இலங்கைக்கு உணரச் செய்யக்கூடிய வகையில் சர்வதேச சமூகம் அதன் அணுகுமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் - உலகத் தமிழர் பேரவை - News View

Breaking

Wednesday, November 3, 2021

இலங்கைக்கு உணரச் செய்யக்கூடிய வகையில் சர்வதேச சமூகம் அதன் அணுகுமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் - உலகத் தமிழர் பேரவை

(நா.தனுஜா)

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் உள்ளிட்ட விடயங்களில் இலங்கை தொடர்ந்தும் எதிர்மறையான விதத்திலேயே செயற்படுமானால், அதற்கான மிக மோசமான விலையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை இலங்கைக்கு உணரச் செய்யக்கூடிய வகையில் சர்வதேச சமூகம் அதன் அணுகுமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

'ஒரே நாடு, ஒரே சட்டம்' கொள்கை வரைபைத் தயாரிப்பதற்கென பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் தலைமையில் கடந்த மாதம் 26 ஆம் திகதி புதிய ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டது.

அச்செயலணிக்கான நியமனங்கள் குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தி வரும் நிலையில், இதுகுறித்து 'இலங்கை மிகவும் மோசமான நிலைக்குத் திரும்புகின்றது.

இலங்கையுடனான தொடர்புநுட்பங்களை சர்வதேச சமூகம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும்' என்ற தலைப்பில் உலகத்தமிழர் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கலகொட அத்தே ஞானசாரதேரரின் தலைமையில் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' தொடர்பான புதிய செயலணி உருவாக்கப்பட்டிருப்பது மிகுந்த கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளது.

எழுமாற்றாகத் தெரிவு செய்யப்பட்ட சில முஸ்லிம் பிரதிநிதிகளுடனும் தமிழ் பிரதிநிதிகள் அறவே இல்லாமலும் இந்தச் செயலணி உருவாக்கப்பட்டிருக்கின்றது. செயலணியை ஸ்தாபிப்பதற்கு முன்னர் சிறுபான்மையின பிரதிநிதிகளுடன் எவ்வித கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்படவில்லை.

இரு முக்கிய விடயங்களில் இலங்கை அரசாங்கம் தோல்வியடைந்திருப்பது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. முதலாவது பல்லினத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவற்றுக்கு மதிப்பளிக்கப்படவில்லை என்பதும் இரண்டாவது குற்றங்களுக்கு எதிரான வழக்குகளிலிருந்து பாதுகாப்பைப் பெற முடியும் என்பதுமேயாகும்.

பாரம்பரிய ஜனநாயக நிர்வாக முறைமைக்குப் பதிலாக, ஜனாபதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் இலங்கை பெருமளவிற்கு ஜனாதிபதி செயலணிகள் ஊடாகவே நிர்வகிக்கப்படுகின்றது.

இந்நிலையில் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கை தொடர்பில் ஆராய்வதுடன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டவரைபைத் தயாரிக்கும் பொறுப்பு ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது சிங்கள பௌத்தர்களின் வாக்குகளை வெற்றிகரமாகத் திரட்டிக் கொள்வதற்கான ஓர் உத்தியாக 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கோஷம் கோட்டாபய ராஜபக்ஷவினால் பயன்படுத்தப்பட்டது.

கடந்த 2020 ஆம் ஆண்டில் முஸ்லிம்களினதும் கத்தோலிக்கர்களினதும் மத ரீதியான நம்பிக்கைக்கு முரணாக, கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைக் கட்டாயமாகத் தகனம் செய்வதற்கான தமது கொள்கைளை நியாயப்படுத்திக் கொள்வதற்காக அரசாங்கம் மீண்டும் இந்தக் கோஷத்தைப் பயன்படுத்தியது.

'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கோஷம் நாட்டின் வெவ்வேறு சமூகங்களின் பல்லின, பல்வேறு மத மற்றும் கலாசார வேறுபாடுகளை வலுகட்டாயமாகப் புறக்கணித்து, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது.

கலகொட அத்தே ஞானசார தேரர் நாட்டில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் மிக மோசமான தேரராவார். அதுமாத்திரமன்றி நீதிமன்றத்தில் அவருக்கெதிராகப் பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் உள்ளிட்ட விடயங்களில் இலங்கை தொடர்ந்தும் எதிர்மறையான விதத்திலேயே செயற்படுமானால், அதற்கான மிக மோசமான விலையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை இலங்கைக்கு உணரச்செய்யக்கூடிய வகையில் சர்வதேச சமூகம் அதன் அணுகுமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment