புதிய அரசியலமைப்பு தயாரிப்புக்கான நகல் சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில், எதனையும் மறைத்தோ இரகசியமாகவோ செய்யமாட்டோம் - பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ - News View

Breaking

Tuesday, November 23, 2021

புதிய அரசியலமைப்பு தயாரிப்புக்கான நகல் சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில், எதனையும் மறைத்தோ இரகசியமாகவோ செய்யமாட்டோம் - பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ

புதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான நகல் சட்டம் தயாரிக்கப்பட்டு வருவதோடு அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஆராய இருக்கிறோம். நாம் எதனையும் இரகசியமாக மறைத்து செயற்படமாட்டோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். 

வரவு செலவுத்திட்ட 03 ஆம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி,பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட 19 நிறுவனங்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு கடந்த வரலாறு மறந்துவிட்டது. கொவிட்19 நிலையில் அரசாங்கம் மக்களை பாதுகாக்க செயற்பட்டது. மக்களை பாதுகாக்கத் தேவையான சகல நடவடிக்கைகளையும் சரியான நேரத்தில் செய்துள்ளோம். இவற்றை முகாமைத்துவம் செய்ய பிரதமர் அலுவலகம் பணியாற்றியது.

பிரதமர் அலுவலகம் கொரோனா தொற்றுக்குள்ளும் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டது. ஆரம்பத்தில் அத்தியாவசிய சேவைகளுக்காக அரசாங்கம் செயலணி ஒன்றை நியமித்தது. இந்த ஜனாதிபதி செயலணி எமது மேற்பார்வையின் கீழ் செயற்பட்டது. 

மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் பிரதமர் அலுவலகம் பணியாற்றியது. அதே போன்று கட்சித் தலைவர்களுடன் கருத்துப் பரிமாறினோம். 

மக்களின் அத்தியாவசிய சேவைகளையும் சுகாதார வசதிகளையும் வழங்க சகல நிலைகளிலும் பணியாற்றினோம். மருத்துவர், பாதுகாப்புப்படையினர் தமது பொறுப்பை நிறைவேற்றினர்.

கொவிட்டினால் வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டன. கொவிட்டிலிருந்து பாதிக்கப்பட்ட நாட்டை மீட்க பங்காற்றி வருகிறோம். அதற்கமைய நிதி அமைச்சர் குறுங்கால மற்றும் மத்திய கால திட்டங்களை உள்ளடக்கிய பட்ஜட்டை முன்வைத்துள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும்.

2019 இல் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தையே ஏற்றோம். இந்தப் பொருளாதாரத்தை மேம்படுத்தத் தேவையான திட்டங்கள் இம்முறை வரவு செலவுத் திட்டத்திலுள்ளன. தமது அரசியல் நலனுக்காக விவாதித்துக் கொள்வதை காண்கிறோம்.

எதிரணி முன்வைக்கும் நியாயமான கருத்துக்களை செவிசாய்க்க தயாராக இருக்கிறோம். கூட்டுப் பொறுப்புடன் நாட்டின் எதிர்காலத்திற்காக முடிவுகளை எடுக்க வேண்டும். மக்களுக்காக பொறுப்புடன் பணியாற்ற சகல எம்.பிக்களும் முன்வர வேண்டும்.

2022 இல் புதிய வர்த்தக முயற்சிளை ஆரம்பிக்க எதுவித பதிவுக் கட்டணம் எதுவும் அறவிடப்பட மாட்டாது. புதிய வர்த்தக முயற்சிகளை ஆரம்பிக்க முன்வருமாறு இளைஞர், யுவதிகளுக்கு அழைப்பு விடுக்கிறோம். 

அந்தியச் செலாவணியை கொண்டுவரவும் பங்களிக்குமாறு கோருகிறேன். மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். 25 வருடங்கள் நீடித்த அதிபர், ஆசிரிய சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெருக்கடி நிலையிலும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிரணி விமர்சனங்களை செவிசாய்த்தோம். அவற்றில் சில நியாயமானவை. நியாயமானவற்றை ஏற்று திருத்த நாம் தயாராக இருக்கிறோம். 

அரசியலமைப்பிற்கு நகல் சட்டம் தயாரிக்கப்படுகிறது. அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது ஆராய்வோம். நாம் எதனையும் ரகசியாக மறைத்து செய்ய மாட்டோம் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment