பிரபாகரன் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒருவர் என்றார் டக்ளஸ் : ஆட்சியாளர்களின் கால்களைக் கழுவுபவன் நான் அல்ல என்றார் சிறிதரன் - News View

Breaking

Tuesday, November 23, 2021

பிரபாகரன் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒருவர் என்றார் டக்ளஸ் : ஆட்சியாளர்களின் கால்களைக் கழுவுபவன் நான் அல்ல என்றார் சிறிதரன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கில் போதைப் பொருள் பாவனை இருந்ததா ? கஞ்சா இருந்ததா ?அல்லது யாரவது இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டார்களா ? போதைவஸ்தால் யாரும் பாதிக்கப்பட்டார்களா? அல்லது யாரவது அதனை உட்கொண்டார்களா? யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரே வடக்கில் போதைப் பொருள் பாவனை அதிகரித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனின் சபையில் கூறிய வேளையில் அதனை நிராகரித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு போதைப் பொருள் வர்த்தகர்  என கூறினார். இருவருக்கும் இடையிலான வாக்குவாதத்தில் சபை பரபரப்பானது.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான  செலவினத் தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனின் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் குறுக்கீடு செய்த போதே  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீதரன் எம்.பி. தனது உரையில், ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவர் ஞானசார தேரர் ,போதைப் பொருள் பாவனை தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் ஏன் பேசுவதில்லை எனக் கேட்கின்றார்.

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கில் போதைப் பொருள் பாவனை இருந்ததா? கஞ்சா இருந்ததா? அல்லது யாரவது இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டார்களா? போதைவஸ்தால் யாரும் பாதிக்கப்பட்டார்களா ? அல்லது யாரவது அதனை உட்கொண்டார்களா?

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த அரசாங்கத்தின் ஆட்சி வந்த பின்னரே திட்டமிட்டு வடக்கில் போதைப் பொருள், கஞ்சா பாவனைக்கு   விடப்பட்டன..படைகள் குவிக்கப்பட்டுள்ள வடக்கில் தற்போது எப்படி போதைவஸ்துக்கள் தாராளமாக புழங்குகின்றன?  நாங்கள் எத்தனை தடவை போதைவஸ்துக்கள் தொடர்பில் இந்த சபையில் பேசியிருப்போம்.

நாம் போதைவஸ்துக்களுக்கு எதிரானவர்கள் என ஸ்ரீதரன் எம்.பி கூறிக்கொண்டிருந்த போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறுக்கீடு செய்தார்.

எனினும் அவருக்கு ஒலிவாங்கி வழங்கப்படாத நிலையில் சபை முதல்வரான தினேஷ் குணவர்தன எழுந்து சபைக்கு தலைமை தாங்கியவருக்கு  சுட்டிக்காட்டியதையடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு  நேரம் கொடுக்கப்பட்டது.

இதன்போதே அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கூறுகையில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு போதைப் பொருள் வியாபாரி. அவர் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டார். இது ஸ்ரீதரனுக்கு தெரியுமோ அல்லது மறைக்கிறாரோ தெரியாது. அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயம் என  சில விடயங்களை செய்ததாக ஏற்றுக் கொள்கின்றார். அதற்கு முன்னர் ஏன் செய்யப்படவில்லை ?. அதற்கு முன்னர் அபிவிருத்தி செய்ய  நீங்கள் விடவில்லை, தடைகளை ஏற்படுத்னீர்கள் என்றார்.

ஸ்ரீதரன் எம்.பி. இதற்கு பதிலளிக்கையில், நான் அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்கும் கையாள் அல்ல. ஆட்சியாளர்களின் கால்களைக் கழுவும் வேலையும்  செய்பவனல்ல. அல்லது உயிருக்கு பயந்து கவச வாகனங்களில் பயணிப்பவனுமல்ல. தமிழர்கள் எதற்கும் துணிந்தவர்கள் என்று கூறிக்கொண்டிருந்த போது அவரின் நேரம் முடிவடைந்து விட்டதாக கூறி வேறு ஒருவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டது.

ஸ்ரீதரன் எம்.பி. - டக்ளஸ் தர்க்கத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷஆகியோரும் சபையில் இருந்தனர். அரச தரப்பின் கடுமையான கூச்சல்களுக்கு மத்தியிலேயே ஸ்ரீதரன் எம்.பி உரையாற்ற நேர்ந்தது. 

No comments:

Post a Comment