அருட்தந்தை சிறில் காமினியின் அடிப்படை உரிமை மீறல் மனு திங்களன்று பரிசீலனை : இரண்டாவது தடவையாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவில்லை - News View

About Us

About Us

Breaking

Thursday, November 4, 2021

அருட்தந்தை சிறில் காமினியின் அடிப்படை உரிமை மீறல் மனு திங்களன்று பரிசீலனை : இரண்டாவது தடவையாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவில்லை

(எம்.எப்.எம்.பஸீர்)

சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனு எதிர்வரும் 8 ஆம் திகதி திங்களன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

உயர் நீதிமன்றின் பதிவாளர் ஊடாக மனு மீதான பரிசீலனைக்கான தினம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி மனுவில் பிரதிவாதிகளுக்கு, குறித்ததினம் மனு மீதான பரிசீலனைகள் இடம்பெறுவது தொடர்பில், மனுதாரர் தரப்பினரால் அறிவித்தல் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விஷேட விசாரணைப் பிரிவில், விசாரணைக்கு ஆஜராக அழைக்கப்பட்டிருந்த, உயிர்த்த ஞாயிறு தாக்கல் தொடர்பிலான தேசியப் பேச்சாளர் குழுவின் உறுப்பினர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ நேற்றும் ஆஜராகவில்லை.

நேற்று காலை 9.30 அளவில் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அருட்தந்தை சிறில் காமினிக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் கடந்த மாதம் 23 ஆம் திகதி பேராயர் தலைமையில் நடைபெற்ற இணையத்தள மாநாட்டில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில், அரச புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறையிட்டிருந்தார்.

அந்த முறைப்பாட்டை மையப்படுத்தி, 2007 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1), (2) ஆம் உறுப்புரைகள் பிரகாரமும், தண்டனை சட்டக் கோவையின் அத்தியாயங்களின் கீழும் விசாரணைகள் முன்னெடுக்கப்பபடும் நிலையில், அது குறித்த விசாரணைகளுக்கே குற்றப்புலனாய்வு திணைக்களம் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவுக்கு ஆஜராகுமாறு அறிவித்திருந்தது.

இந்த விசாரணைகளுக்கமைய வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, முதன் முதலாக கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதி முன்னிலையாகுமாறு, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட விசாரணை பிரிவு அறிவித்திருந்தது.

எனினும் அருட்தந்தை சிறில் காமினிக்கு அன்றையதினம் சி.ஐ.டி.யில் ஆஜராகிய 3 அருட் தந்தைகள், அதற்காக ஒருவார கால அவகாசம் கோரியிருந்தார். இதனடிப்படையில் நேற்று மு.ப. 9.30 க்கு வருகை தருமாறு மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களம் அருட்தந்தை சிறில் காமினிக்கு அறிவித்தது.

இந்நிலையிலேயே உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான விசாரணைகள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், தனது சட்டத்தரணியூடாக எழுத்து மூலம் பதில் வழங்கியுள்ள அருட் தந்தை விசாரணைகளுக்கு செல்வதை தவிர்த்துள்ளார்.

இதனால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக முடியாது என அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று முன்தினம் அருட் தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விஷேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித்த திஸாநாயக்க, அத்திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஹான் பிரேமரத்ன, சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ்மா அதிபர் டப்ளியூ. திலகரத்ன, அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் மற்றும் சட்டமா அதிபர் ஆகிய 07 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

சட்டத்தரணிகளான நாமல் கருணாரத்ன மற்றும் உதார முகந்திரம்கே ஆகியோர் ஊடாக அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச மக்களை தௌிவூட்டுவதற்காக 'சூம்' தொழில்நுட்பத்தினூடாக கடந்த 25 ஆம் திகதி நடத்தப்பட்ட கலந்துரையாடல் குறித்து தேசிய உளவுச் சேவை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரால் சுரேஷ் சாலே குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அந்த முறைப்பாட்டுக்கு அமைய தான் வாக்குமூலம் பதிவு செய்ய எனக்கூறி நேற்று 3 ஆம் திகதி சி.ஐ.டி. க்கு அழைக்கப்பட்டுள்ளதாக அருட்தந்தை சிறில் காமினி மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் தம்மை கைது செய்வதற்கான திட்டங்கள் உள்ளதாக அவர் அம்மனுவில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் தனது மனுவை நேற்றையதினம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறும், மனு மீதான விசாரணை நிறைவு பெறும் வரை தாம் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கான உத்தரவை பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பிறப்பிக்குமாறும் அருட்தந்தை சிறில் காமினி தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் எந்த நியாயமான காரணிகளும் இன்றி தன்னை கைது செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறும் நிலையில், இதனூடாக தனது அரசியல் அமைப்பு ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள 12 (1),13(1), 14 (1) அ ஆகிய உறுப்புரைகள் பிரகாரம் உறுதி செய்யப்ப்ட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்மானிக்குமாறு அருட் தந்தை சிறில் காமினி அரசியல் அமைப்பின் 17 மற்றும் 126 ஆம் உறுப்புரைகளுக்கு அமைய தாக்கல் செய்துள்ள குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் கோரியுள்ளார்.

No comments:

Post a Comment