாராளுமன்ற உறுப்பினர் அக்கட்சியின் சார்வில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினால் அவருக்கு முன்வரிசை ஆசனம் வழங்கப்படும். அது உங்களுக்கும் பொருந்தும். அவர்கள் எதிர்கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும். அதற்காக அவர்களை அரசாங்கத்தில் பக்கம் தள்ள வேண்டாம் என்றார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல, சில காலத்திற்கு முன்னர் முஸ்லிம் உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தனர். அவர்களை ஆளுங்கட்சி பக்கம் அமரவைக்க வேண்டும் என நான் உங்களிடம் கோரிக்கை விடுத்தேன். அதற்கமைய அவர்களை ஆளுங்கட்சி பக்கம் அமரச் செய்தீர்கள். இவர்களுக்கும் அதே நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் முன் வரிசையில் இருக்க முடியாது என்றார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய சபை முதல்வர் தினேஷ் குணவர்தன, இந்த விவகாரம் குறித்து யாரும் கருத்து தெரிவிக்க முடியும். ஆனால் சபாநாயகரினால்தான் தீர்மானம் எடுக்கப்படும். இதுதான் சம்ரதாயமும் கூட. ஆகவே இதனை தெரிந்துகொள்ளாது கதைக்கக்கூடாது.

நாட்டை ஏமாற்றும் விதமாக இவற்றை கூறலாம். ஆனால் இதே குற்றச்சாட்டை முன்வைக்கும் தரப்பினர் அரசாங்கத்தில் இருந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை கொடுத்தனர்.

எதிர்க்கட்சியின் சிறுபான்மை கட்சியாக இருந்தும் அவர்கள் எதிர்க்கட்சி பதவியை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்திற்கு ஆதரவாகவே செயற்பட்டனர். ஒவ்வொரு முறையும் அரசாங்கத்திற்கு ஆதரவாகவே வாக்களித்தனர்.

இந்த காலகட்டத்தில் எதிர்க்கட்சி பதவியை எமக்கு வழங்குமாறு கேட்டோம், ஆனால் அவர்களின் ஆசனத்தை பறிக்க வேண்டும் என கோரவில்லை. நாம் பாராளுமன்ற சம்பிரதாயத்தை மீறவில்லை. ஆகவே இவர்கள் பாராளுமன்ற விதிமுறைகளை மீறியே ஒவ்வொரு நாளும் செயற்பட்டுக்கொண்டுள்ளனர் என்றார்.

மீண்டும் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய லக்ஸ்மன் கிரியெல்ல, நிகழ்கால பாராளுமன்றத்தில் சபாநாயகர் முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்தே நாம் பேசுகின்றோம். அதற்கமைய அவர்களை அரசாங்கத்தின் பக்கம் மாற்றுங்கள் என்றார்.

No comments:

Post a Comment