ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்கள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி வெளியீடு - News View

Breaking

Wednesday, November 24, 2021

ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்கள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி வெளியீடு

ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்கள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம் தொடர்பில் வழிகாட்டல்கள் அடங்கிய புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிப்பட்டுள்ளது. அதற்கமை அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள வழிகாட்டல்கள் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய இனிவரும் காலங்களில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனத்தின் போது குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டல்கள் பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ள விடயங்களாவன
உயர் நீதிமன்றத்தின் சட்டத்தரணியாக, சட்டத் தொழிற்துறையில் அதி சிறந்த நிலையை அடைந்துள்ளவராகவும், உயர்ந்த தரத்திலான நடத்தைகளையும் தொழில்சார் நேர்மையை பேணுபவராகவும் இருக்க வேண்டும். 

அரசியலமைப்பை மீறாத, சட்டவாட்சியை அல்லது நீதிமன்றத்தின் சுயாதீனத்தை சீர்குலைக்கும் அல்லது முடக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபட்டிராதவராக இருக்க வேண்டும்.

ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமனம் பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு முன்னர் குறைந்தபட்சம் 5 வருட காலத்தில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் வரி செலுத்துனரொருவராக பதிவு செய்யப்பட்டுள்ள நபரொருவர் தவிர்ந்த வேறு எவரும் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்படலாகாது.

ஜனாதிபதி சட்டத்தரணி நியமனமானது ஆண்டொன்றிற்கு அதிக பட்சம் ஒரு குழு என்றவாறு மட்டுப்படுத்தப்படல் வேண்டும். ஆண்டொன்றிற்கு நியமிக்கப்படும் ஜனாதிபதி சட்டத்தரணிகளின் எண்ணிக்கை பத்திற்கு மேற்படலாகாது. இந்த நியமனமானது ஒரு உரிமையாகக் கொள்ளப்பட மாட்டாது.

பதவி வழி அடிப்படையில் அரச சட்ட அதிகாரிகளை ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கும் போது இவ்வழிகாட்டி நெறிகள் ஏற்புடையதாகாது. உறுதிப்படுத்தல் நடைமுறையொன்றின் பின்னர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நபர்கள் தொடர்பில் ஜனாதிபதியினால், பிரதம நீதியரசரினதும் சட்டமா அதிபரினதும் அபிப்பராயத்தினை நாட முடியும்.

விண்ணப்பதாரரால் நேரடியாக அல்லது மறைமுகமாக மூன்றாம் தரப்பினர் மூலம் குறித்த விண்ணப்ப பத்திரம் தொடர்பாக அல்லது ஜனாதிபதி சட்டத்தரணியொருவராக நியமித்தல் தொடர்பாக செலுத்தப்படும் அழுத்தங்கள் தகைமையாகக் கருதப்படும்.

எவரேனுமொரு விண்ணப்பதாரியினால் தமது விண்ணப்பபடிவத்தின் மூலம் தவறான தகவல்கள் வழங்குதல், போலியான ஆவணங்கள் சமர்ப்பித்தல், காரணங்கனை மறைத்தல் என்பன இடம்பெற்றிருந்தால் அந்த விண்ணப்பம் மறுக்கப்பட்டதாகக் கருதப்படும்.

நியமனம் பெறுபவர்களின் பெயர்கள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட வேண்டும் என்பதோடு, ஜனாதிபதி செயலக வலைத்தளத்திலும் பதிவேற்றப்படல் வேண்டும். குறிப்பிட்ட திகதிக்கு பின்னர் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

No comments:

Post a Comment