ஏற்றுமதி வருமானமாக 12 பில்லியன் ரூபாவை பெற்றுக் கொள்ள எதிர்ப்பு : கொரோனாவை பயன்படுத்தி அரசாங்கத்தை கவிழ்க்க முற்சி - செஹான் சேமசிங்க - News View

Breaking

Tuesday, November 23, 2021

ஏற்றுமதி வருமானமாக 12 பில்லியன் ரூபாவை பெற்றுக் கொள்ள எதிர்ப்பு : கொரோனாவை பயன்படுத்தி அரசாங்கத்தை கவிழ்க்க முற்சி - செஹான் சேமசிங்க

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

கொரோனா வைரஸ் சூழ்நிலையிலும் இவ்வருடத்தில் ஏற்றுமதி வருமானமாக 12 பில்லியன் ரூபாவை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்ஹ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற 2022 ஆம் வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் கொரோனா வைரஸ் சூழ்நிலையிலும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அனைத்து தரப்பினரதும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்டங்கள் பிரதேசங்கள் ரீதியான அபிவிருத்தி மேம்பாட்டை கவனத்திற் கொண்டு வழமையான நிதியை விட மேலதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்வதற்கான பல்வேறு திட்டங்கள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கும் எதிர்க்கட்சியினர் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு என்ன வழி முறைகளை கூறப் போகின்றார்கள் என கேட்கின்றோம்.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஒவ்வொரு வேலைத் திட்டங்களுக்காக செலுத்த வேண்டிய பெருமளவு நிதியை எமது அரசாங்கமே செலுத்த நேரிட்டது. அந்த வகையில் 423 பில்லியனை எமது அரசாங்கமே செலுத்தியுள்ளது.

எமது அரசாங்கம் 100 ற்கு 7 வீதமான பொருளாதார வளர்ச்சியுடனேயே நல்லாட்சி அரசாங்கத்திடம் நாட்டை ஒப்படைத்தது. எனினும் அந்த ஆட்சிக் காலத்தில் பின்னர் மீண்டும் 2, 3 பொருளாதார வளர்ச்சியுடனேயே மீண்டும் நாம் நாட்டை பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து மரண எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்றே எதிர்க்கட்சி எதிர்பார்க்கின்றது. கொரோனாவை பயன்படுத்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியுமா என எதிர்பார்க்கின்றார்கள்.

எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடுப்பூசிகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து நாட்டு மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தார். அதனால் அவர்களால் எதையும் செய்ய முடியாமற்போனது.

எனினும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் என மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை அதிகரிக்கச் செய்வதற்கான செயற்பாடுகளையே எதிர்க்கட்சியினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

No comments:

Post a Comment