மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்த எங்களுக்கு உரிமையுண்டு : நினைவுச் சின்னங்களை அழிப்பதால் மக்களின் உணர்வுகளை அழித்து விடலாமென நினைக்க வேண்டாம் - வினோநோகராதலிங்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 20, 2021

மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்த எங்களுக்கு உரிமையுண்டு : நினைவுச் சின்னங்களை அழிப்பதால் மக்களின் உணர்வுகளை அழித்து விடலாமென நினைக்க வேண்டாம் - வினோநோகராதலிங்கம்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

எமது போராட்ட வரலாற்றில் எமது மக்களுக்காக, எமது மண்ணுக்காக, எமது அரசியல் உரிமைக்காக, சுதந்திரத்துக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்த எங்களுக்கு உரிமையுண்டு. அதனை உங்களால் தடைபோட முடியாது. தடைபோடவும் கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான வினோ நோகராதலிங்கம் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (20) இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், மாவீரர் தினம் நாளையிலிருந்து ஆரம்பமாகி 27 ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கிலே மாவீரர்களின் உறவுகளினால் தமிழ் மக்களினால் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இனத்துக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூர தயாராயுள்ள நிலையிலே வடக்கு கிழக்கிலே உள்ள நீதிமன்றங்கள் அந்தந்த மாகாணங்களில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசியத்தின் பால் பற்றுறுதி கொண்டவர்களுக்கும் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கக்கூடாது. ஒன்று கூடக்கூடாது என்ற தடை உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருக்கின்றன.

எங்களின் விடுதலைக்கு தங்களின் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை இங்கு மட்டுமல்ல உலக நாடுகளிலுள்ள தமிழர்களும் மாவீரர் வாரத்தில் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

எனவேதான் இலங்கையில் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க அரசு திட்டமிட்டு இவ்வாறான கொரோனா சுற்றறிக்கைகளைக் காட்டி தடை செய்கின்ற கேவலமான ஒரு ஆட்சியைத்தான் நாம் இங்கு பார்க்கின்றோம்.

ஆர்ப்பாட்டங்களில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற நிலையில் அங்கு எந்த வித கொரோனா தொற்றுக்களும் ஏற்படவில்லை. ஆனால் வடக்கு, கிழக்கில் எமது தியாகிகளுக்கு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த புறப்படுகின்ற வேளையிலே இவ்வாறான தடைகள் போடப்படுகின்றன.

மன்னார் மாவட்டத்திலுள்ள ஆட்காட்டி வெளியில் மாவீரர் துயிலுமில்லத்திலுள்ள பிரதான பொதுச்சுடர் ஏற்றும் பீடம் சில காடையர்களால் காட்டு மிராண்டித்தனமாக உடைத்தெறியப்பட்டுள்ளது.

நினைவுச் சின்னங்களை அழிப்பதன், உடைப்பதன் ஊடாக தமிழ் மக்களின் உணர்வுகளை அழித்து விடலாமென அரசோ பாதுகாப்பு தரப்பினரோ அல்லது அவர்களுக்கு ஆதரவாக செயற்படுகின்ற காட்டிக்கொடுப்போரோ நினைத்தால் அது ஒரு போதும் நடைபெறப்போவதில்லை

நாமும் போராட்ட வழியில் வந்தவர்கள் என்ற வகையில் எமது இயக்கத்தில் 36 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினத்தில் முதல் களப்பலியான எங்களின் தளபதி நிக்லஸுக்கு இந்த சபையிலே அஞ்சலி செலுத்துகின்றேன்.

அதேவேளை நாங்கள் எந்த அமைப்புக்கள், கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எந்த போராட்ட இயக்கங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எமது போராட்ட வரலாற்றில் எமது மக்களுக்காக எமது மண்ணுக்காக எமது அரசியல் உரிமைக்காக சுதந்திரத்துக்காக போராடி உயிர் நீரத்த ஒவ்வொரு போராளிகளை, தமிழ் தேசிய வீரர்களை மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்த எங்களுக்கு உரிமையுண்டு. அதற்கு உங்களால் தடைபோட முடியாது. தடைபோடவும் கூடாது என்றார்.

No comments:

Post a Comment