முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப் பத்திரத்தை வாபஸ் பெறுவதற்கு எதிரான ரிட் மனு : விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? 10 ஆம் திகதி தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 3, 2021

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப் பத்திரத்தை வாபஸ் பெறுவதற்கு எதிரான ரிட் மனு : விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? 10 ஆம் திகதி தீர்மானம்

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக் கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில், கொழும்பு, ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்றில் முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப் பத்திரத்தை வாபஸ் பெற சட்டமா அதிபர் எடுத்துள்ள தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது

இந்த குற்றப் பத்திரத்தை வாபஸ் பெற சட்டமா அதிபர் எடுத்துள்ள தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு நேற்று மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்கு வந்த போதே இந்த விடயம் தெரியவந்தது.

அரசியலமைப்பின் 140 ஆவது அத்தியாயத்துக்கு அமைய தாக்கல் செய்யப்பட்டுள்ள இது குறித்த எழுத்தானை நீதிப் பேராணை மனுவே நேற்று மீள பரிசீலிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக கொழும்பில் வைத்து கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 5 மாணவர்களின் பெற்றோரான, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த சரோஜா கோவிந்தசாமி நாகநாதன், மருதானையைச் சேர்ந்த ஜமால்தீன் ஜெனி பஸ்லீன் ஜெனீபர் வீரசிங்க, டொன் மேர்வின் பிரேமலால் வீரசிங்க, தெமட்டகொடவைச் சேர்ந்த அமீனதுல் ஜிப்ரியா சப்ரீன் ஆகியோர் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்தனர்.

சி.ஏ. ரிட் 424/21 எனும் இலக்கத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த ரிட் மனுவில், பிரதிவாதிகளாக சட்டமா அதிபர் மற்றும் முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிரான குற்றப் பத்திரிகைகளை வாபஸ் பெறுவதற்கான தீர்மானமானது நியாயமற்ற, பாரபட்சமான, சட்டவிரோதமான, சட்டத்திற்குப் புறம்பான மற்றும் தேவையற்ற நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் இயற்கை நீதி கோட்பாடுகளுக்கு எதிரான அரசியல் உள்நோக்கம் கொண்ட தீர்மானம் என மனுதாரர்கள் குறிப்பிடுகின்றனர்.

ராஜீவ் நாகநாதன், விஸ்வநாதன் பிரதீப், மொஹமட் டிலான், மொஹமட் சாஜித் உள்ளிட்ட 11 பேர் 2008 செப்டெம்பர் 17 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாட்களில் காணாமல் போயுள்ளதாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.

மற்றுமொரு குற்றச் செயல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இவ்வாறு காணாமல் போனவர்களுக்கும் முன்னாள் கடற்படைத் தளபதி உள்ளிட்ட சில கடற்படையினருக்கும் நேரடித் தொடர்பு இருப்பது தெரியவந்ததாக மனுதாரர்கள் குறிப்பிடுகின்றனர்.

குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் விசாரணைகளின் படி, மேற்படி பாதிக்கப்பட்டவர்கள் உட்பட சிலர் கடத்தப்பட்டு, கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ள “பிட்டு பம்பு” என்ற அறையில் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும் பின்னர் அவர்கள் முன்னாள் கடற்படைத் தளபதியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் விஞ்ஞான பீட வளாகத்தில் அமைந்துள்ள கன்சைட் என்ற சட்டவிரோத நிலத்தடி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டிருந்ததாக மனுதாரர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்னாள் கடற்படைத் தளபதியின் மீதான குற்றப் பத்திரிக்கையை வாபஸ் பெறுவதற்கான சட்டமா அதிபரின் தீர்மானமானது சட்டத்தினால் வழங்கப்பட்ட விருப்புரிமை அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதாகவும், எனவே நீதி நிர்வாகத்தின் நோக்கத்திற்காக இந்த நீதிமன்றத்தின் உத்தரவின் அந்த தீர்மானம் திருத்தப்பட வேண்டியதெனவும் மனுதாரர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையிலேயே பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்பி, 2 ஆம் பிரதிவாதிக்கு எதிரான மேல் நீதிமன்ற குற்ற பகிர்வுப் பத்திரிகையுடன் தொடர்புடைய ஆவணங்களை மேன் முறையீட்டு நீதிமன்ற பொறுப்பில் எடுத்து ஆராய தடைமாற்று நீதிப் பேராணை ஊடாக இடைக்கால உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன் மனுவை விசாரணை செய்து 2 ஆம் பிரதிவாதியான வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப் பகிர்வுப் பத்திரிகையை முன்னோக்கி கொண்டு செல்ல முதல் பிரதிவாதி சட்டமா அதிபருக்கு கட்டளைப் பேராணைஒன்றினை பிறப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment