அடுத்த வருடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது ஐ.தே.க. அதற்கேற்றவாறு தயாராக வேண்டும் : அரசாங்கம் பைத்தியம் பிடித்துள்ளதைப் போன்று செயற்பட்டுக் கொண்டிருக்கிறது - ருவன் விஜேவர்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 23, 2021

அடுத்த வருடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது ஐ.தே.க. அதற்கேற்றவாறு தயாராக வேண்டும் : அரசாங்கம் பைத்தியம் பிடித்துள்ளதைப் போன்று செயற்பட்டுக் கொண்டிருக்கிறது - ருவன் விஜேவர்தன

(எம்.மனோசித்ரா)

ஆளுந்தரப்பின் உறுப்பினர்கள் தாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தொடர்பு கொண்டு கூறுகின்றனர். அடுத்த வருடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது ஐ.தே.க. அதற்கேற்றவாறு தயாராக வேண்டும் என்று கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

தற்போதுள்ள தொலைநோக்கற்ற அராசாங்கத்தினை ஆட்சியை கவிழ்ப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் மாத்திரமின்றி, மக்கள் விடுதலை முன்னணியும் எம்முடன் இணைய வேண்டும். அவ்வாறின்றி இதே நிலைமை தொடருமாயின் நாட்டு மக்கள் பஞ்சத்திற்குள் தள்ளப்படுவர் என்றும் ருவன் விஜேவர்தன சுட்டிக்காட்டினார்.

மொனராகலை மாவட்டத்தில் படல்கும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், விவசாயத்துறை அமைச்சின் செயலாளரினால் தவார ஊட்டச்சத்து பதார்த்தம் இறக்குமதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு கூறி இரசாயன உரத்தையே இறக்குமதி செய்ய முயற்சிக்கின்றனர். விவசாயத்துறை அமைச்சர் ஒன்றைக் கூறுகின்றார். அமைச்சின் செயலாளர் பிரிதொன்றைக் கூறுகின்றார். அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது?

மறுபுறம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சுக்களின் செயலாளர்களை அழைத்து சேதன உரக் கொள்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாதவர்கள் இருந்தால் தாராளமாக வெளியேறலாம் என்று கூறுகின்றார். இது புதுமையானதொரு விடயமாகும். இதே நிலை நீடித்தால் அடுத்த ஆண்டு பஞ்சம் ஏற்படும் என துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர். செயலாளர் வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதாக அறிவிக்கும் போது அமைச்சரும் ஜனாதிபதியும் அவ்வாறில்லை என்று கூறுகின்றனர்.

இந்த நாட்டையும் மக்களையும் பஞ்சத்திற்குள் தள்ளிவிட்ட பின்னரே அரசாங்கம் திரும்பிப் பார்க்கிறது. கிருமி நாசினிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் கூறுகின்றார். தடை செய்யப்பட்ட கிளைபோசெட் கிருமி நாசினியையும் கொள்வனவு செய்ய முயற்சிக்கப்படுகிறது. அரசாங்கம் பைத்தியம் பிடித்துள்ளதைப் போன்று செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை அரசாங்கமே அறியாமலுள்ளது.

டொலர் பற்றாக்குறை காரணமாக அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமலுள்ளது. இறக்குமதி செய்துள்ளவையும் டொலர் இன்மையால் துறைமுகத்தில் தேங்கியுள்ளன. இவை அனைத்தின் பிரதிபலனாக அடுத்த ஆண்டு பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்படும். இதன் காரணமாக அப்பாவி மக்களே பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும்.

அமைச்சர்களே பகிரங்கமாக அரசாங்கத்தை விமர்சிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அமைச்சர்களுக்கே சமையல் எரிவாயுவைக் கொள்வனவு செய்து கொள்ள முடியாதளவிற்கு புதுமையாதொரு நெருக்கடியான சூழல் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது. ஆளுந்தரப்பினர் அமைச்சர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்ந்தும் முன்னோக்கி பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆளுந்தரப்பின் உறுப்பினர்கள் தாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஐ.தே.க. தலைவரை தொடர்பு கொண்டு கூறுகின்றனர். அடுத்த வருடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது எமது கட்சியும் அதற்கேற்றவாறு தயாராக வேண்டும். எமது கட்சியின் கிளைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஐ.தே.க. தலைவர் நிச்சயம் தேவை. காரணம் சர்வதேசத்தின் ஆதரவு அவருக்கு காணப்படுகிறது. நாட்டை பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதற்கான தயார்ப்படுத்தல்கள் அவரிடமே உள்ளன. எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் இதனை எவராலும் மறுக்க முடியாது.

நாடு எதிர்கொண்டுள்ள சவாலை வெற்றி கொள்ளக்கூடிய ஒரேயொரு கட்சி ஐ.தே.க. மாத்திரமேயாகும். தற்போதைய ஆட்சியை மாற்றியமைக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இதில் ஐ.தே.க. மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமல்ல. ஜே.வி.பி.யும் எம்முடன் இணைய வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே தொலைநோக்கற்ற தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியை கவிழ்க்க முடியும்.

நாடு தற்போது முழுமையாக சீரழிந்துள்ளது. அடுத்த ஆண்டாகும் போது நாடு மிஞ்சுமா என்று தெரியாது. இளைஞர்கள் நாட்டிலிருந்து செல்ல கடவுச்சீட்டுக்காக வரிசையில் நிற்கின்றனர். இளம் தலைமுறையினருக்கு இந்த அரசியல் முறையில் நம்பிக்கை இல்லை. அதன் காரணமாகவே அவர்கள் நாட்டை விட்டுச் செல்ல முற்படுகின்றனர்.

ஐ.தே.க.வினால் மேம்படுத்தப்படும் பொருளாதாரத்தை சுதந்திர கட்சி ஆட்சியே அனைத்து சந்தர்ப்பங்களிலும் சரிவடையச் செய்கிறது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் குவிக்கப்பட்டிருந்த கடன் சுமையை குறைத்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று அனைத்தும் சரிவடைந்தது.

எனவே கோட்டாபய ராஜபக்ஷவே சிறந்த தலைவர் என்று அனைவரும் எண்ணினர். எனினும் தற்போது அவரது வேலைத்திட்டங்கள் எவ்வாறானவை என்பதை மக்கள் நன்கு அறிந்து கொண்டுள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment