'ஆர்ப்பாட்டப் பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர் மீது குண்டுத் தாக்குதல் நடாத்த திட்டம்' : கைதானவரின் விளக்கமறியல் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, November 25, 2021

'ஆர்ப்பாட்டப் பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர் மீது குண்டுத் தாக்குதல் நடாத்த திட்டம்' : கைதானவரின் விளக்கமறியல் நீடிப்பு

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பில் கடந்த 16 ஆம் திகதி நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீது குண்டுத் தாக்குதல் நடாத்தப்படும் என தகவல் வழங்கியதாக கூறப்படும் நபரின் விளக்கமறியல் காலம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

ஜோசப்பிள்ளை எனும் குறித்த நபரின் விளக்கமறியல் காலத்தை எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி வரை நீடித்து நேற்று கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சி ராகல உத்தரவிட்டார்.

கடந்த 9 ஆம் திகதி, சஜித் பிரேமதாஸவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி, கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை செய்திருந்தார்.

அதில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்துக்கு வந்துள்ள நபர் ஒருவர் அங்கு வாயிலில் இருந்த நபரிடம் எழுதப்பட்ட ஒரு கடதாசியை கொடுத்து விட்டு சென்றுள்ளதாகவும், அதில் நவம்பர் 16 ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் இடையே, சஜித் பிரேமதாஸ மீது குண்டுத் தாக்குதல் நடாத்தப்படும் என எழுதப்பட்டிருந்ததாகவும் அவர் முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து இந்த முறைப்பாடு மீது விசாரணை செய்யும் பொறுப்பு பொலிஸ்மா அதிபரால் சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டது. அந்த பிரிவின் உதவிப் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சார் நெவில் சில்வாவின் கீழ் சிறப்பு விசாரணைகள் ஆரம்ப்பிக்கப்பட்டன.

இந்நிலையில் கையளிக்கப்பட்ட கடதாசியில், மேலதிக தகவல்களுக்கு எனக்கூறி பஸ்ஸொன்றின் இலக்கம் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அதனூடாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபரான, அந்த கடதாசியை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு சென்ற நபரை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து பல்வேறு விடயங்கள் எழுதப்பட்ட சிறு சிறு கடதாசிகள் பல பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை விளக்கமறியலில் வைத்த நீதிவான், அவரது மனநல மருத்துவ அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தார்.

எனினும் நேற்று (24) அவ்வறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்நிலையிலேயே சந்தேக நபரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டது.

No comments:

Post a Comment